செய்தி

                                      "...நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவராமே என்றார்கள்."                                                                                                                                                       ஆதியாகமம்   26:29

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

       கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே வாழ்த்துகிறேன்.

        இந்த அருமையான நாளிலே கர்த்தருடைய ஆசீர்வாதமான வாழ்க்கையைப் பெற்றுக்கொள்ளும் வழிகளும், அந்த ஆசீர்வாதமான மேன்மைகளையும் இந்தச் செய்தியிலே தியானிக்கலாம்.

          அநேகருடைய வாழ்க்கையைப் பார்க்கும்போது குறைவோடும், பலவிதமான போராட்டத்தோடும் இருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் நம் தேவன் ஈசாக்கை ஆசீர்வதித்தபடியினாலே அவனுடைய வாழ்க்கையானது, அவனுக்கு விரோதமாய் இருந்த மக்கள் மூலமாய், இவன் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்று சொல்லத்தக்கதான ஒரு உன்னத நிலைமையை அடைந்ததைப் பார்த்த மக்கள் அவனிடத்தில் வந்து விரும்பி உடன்படிக்கைச் செய்ததைப் பார்க்கிறோம். ஈசாக்கினுடைய வாழ்க்கையிலே இந்த ஆசீர்வாதமான காரியங்கள் எவ்விதமாய் தோன்றினது? அவனுடைய மேன்மை என்ன? நன்மை என்ன என்று இந்த நாளிலே நாம் ஆராய்வோம்.

                தேவனுடைய சமூகத்திலே தன்னைத் தாழ்த்தி அர்ப்பணித்த, கர்த்தர் சொன்ன இடத்திலே இருப்பதற்கு தன்னை முற்றிலுமாய் ஒப்புக்கொடுத்த ஒரு மனிதன் தான் ஈசாக்கு. பஞ்சம் நிறைந்த காலத்திலே அவன் எகிப்தை நோக்கிச் சென்றான். அவ்விதமாய் செல்லும்போது,தேவன் அவனுக்கு தரிசனமாகி, நான் உனக்குச் சொல்லுகிற இடத்திலே வாசம் பண்ணு என்றுச் சொல்லி அவனை வழிநடத்தினார். அந்த வழிநடத்துதலின் ஆலோசனைக்கு ஈசாக்கு கீழ்ப்படிந்து அவன் கேராரூரில் இருந்து வாசம் பண்ணினான்.

                        கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,இன்று நம்முடைய வாழ்க்கையிலே நாம் இருக்க வேண்டிய இடத்தை நாம் தேடிக்கொண்டிருக்கிறோம். ஏதாவது ஒரு இடம் கிடைத்தால் போதும் என்றுச் சொல்லி நம்மை அறியாதபடியே சில தவறான காரியங்களைச் செய்கிறோம். தேவனுடைய சித்தம் இன்னதென்று அறிந்து செயல்படும்போது மாத்திரமே அதில் முழுமையான ஆசீர்வாதத்தை அடைய முடியும். தேவன் அவனோடு இருந்ததோடு மாத்திரமல்ல, அவர் சொன்னப்படியே செய்வதற்கு முற்றிலுமாய் ஒப்புக்கொடுத்து அவன் கேராரூரிலே குடியிருந்தான் என்று பார்த்தோம். அவன் அவ்விதமாய் இருந்தபொழுது கர்த்தர் அவனை ஆசீர்வதித்து பெருகச் செய்தார். "...கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்." நீதி - 28:25-ன் படி, கர்த்தரை நம்பும்பொழுது, நாம் செழிப்படையத்தக்கதான காலத்தைத் தருகிறார்.

              தேவனுடைய சமூகத்திலே நாம் ஆசீர்வாதங்களைப் பெற வேண்டுமானால் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து அவருடைய சித்தத்திற்குச் செவிகொடுத்து அதன்படிச் செய்ய நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும். அநேக நேரங்களிலே  நம்முடைய சித்தத்தைக் கர்த்தர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் நம்முடைய வாழ்க்கையிலே மெய்யான ஆசீர்வாதம் அடைய வேண்டுமானால், ஈசாக்கைப்போல கர்த்தருக்கு கீழ்ப்படிகிற உள்ளம் , அவருடைய நடத்துதலுக்கு அர்ப்பணிக்கிற உள்ளம் நமக்குள் இருக்கவேண்டும். இவ்விதமாய் அவன் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்தபடியினாலே தேவன் அவனை அவனுடடைய கையின் பிரயாசயங்களை ஆசீர்வதித்தார். அநேகருடைய வாழ்க்கையிலே கையின் பிரயாசங்கள் ஆசீர்வாதமாய் இராதபடியினாலே நஷ்டங்களை அடைகிறார்கள், தோல்விகளை அடைகிறார்கள். துக்கம் நிறைந்தவர்களாய் ஏன் இந்த வாழ்க்கை என்ற தவறான முடிவுக்கு வந்து விடுகிறார்கள்.

                         இந்த வார்த்தைகளை வாசிக்கிற அருமையான சகோதரனே/சகோதரியே, கர்த்தர் இந்த நாளிலே உன்னை ஆசீர்வாதமான பாதையிலே நடத்த வேண்டும் என்று விரும்புகிறார். அவருடைய சித்தத்திற்கும், திட்டத்திற்கும், அவருடைய வார்த்தைக்கும் கீழ்ப்படியும்போது, நீ கையிட்டுச் செய்யும் காரியங்களை அவர் ஆசீர்வதிக்கிறவராக இருக்கிறார்.

1. கர்த்தருடைய ஆசீர்வாதம் வரும்போது

1. வேதனையைக் கூட்டமாட்டார்.

   "கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்." நீதி 10:22

                      கர்த்தர் ஒருபோதும் வேதனையைக் கூட்டாத ஆசீர்வாதத்தை அருளுகிற தேவன். சிலர் இணைந்து தொழிலைச் செய்வார்கள். சிலர் வியாபாரங்களைச் செய்வார்கள். அதில் ஆசீர்வாதம் பெருகும்போது பிரிவினைகளும், போராட்டங்களும் உண்டாகிறது. நஷ்டமடைந்தாலும் பிரிவினைகளும், போராட்டங்களும் உண்டாகிறது. அதைப்போல செழிப்படையும்போது, இலாபகரமான காரியங்கள் நடைபெறும்போது, எவ்விதத்திலாவது அவரை இந்தத் தொழிலை விட்டு விலக்கி விடலாம், அவருக்கு ஏன் நாம் இந்த இலாபத்தை கொடுக்கவேண்டும் என்ற எண்ணங்கள் உண்டாகிறது. ஆனால் தேவனோ அப்படி அல்ல, அவருடைய வார்தைக்குச் செவிகொடுத்து, கீழ்ப்படிந்து செய்யும் போது ஆசீர்வாதத்தை அருளுகிற தேவன், அந்த ஆசீர்வாதத்தோடு வேதனையைக் கூட்டுகிற தேவன் அல்ல. அவனை எவ்விதமாய் ஆசீர்வதித்தார்? ‘ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்அவன் ஐசுவரியவானாகிவரவர விருத்தியடைந்துமகா பெரியவனானான்.' ஆதி.26:12.13 - ல் பார்க்கிறோம். காரணம் என்னவென்றால் அவனுடைய கையின் பிரயாசங்களை ஆசீர்வதித்த படியினாலே அந்தத் தேசத்திலே விதை விதைத்த அவனுடைய காரியம் 100 மடங்காகப் பெருகிற்று.

            நம்மை ஆசீர்வதிக்கிற தேவன் கொஞ்சமாய் அல்ல, நிறைவாய் நம்மை ஆசீர்வதித்து, நாம் இருக்கிற இடத்திலே நம்மைப் பெரியவராய் மாற்றுகிற தேவன். நீ குறைவோடு அல்ல, கண்ணீரோடு அல்ல, கவலையோடு அல்ல,கலக்கத்தோடு அல்ல, களிகூறுதலோடு வாழும்படி ஆசீர்வதிக்கிற தேவன் அவர். அநேகருடைய வாழ்க்கையிலுள்ள குறைவினாலே இனி நான் என்ன செய்வது, என் தேவைகளை எப்படி சந்திப்பது? யாரிடம் கடன் வாங்குவது என்ற எண்ணங்களுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிற மக்களாய் இருக்கிறார்கள்.

               அன்பின் சகோதரனே, சகோதரியே, உன்னுடைய வாழ்க்கையிலே கர்த்தரைத் தேடும்போது ஒரு குறைவும் ஏற்படாது. அவரைத் தேடும்போது குறைவில்லாத வாழ்க்கையைத் தருகிற தேவன். இந்த ஈசாக்கு கர்த்தருடைய வார்த்தைக்கு செவிகொடுத்தபடியினாலே கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார். அவன் 100 மடங்கு ஆசீர்வதிக்கப்பட்டு அந்த ஸ்தலத்திலே பெரியவனாக மாறினான். அவனுக்கு பலவிதமான வேலையாட்கள் இருந்தார்கள். அவனுடைய எல்லைகள் முழுதும் செழிப்பும், சிறப்புமாய் மாறினது. அபிமெலேக்கு அவனுடைய செழிப்பைப் பார்த்த பொழுது, நீ என்னைவிட பலத்தவனாய் மாறிவிட்டடாய், தேசத்தில் இருந்த இராஜாவைக் காட்டிலும், அவன் பலத்தவனாய் மாறிவிட்டதைக் கண்டான்.இன்றைக்கு கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கும்போது, நீங்கள் வர வர விருத்தியடைந்து ஐசுவரியவான்களாய் மாறுகிற பெரிய பாக்கியம் உண்டாகும். கர்த்தர் அருளுகிற ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளுகிற சுதந்தரவாளிகளாக இருக்க வேண்டும்.

2. அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதித்து வியாதியை விலக்குவார்.

  " உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார்வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன் ."          யாத். 23:25

         அவர் அப்பத்தையும், தண்ணீரையும் ஆசீர்வதிக்கும்போது, உன்னுடைய எல்லைகளிலே வியாதிகள் நீங்கின வாழ்க்கை. ஒரு தேவ ஊழியருடைய ஜெபத்தின் மூலமாய் தேவன், அவர் சென்று சாப்பிட்ட அந்த வீட்டின் அப்பத்தையும், தண்ணீரையும் ஆசீர்வதித்ததை நான் பார்த்திருக்கிறேன். அந்த ஊழியருடைய ஜெபமானது அந்த வீட்டாரை கிறிஸ்துவுக்குள் நடத்தினது. ஒரு குடும்பத்தினர் புர மதஸ்தர்களாக இருந்தார்கள். அந்த தேசத்திலே தமிழ் மொழியைக் கேட்க முடியாத ஒரு நிலைமை. ஆகவே இந்தியாவிலே தமிழ் நாட்டிலிருந்து வந்த அந்த ஊழியரின் தமிழ் மொழியைக் கேட்போம் என்றுச் சொல்லி பெற்றோர் அவரை விரும்பி விருந்துக்கு அழைத்தார்கள். ஏதோ நான்கு பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்த அந்த குடும்பத்தார்க்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த ஊழியரோ 10 பேரோடு சாப்பிடச் சென்றுவிட்டார். ஆகவே அந்தக் குடும்பத்தார்க்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நமக்கு இருக்கும் ஆகாரத்தையும் இவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தார்கள். வந்த ஊழியக்காரர் ஆகாரத்திற்காக ஜெபித்தார். அந்த ஜெபத்தைக் கேட்டு அந்த வீட்டினுடைய அப்பத்தையும் தண்ணீரையும் கர்த்தர் ஆசீர்வதித்தார். அதினிமித்தமாய் ஆகாரம் பெருகிவிட்டபடியினாலே அவர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள். ஆகாரம் வந்தவர்களுக்கு போதுமானதாய் இருந்ததோடு மீதி இருந்தபடியினாலே அந்த வீட்டாரும் அந்த ஆகாரத்தை உண்டார்கள். அதோடு மாத்திரமல்ல அது தொடர்ந்து 3 நாட்களுக்கு குறைவுபடாது இருந்ததினாலே இவ்விதமாய் ஆசீர்வதிக்கிற தேவனை தங்கள் தெய்வமாக ஏற்றுக்கொண்டார்கள்.

              அருமையான சகோதரனே/சகோதரியே, கர்த்தரைச் செவிக்கும்போது, அப்பமும் தண்ணீரும் என்றும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும், அதின் மேன்மை உன் எல்லைகளில் உள்ள எல்லா வியாதிகளையும் நீக்குகிறது. 

3. பொருளாதாரத்தை செழிக்கச் செய்வார்.

  "உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால்நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய்நீயோ கடன் வாங்குவதில்லைநீ அநேகம் ஜாதிகளை ஆளுவாய்உன்னையோ அவர்கள் ஆளுவதில்லை."                  உபாகமம்   15:6

               கர்த்தருடைய வழியிலே நடந்து அவருடைய வாக்குத்தத்தத்தை நாம் சுதந்தரிக்கும்போது, அவர் நம்முடைய ஆசீர்வாதத்தைப் பெருகச் செய்கிறார். அந்த ஆசீர்வாதமானது அவர் சொன்னபடி நமக்கு அருளப்படும்போது, நம்முடைய பொருளாதாரத்திலே ஒரு செழிப்பை நாம் காணமுடியும். இன்று கடன் வாங்குகிற காரியமானது எளிதான ஒரு செயலாய் மாறிவிட்டது. அத்துடன் கடனை வாங்கி இதைச் செய்யலாம், அதைச் செய்யலாம்,இதை வாங்கலாம், அதை விற்கலாம், என்ற எண்ணங்கள் பெருகுவதைப் பார்க்கிறோம்.

             நான் ஆசிரியராய்ப் பணியாற்றிய காலத்தில் செல்வமானது சிறப்பாய் இருக்கவேண்டும், ஒரு குறைவில்லாத நிறைந்த வாழ்க்கை இருக்க வேண்டும் என்று உள்ளத்தில் தவறான எண்ணம் கொண்டேன். நானும் என் மனைவியும் ஆசிரியர்களாய் பணியாற்றி, என் தகப்பனாருடைய வீட்டிலே வசித்து வந்தோம். 3 சிறிய பிள்ளைகள்தான். ஆனால் தவறான எண்ணத்தினாலே என் வாழ்க்கையிலே கடன் வாங்கித் தொழிலை ஆரம்பித்தேன். விக்டரி ஸ்போர்ட்ஸ்  என்று திருச்சியிலே பலர் அனுதினமும் வந்து பலவிதமான பொருட்களை வாங்குகிற கடைகள் நிறைந்த முக்கியமான ஒரு வீதியிலே கடையை வைத்தேன். அந்த sports கடையின் மூலமாய் சம்பாத்தியம் செய்யலாம் என்று ஆரம்பித்தேன். கர்த்தர் அந்தக் காரியத்தை அங்கீகரித்தாரா இல்லையா என்று தெரியாது. ஆனால் இதினிமித்தமாக ஒவ்வொரு மாதமும் கடன் வாங்குகிறவனாய் இருந்தேன். ஒவ்வொரு வாரமும், பின் ஒவ்வொரு தினமும் கடன் வாங்குகிறவனாய் மாறினேன். கடன் தொல்லையில் சிக்கின மனிதனாய் மாறினேன்.

                  கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கர்த்தருடைய ஆசீவாதம் நமக்குள் வரும்போது தான் இந்த பொருளாதாரத்தில் உள்ள எல்லா விதமான தடைகள் நீங்கி, ஏற்றத்தாழ்வுகள் நீங்கி மெய்யான சந்தோஷத்தோடு செழிப்போடு வாழ முடியும்.அநேக நேரங்களிலே அந்த நாட்களை எண்ணும்போது கர்த்தர் எவ்வளவு அன்பாய் என்னை நேசித்து,கடன் தொல்லையை நீக்கினார்.கடன் வாங்காத ஒரு ஊழியத்தைக் கொடுத்தார் என்று கர்த்தரைத் துதிப்பதுண்டு. நம்முடைய வாழ்க்கையிலே தேவன் நம்மை அடிமைத்தனத்திற்கு ஒப்புக்கொடாதபடி நம்மை விலக்கி காக்கிற தேவன். '...கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை .’என்று நீதி. 22:7-ல் பார்க்கிறோம். இந்த வார்த்தைகளின் மூலமாக கடன் வாங்காத ஒரு எண்ணத்தை, வாழ்க்கையை என்னில் உருவாக்கின அந்த தேவன், உன்னுடைய வாழ்க்கையிலும் கடன் வாங்காது செழிப்படையத்தக்கதான வாழ்க்கையைத் தந்து ஆசீர்வதிப்பார். உன்னுடைய வாழ்க்கையிலும் கடன் வாங்காது செழிப்படையத்தக்கதான வாழ்க்கையைத் தந்து ஆசீர்வதிப்பார்.

                       ஈசாக்கினுடைய வாழ்க்கையிலே கர்த்தர் ஆசீர்வதித்தப் படியினாலே, அவனுடைய வாழ்க்கை மற்றவர்களுக்கு மத்தியிலே மேன்மையாய் மாறினது மாத்திரமல்ல பெலிஸ்தர் அவன்பேரில் பொறாமைக் கொண்டனர். இதை 'அவனுக்கு ஆட்டு மந்தையும்மாட்டுமந்தையும்அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினாலே பெலிஸ்தர் அவன் பேரில் பொறாமைக் கொண்டுஆதி 26:14 -ல் பார்க்கிறோம். அதினிமித்தமாய் அவர்கள் இருந்த இடமாகிய கேராரூரிலிருந்து துரத்தப்பட்டார்கள். இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலும் ஆசீர்வதிக்கப்படுகிற மக்களாய் இருக்கிறோம். இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் என்று பார்க்கிறோம். இவ்விதமாய் நம்மை ஆசீர்வதிக்கிற தேவன் இன்றைக்கு ஜீவிக்கிறவராய் இருக்கிறார். இந்த அன்பு நிறைந்த தேவன் ஈசாக்கை ஆசீர்வதித்தது போல நம்மையும் ஆசீர்வதிப்பார். அவருடைய சித்தத்தை அறிந்து அவருடைய திட்டத்தின்படி செய்வதற்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்போது அவருடைய ஆசீர்வாதமானது நிச்சயமாய் பெருகிவிடும்.

                         

  4. கர்த்தருக்குப் பயப்படும் பயம் தந்து ஆயுளை நீடிக்கச் செய்கிறார்.

   “இதோகர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப் படுவான்கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்." சங்கீதம் 128:4,5.

            மேலும் அவன் கர்த்தருக்குப் பயந்தவனாய்க் காணப்பட்டான். கர்த்தருக்குப் பயப்படும்போது மாத்திரமே நாம் கீழ்ப்படிய முடியும். கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுகிறான், என்பது மாத்திரமல்ல, அவனுடைய வாழ்க்கையிலே அவன் ஆயுளை நீடிக்கச் செய்கிறார். 6-ம் வாக்கியத்திலே கர்த்தர்  உனக்கு சமாதானம் தருவதோடு நீடித்த நாட்களைத் தந்து உன்னைச் சிறப்படையச் செய்கிற தேவனாய் இருக்கிறார். நம்முடைய தேவன் இவ்விதமான ஆசீர்வாதங்களை அன்று ஈசாக்குக்கு அருளினதைப் பார்க்கிறோம்.

            ஈசாக்கு இந்த ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு எவ்விதத்தில் தகுதியுடையவனாய் தேவ சமூகத்திலே காணப்பட்டான் எனப் பார்ப்போம்.

11. ஆசீர்வாதம் பெற ஈசாக்கு என்ன செய்தான் ?

 1. கீழ்ப்படிகிறவனாய் காணப்பட்டான்.

"கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகிநீ எகிப்துக்குப் போகாமல்நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு." ஆதியாகமம் 26:2

               கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து கர்த்தர் காண்பித்த இடத்திலே வாசம் பண்ணினான். அநேக நேரங்களில் நம்முடைய வாழ்க்கையிலே நெருக்கத்தின் நிமித்தமாக, வாழ்வில் உண்டாகிற குறைவின் நிமித்தமாக, நான் நினைத்த இடத்திற்கு சென்றால் செழிப்படைவோம், சிறப்படைவோம் என்ற எண்ணத்தில் வாழ்கிறோம். வெளி நாட்டிற்குச் சென்றால் தனக்கு பெரிய செல்வத்தைத் திரட்டிவிடலாம் என்ற எண்ணத்தோடு வாழ்கிறவர்கள் உண்டு. சிலருடைய பிள்ளைகள் வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டும் என்று விரும்பி அதிகமாக கடன் தொகையை வாங்கி, அந்தப் பயணத்தை வாய்க்கச் செய்கிறார்கள். இவ்விதமாய் செய்கிற மக்களுடைய குடும்பத்திலே கஷ்டப்படுகிறதைப்  பார்த்திருக்கிறேன்.

              ஒரு முறை நான் குவைத் பகுதியிலே ஊழியங்களைச் செய்யும்போது, ஒரு சகோதரரிடம் உங்களுக்கு எவ்வளவு ஊதியம் என்றுக் கேட்டேன். அவர் நன்றாகச் தச்சு வேலையைச் செய்யக்கூடிய ஒரு மனிதன்.எனக்கு மாதம் 50 குவைத் டாலர் என்றுச் சொன்னார். 50 டாலரா என்று  கேட்டேன். இதை வைத்து எப்படிகாலத்தை ஓட்டுகிறீர்கள் என்று கேட்டவுடன், dormitory -ல் தங்குகிறோம். எங்களுக்கு சாப்பாடு இலவசமாக கொடுக்கப்படுகிறது. ஆகவே நான் குறைந்தது 25 குவைத் டாலரை மிச்சப்படுத்தி வருகிறேன் என்கிறார். உங்கள் கடன் தொகை எவ்வளவு என்று கேட்டேன். அது கட்டி முடிப்பதற்கு 3ஆண்டுகள் இப்படியாக வாழ்ந்தால் அது சரியாய் இருக்கும் என்று கூறினார். 3 ஆண்டுகளுக்கு அவர் தன்னை ஒடுக்கி, தாழ்த்தி,  தன் செலவுகளைக் கட்டுப்படுத்தி வாழ்ந்தால்தான் கடன் தொல்லைகள் நீங்க முடியும். ஆனால் கர்த்தருடைய சமூகத்திலே அவர் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து நாம் எந்த இடத்தில வாசம் பண்ணுகிறோமோ அந்த இடத்திலே அவர் நம்மை 100 மடங்கு ஆசீர்வதித்து செழிப்படையச் செய்வார்.

  2. விட்டுக்கொடுக்கிற மனிதனாய் இருந்தான்.

   "கேராரூர் மேய்ப்பர் இந்தத் தண்ணீர் தங்களுடையது என்று சொல்லிஈசாக்குடைய மேய்ப்பருடனே வாக்குவாதம் பண்ணினார்கள்அவர்கள் தன்னோடே வாக்குவாதம் பண்ணினபடியால்அந்தத் துரவுக்கு ஏசேக்கு என்று பேரிட்டான்வேறொரு துரவை வெட்டினார்கள்அதைக்குறித்தும் வாக்குவாதம் பண்ணினார்கள்..." ஆதி . 26:20, 21

            அவனுடைய விட்டுக்கொடுக்கின்ற தன்மை தேவனுடைய சமூகத்திலே மேன்மையான காரியங்களைக் கொண்டு வந்தது. ஈசாக்கு ஆசீர்வதிக்கப்பட்டதற்குக் காரணம் எது என்று அந்த கேராரூரின் மக்கள் அறிந்து, அவன் தகப்பனாகிய ஆபிரகாம் வெட்டின நீர்த்துரவுகளை எல்லாம் தூர்த்து மண்ணினால் நிரப்பிப் போட்டார்கள். அவனுடைய செழிப்புக்கு அடிப்படையாய் இருந்த நீர்வளத்தை அவர்கள் கெடுத்துப் போட்டார்கள். அவன் உயர்த்திருக்கிறானே, பெரியவனாகியிருக்கிறானே என்று கண்டு பொறாமையினிமித்தமாய் தவறான காரியத்தைச் செய்தார்கள்.

                  இன்றும் அவ்விதமான காரியங்களைச் செய்கிறார்கள். ஒரு மனிதனுடைய வியாபாரம், தொழில் அல்லது ஒரு மனிதனுடைய வீடு ஆசீர்வாதமாய் நிறையும்போது, அவன் மீது பொறாமைக் கொண்டு அவர்களுடைய ஆசீர்வாதத்திற்கு காரணம் எதுவோ அதை முழுமையாய் அழித்துப் போடுகிற மக்களாய் இருக்கிறார்கள். அதற்கு அடிப்படையாய் இருக்கக்கூடிய சரீர  சுகத்தைக் கெடுக்கிற மக்களும் உண்டு. அவனுடைய எல்லைகள் பாழாய்ப் போகவேண்டும் என்ற முகாந்தரத்தோடு அநேகர் செயல்படுகிறதைப் பார்க்க முடிகிறது.

                      கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவராமே என்று சொல்லுகிற பாக்கியத்தை ஈசாக்கு பெறுவதற்கு முக்கியமான ஒரு காரியம், தன்  தகப்பனாருடைய துரவை, தனக்கு என்று எடுத்துக்கொண்ட மக்களோடு வாதாடாதபடி விட்டுக்கொடுத்தான். கர்த்தர் அவனுக்கு ஒரு இடத்தை உண்டாக்கினார். அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம் பண்ணவில்லை. '...நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான்.' என்று ஆதி.26:22 - ல்  பார்க்கிறோம்.

                 இந்த வார்த்தைகளை வாசிக்கிற சகோதரனே சகோதரியே, நீ வசிப்பதற்கு இடமில்லை என்று கலங்குகிறாயா? என் பிள்ளைகளோடு நான் வாழ்வதற்கு ஒரு வீடு இல்லையே என்று ஏக்கத்தோடு இருக்கிறாயா? இந்த ஈசாக்கைப் போல கீழ்ப்படிந்து விட்டுக்கொடுக்கிற நற்பண்போடு நீ வாழும்போது, நிச்சயமாக கர்த்தர் உங்கள் வாழ்க்கையிலே ஒரு இடத்தைக் கொடுத்து நீங்கள் ஆசீர்வாதமாயிருக்க உதவி செய்கிற தேவனாயிருக்கிறார்.

    3. ஈசாக்கு ஜெபம் பண்ணுகிறவனாயிருந்தான்.

 “மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்கர்த்தர் அவன்  வேண்டுதலைக் கேட்டருளினார்அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள்." ஆதியாகமம் 25:21

            அவளுடைய கர்ப்பதிலே இரட்டிப்பான ஆசீர்வாதத்தைத் தந்தார். இன்று குறைவுகளைக் குறித்து குற்றப்படுத்துகிற, பெரிதாக்குகிற மக்கள் ஏராளம் உண்டு. என் மனைவி இப்படிப்பட்ட குணாதிசயம் உடையவள் என்று அவள் குறைவை பறைசாற்றுகிற மக்கள் உண்டு. மற்றவர்கள் தன்னைப் புகழ வேண்டும், தன் மனைவியை பரிகசிக்க வேண்டும் என்று எண்ணி தன் மனைவியை மட்டப்படுத்துகிற மக்கள் உண்டு. இழிவான வார்த்தைகளைச் சொல்லுகிற மக்கள் உண்டு. ஏராளமான பெற்றோர்கள் சில சமயத்திலே பிள்ளகளைப் பார்த்து, முட்டாளே, கழுதை,நாய் என்றும் திட்டுகிறதைப் பார்க்கமுடிகிறது.ஆனால் ஈசாக்கு தன் மனைவியின் குறைவைக் குறித்து கவலைப்படாதபடி,அதைகர்த்தரிடத்திலேதெரிவிக்கிறவனாயிருந்தான். அவன் சந்ததி பெறுக வேண்டும் என்று மன்றாடுகிறவனாய் காணப்பட்டான். மலடியாயிருந்த மனைவிக்காக அவன் ஜெபிக்கிற ஒரு ஜெப வீரனாய் இருந்தான். கர்த்தர் இரட்டிப்பான ஆசீர்வாதத்தை அவனுக்கு அருளி ஆசீர்வதித்தார்.

             இன்று அநேகருடைய வாழ்க்கையிலே குறைவு நீங்கி நல்வாழ்க்கை உருவாவதற்கு ஜெபம் இல்லை. படிக்கிற பிள்ளைகளுக்கு ஞானம் தேவை. யாக்கோபு  1:5-ல், '...ஒருவன் ஞானத்தில்குறைவுள்ளவனாயிருந்தால்யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாத வருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன்...' என்று பார்க்கிறோம். கேளுங்கள் கொடுக்கப்படும் என்று சொன்ன தேவன், இன்று நமது குறைவை நீக்கி நிறைவைக் கொடுப்பதற்கு உண்மையுள்ளவராயிருக்கிறார். ஒரு வேளை குழந்தை இல்லாத குறைவாய் இருக்கலாம், ஞானம் இல்லாத குறைவாய் இருக்கலாம், வேலை இல்லாத குறைவாய் இருக்கலாம். வீடு வாசல் இல்லாத குறைவாய் இருக்கலாம்,தொழில் இல்லாதபடி இருக்கலாம். பெலவீனத்தினால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் வேதனையோடு இருக்கலாம். ஆனால் ஒன்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அவர் சமூகத்தில் நாம் ஜெபிக்கும்போதெல்லாம் ஜெபத்தைக் கேட்கிறவராய் இருக்கிறார். 'ஜெபத்தைக் கேட்கிறவரேமாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்.'  என்று சங்கீதம் 65:2-ல் பார்க்கிறோம். நாம் அநேக நேரங்களிலே பல காரியங்களைக் குறித்து ஏன் கவலைப் படுகிறோம்? ஏன் குறைவுபட்டு கலங்குகிறோம் என்றால், நமக்காக யாவையும் செய்து முடிப்பேன் என்று சொன்ன அன்பு நிறைந்த தேவனுடைய வார்த்தைகளைக் ஏற்றுக் கொள்ளாதபடி, அவர் ஐஸ்வர்யசம்பன்னர் என்பதை உணராதபடி, அவர் சமூகத்தை நாடாதபடி, கேளாதபடி, இருப்பதினால் குறைவோடிருக்கிறோம். நாமும்கூட ஜெபவீரர்களாய் மாறும்போது கர்த்தர் இரட்டிப்பான நன்மைகளை, இரட்டிப்பான ஆசீர்வாதத்தைத் தருகிற தேவனாயிருக்கிறார்.

         ஈசாக்கு மாலை நேரங்களிலே தியானிக்கிறவன் என்று ஆதி 24:63-ல் பார்க்கிறோம். வேதத்தை நேசித்து இரவும், பகலும் தியானிக்கும்போது, கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கிற தேவனாயிருக்கிறார். ஆகவே இன்று நாம் வேதத்தை தியானிப்பதோடு அவர் சமூகத்திலே குறைவுடைய காரியங்களுக்காய் ஜெபிக்கிற மக்களாய் மாற வேண்டும். யார் யார் இவ்விதமாய் ஜெபிக்கிறார்க்ளோ, அவர்களுடைய வாழ்க்கையிலே அளவில்லாத ஆசீர்வாதத்தைப் பெருகச் செய்து, தேவன் அவர்களை மகிழ்ச்சியினால் முடிசூட்டுகிறார். ஆகவே இந்த வார்த்தைகளின் மூலமாக நம்முடைய வாழ்க்கையிலே ஜெபிக்கின்ற உணர்வைப் பெருகச் செய்வாராக. தியானிக்கிற எண்ணங்களைப் பெருகச் செய்வாராக .

 4.தகப்பன் மூலமாய் ஏற்பட்ட ஆசீர்வாதங்கள்.

 "அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகிநான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன்பயப்படாதே,
 நான் உன்னோடேகூட இருந்துஎன் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து
உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார்." ஆதி 26:24.

              ஈசாக்கின் வாழ்க்கையிலே தன் தகப்பனாகிய ஆபிரகாம் அவனுக்கு நலமான மேலான ஆசீர்வாதத்தைச் சேர்த்து வைத்திருந்தார். அந்த ஆசீர்வாதம் ஆபிரகாமினுடைய ஊழியத்தினிமித்தமாய் அவனுக்கு கிடைத்தது. இன்று நாம் கர்த்தருக்காய் ஊழியங்களைச் செய்யும்போது, நம்முடைய பிள்ளைகளுக்கு ஆசீர்வாதங்களைச் சேர்த்து வைக்கிறோம். இன்று அநேகருடைய வாழ்க்கையிலே ஊழியங்களைச் செய்வதற்குப் பதிலாக பொய்யான விதங்களிலே தவறான வழிகளிலே தங்கள் ஆதாயத்தைப் பெருக்கிக் கொள்ள விரும்புகிறார்கள். 2 இராஜ.5- ல்   கேயாசியைக் குறித்துப் பார்க்கிறோம். நாகமானின் குஷ்டரோகமாமானது கேயாசியின் குடும்பத்திலே சாபமாக மாறினதைப் பார்க்கிறோம். காரணம் அவனுடைய தவறான நோக்கங்களும் செயல்களும். 

ஆனால் ஆபிரகாமோ தேவனுக்கு உண்மையுள்ளவனாய் இருந்தான்.தேவனுடைய சமூகத்திலே அவர் அழைத்தபோது, அந்த அழைப்பை உண்மையாய் ஏற்று தன் தகப்பனுடைய வீட்டையும், தகப்பனுடைய தேசத்தையும் விட்டு தன் மனைவியோடும், லோத்தோடும் தேவன் சொன்ன இடத்திற்கு அந்த ஊரை விட்டே வெளியே வந்ததைப் பார்க்கிறோம்.

               இன்று நம் வாழ்க்கையிலே அவருடைய அழைப்பை ஏற்றுக் கொள்ளும்போது அவருக்காக வாழ்வதற்கு நம்மை அர்ப்பணிக்கும்போது, நாம் ஆசீர்வதிக்கப்படுகிறவர்களாய் இருக்கிறோம். அதோடு மாத்திரமல்ல அவனோடு வந்த லோத்து செழிப்பினிமித்தமாய் பிரிந்து போகிறான். பிரிந்து போன இடத்திலே அவனுக்கு விரோதமாய் யுத்தம் பண்ணின இராஜா, அவனை சிறைப் பிடித்துச் சென்றான். அவனுடைய குடும்பம் பிள்ளைகளெல்லாம் சிறைப்பிடித்து செல்லப்பட்டார்கள் என்றவுடனே, அவர்களைப் பின்தொடர்ந்து தன் வீட்டிலிருந்த 318 மக்களுக்கும் ஆயுதம் தரிப்பித்து லோத்துவையும், மனைவியையும் பிள்ளைகளையும் மீட்டு வந்தான் என்று பார்க்கிறோம். மீட்பின் ஊழியத்தைச் செய்தான் என்று பார்க்கிறோம். அதோடு மாத்திரமல்ல சோதோம், கொமோராவானது தேவனுடைய பார்வையில் தீங்கான காரியங்களைச் செய்து தேவனுடைய கோபத்திற்கு ஆளானபோது, அதை தேவன் அழிப்பதற்கு திட்டம் கொண்டார். இந்த ஆபிரகாம், லோத்துவுக்காக தேவ சமூகத்திலே மன்றாடின ஜெப வீரன். ஆகவே இவ்விதமாக அழைப்பை ஏற்று விசுவாசத்தோடு எல்லாவிதங்களிலும் மீட்பின் பணியைச் செய்வதோடு அவர் சமூகத்தை நோக்கி மன்றாடுகிறவனாய்  இருந்தபடியினாலே, ஊழியக்காரன் என்று அங்கீகரித்தார். அந்த ஊழியத்தின் பணியை அவர் ஏற்றுக் கொண்டதோடு, அவன் ஆசீர்வாதத்தை அவன் சந்ததிக்கு அருளினார் என்று பார்க்கிறோம்.

                 இந்த வார்த்தைகள் மூலமாக நாம் கர்த்தருக்காக உழைக்கும்போது, கர்த்தருக்காக காரியங்களைச் செய்யும்போது, நம் சந்ததிக்கு வேண்டிய ஆசீர்வாதங்களை சேர்த்து வைக்கிறோம். நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவராமே என்கிற ஆசீர்வாதத்தை நம் குடும்பத்தாருக்கு, சந்ததியாருக்குப் பெற்று வைப்பதற்கு நம்மை முற்றிலுமாய் தாழ்த்துவோம், ஒப்புக்கொடுப்போம்.

 

                  கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  கிறிஸ்துவின் பணியில்,

                                                                                                                                                                                                                                         சகோ.C. எபனேசர் பால்.