கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
அன்பர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்.
இன்று மனிதன் எப்படிப்பட்ட பாதையில் சென்றால் ஆசீர்வாதம், சமாதானம் கிடைக்கும் என்று ஏங்கவும், குழம்பவும் செய்கிறான். தான் செய்கிற காரியங்கள் சரிதானா அல்லது பிரச்சனையாக மாறி கஷ்டங்களும், துன்பங்களும், நஷ்டங்களும் தோன்றுமா? என்று கவலைப்படுகிறான். மனிதர்கள் குறையும் தவறும் நடக்காது காக்கப்பட, பல பரிகாரங்களையும், ஜோசியரையும், குறி சொல்லுகிற மக்களையும் தேடி நாடுகிறார்கள். சில தீர்க்க தரிசனமுடைய மக்களிடமும் சென்று குறி கேட்கிற மக்கள் இன்று ஏராளமாய் பெருகி இருக்கிறார்கள்.
என்னை நடத்தியருளும் என்று தன்னைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து, அந்த வழிநடத்துதலில் மட்டுமே வெற்றியும், ஆசீர்வாதமும், சமாதானமும், சந்தோஷமும் உண்டு என்று அறிந்து தன்னைக் கர்த்தரின் வழிநடத்துதலுக்கு அர்ப்பணிக்கின்ற வார்த்தையைப் பார்க்கிறோம். 'இந்தத் தேவன் என்றென்றைக்க முள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.' சங். 48:14. நமது காரியங்களை மெய்யாகவே மரணபரியந்தம் நடத்துவார்.
ஒருமுறை காலஞ்சென்ற எனது தகப்பனாருடன், என் தகப்பனாருடைய தகப்பனாரின் மரணத்திற்குச் சென்றேன். அச்சமயம் எனது தகப்பனார் வேதாகமக் கல்லூரியில், தேவனின் திருப்பணி செய்வதற்காக பயின்று கொண்டு இருந்தார்கள். மரணம் சம்பவிக்கும் காலத்திற்கு முன்னதாகவே தனது மரணம் இப்படி இருக்கும், அந்நாளில் மழை பெய்யும். இந்தெந்த காரியங்களை இப்படிச் செய்ய வேண்டும் என்று முன்னதாகவே எனது தாத்தா எனது தகப்பனாரிடம் அறிவித்திருந்தார்கள். ஆகவே எனது தகப்பனார் தனது தகப்பனாரின் முடிவைக் குறித்து அதிக ஆச்சரியப்பட்டார்கள். மோசேயை நடத்தியவர், எலியாவை நடத்தியவர், நம்மையும் முடிவு பரியந்தம், மரணபரியந்தம் நடத்துவார். அவரது நடத்துதல் நேர்த்தியாயும், பூரண ஆசீர்வாதமுடைய தாயுமிருக்கும். கர்த்தர் நடத்தும் விதங்களிலுள்ள ஆசீர்வாதங்கள் சமாதானத்தைத் தரும்.
கர்த்தர் நடத்தும் போது கிடைக்கும் ஆசீர்வாதங்கள்
1) கர்த்தர் நடத்தும்போது குறைவிராது "அவர் (கர்த்தர்) அவர்களை வனாந்தரங்களில் நடத்தும்போது, அவர்களுக்குத் தாகவிடாயிருந்ததில்லை...." ஏசாயா 48:21
இஸ்ரவேல் ஜனங்களை, எகிப்தின் அடிமைத் தனத்திலிருந்து தமது ஓங்கிய புயத்தினாலும், வல்லமையினாலும், அற்புதத்தினாலும் மீட்டு, பின் தொடர்ந்த சத்துருக்களை அழித்து, நேர்த்தியாக நடத்தினார். கர்த்தர் தமது ஜனத்தை சிவந்த சமுத்திரத்தின் வனாந்திர வழியாய்ச் சுற்றிப் போகப்பண்ணினார். நாம் ஒரு வேளை ஏன் இந்த வனாந்தரத்திலே தமது ஜனங்களை நடத்தினார் என்று எண்ணலாம். அருமை தேவஜனமே, வனாந்தர வாழ்வை நம்முடைய பிரயோஜனத்திற்காக கட்டளையிட்டார். 'பார்வோன் ஜனங்களைப் போகவிட்ட பின்: ஜனங்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து, எகிப்துக்குத் திரும்புவார்கள் என்று சொல்லி; பெலிஸ்தரின் தேசவழியாய்ப் போவது சமீபமானாலும், தேவன் அவர்களை அந்த வழியாய் நடத்தாமல், சிவந்த சமுத்திரத்தின் வனாந்தரவழியாய் ஜனங்களைச் சுற்றிப் போகப்பண்ணினார். இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து அணியணியாய்ப் புறப்பட்டுப் போனார்கள்.' என்று யாத். 13:17, 18ல் பார்க்கிறோம். 99 ஆடுகளை வனாந்தரத்தில் விட்டுவிட்டு காணாமற்போன ஒரு ஆட்டைத் தேடிய கர்த்தரின் உவமானத்தை லூக். 15:4ல் பார்க்கிறோம். இப்படியாக வனாந்தர வாழ்க்கை அருளப்பட்டாலும், கர்த்தரின் நடத்துதலால் ஒரு குறைவும் காணப்படவில்லை. 'கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கு ஒரு நன்மையுங் குறைவுபடாது' என்ற வாக்கை இன்றும் நமது வாழ்வில் பெற்று வாழ முடியும். கர்த்தர் நம்மை நடத்த அர்ப்பணித்தால் இந்த மேலான பாக்கியம் உண்டு.
ஒருமுறை எனது வாழ்வில் மிகுந்த குறைவுடன் இருந்தேன். அந்த நாளில் ஊழியத்திற்குப் புறப்பட வேண்டும், கையில் பணம் இல்லை. போதுமான உள்ளாடை (பனியன்) இல்லை. புறப்படவேண்டிய அன்று ஒரு வீட்டிற்குச் சென்று ஜெபிக்கவும், அங்கிருந்து பிரயாணத்தைத் தொடரவும் கர்த்தர் வழி நடத்தினார். அந்த வீட்டிற்குச் சென்றேன். ஜெபம் முடிந்த பின்னர், அவ்வீட்டார் அடைந்த ஆசீர்வாதத்தினால் காணிக்கைக் கொடுத்தார்கள். அது அந்நாளின் பிரயாணத்திற்கும், ஊழியத்திற்கும் போதுமானதாய் இருந்தது. அது மாத்திரமல்ல, அந்த வீட்டார் நாங்கள் புதிதாக வாங்கி இருக்கும் இந்த பனியனையும் பெற்றுக்கொள்ளுங்கள் என்றார்கள். அன்றன்றுள்ள ஆகாரத்தைப் பெற்றுக் கொள்ள, ஜெபத்தைக் கற்றுக் கொடுத்த கர்த்தர் இன்றும் ஜீவிக்கிறார். கர்த்தரின் வழி நடத்துதலில் குறைவிராது.
2) கர்த்தர் நடத்தும்போது பிரச்சனைகள் அடங்கியிருக்கும்
"...அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்." சங்கீதம் 23:2
இன்று மனிதன் பலதரப்பட்ட பிரச்சனைகளை நினைத்து, சஞ்சலம் மிகுந்த துக்கத்துடன் காணப்படுகிறான். சிலர் ஏன் இந்த வாழ்வு என்று தங்களையே மாய்த்துக் கொள்ள எண்ணுகிறார்கள். அருமையான சகோதரனே, சகோதரியே இப்படிப்பட்ட எண்ணத்துடன் உனது வாழ்க்கை இருந்து கொண்டு இருக்கிறதா? கலங்க வேண்டாம். உனது பிரச்சனையைத் தீர்க்க வல்லவர் ஒருவர் இருக்கிறார். அவர் தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. இன்றைக்கு உனது மேய்ப்பராக, உன்னை நடத்துபவராக, அவரை உன் வாழ்க்கையில் ஏற்றுக்கொள்வாயானால், உனது பிரச்சனையைத் தீர்ப்பார். உன் சுக வாழ்வு, சமாதான வாழ்வு, சந்தோஷ வாழ்வு, செழிப்பான வாழ்வு மலருவதைக் காணமுடியும்.
நம்முடைய கர்த்தர் கொந்தளிப்புகளை அமர்த்துகிறவர். சீஷர்களுடன் பயணம் செய்த படகு, கடல் கொந்தளிப்பினால் அமிழும் வேளையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அழைத்தனர். தமது மாறாத வல்லமையான வார்த்தையினால் 'இரையாதே' என்று கூறி அடங்கச் செய்தவர், இன்றும் ஜீவிக்கிறார். ஒருமுறை எனது மகனின் வாழ்வில் போராட்டம் வந்தது. கல்லுாரிக்குரிய அட்மிஷன் காரியங்களைச் செய்யாது, ஊழியத்திற்குச் செல்லுகிறீர்களே என்று கேட்டான். உடனே தேவ சமுகத்தை நோக்கினேன். கர்த்தர் என்னை நேர்த்தியாய் நடத்தினார். ஒரு கல்லூரியின் வாசல் தரிசனத்தில் தோன்றியது. காலை 9 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டால்தான் சென்னை விமான நிலையத்தில் இரவு விமானப் பயணத்தை மேற்கொள்ள முடியும். இந்த சூழ்நிலையை நோக்காது, கலங்காது, கர்த்தர் காண்பித்த கல்லுாரிக்குச் சென்றேன். அதன் வாசலில் எனது நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் என்னைக் கல்லுாரி முதல்வரிடம் அழைத்துச் சென்றார். அந்தக் கல்லுாரி முதல்வரும் நான் படித்த கல்லூரியில் படித்தவர். ஹாக்கிக் குழுவில் விளையாடிய வீரர். உடனே எனது மகனுக்கு இடம் கொடுப்பதாக வாக்குக் கொடுத்தார். அக்கல்லூரியில் என் மகன் படிக்கக் கர்த்தர் உதவி செய்தார். கர்த்தருடைய நடத்துதலில் கொந்தளிப்புகள் அடங்கும், பிரச்சனைகள் நீங்கும்.
3) கர்த்தர் நம்மை பயமில்லாதபடி நடத்துவார்
"அவர்கள் பயப்படாதபடிக்கு அவர்களைப் பத்திரமாய் வழி நடத்தினார்..." சங்கீதம் 78:53
நம்முடைய தேவன் பத்திரமாய் நடத்துபவர். இன்று கர்த்தரின் நடத்துதல் இல்லாதபடியால் பலவிதமான விபத்துக்கள், கஷ்டங்கள், கையின் பிரயாசங்களில் நஷ்டங்கள், தோல்விகள் ஏற்படுகிறது. ஆனால் கர்த்தர் நம்மை நடத்தும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போ மானால் கண்மணி போல் பாதுகாப்பார்.
ஒருமுறை இரயில் பிரயாணம் செய்து கொண்டு இருந்த ஒரு சகோதரரைக் கர்த்தர் அந்த இரயிலிருந்து இறங்கச் சொன்னார். கர்த்தரின் வழி நடத்துதலுக்குத் தன்னை ஒப்புக் கொடுத்தார். தனது பயணத்தை ரத்து செய்து விட்டு, சாலை வழியாக தனது பயணத்தைத் தொடர்ந்தார். தான் சென்றடைய வேண்டிய இடத்தை அடைந்த சமயம் ஒரு செய்தி அவரைத் திடுக்கிடப் பண்ணியது. அவர் பிரயாணமாய் வந்த இரயில் ஒரு குண்டு வெடிப்பில் சிக்கியது. அதன் விளைவாக பல நூற்றுக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர். இவர் பிரயாணமாய் வந்த இரயில் பெட்டி அப்படியே ஒன்றும் இல்லாது இருந்ததைக் கண்டார். ஆம் நம் தேவன் நம்மைக் கண்மணிப்போல் காத்து, பத்திரமாய் நடத்துவார்.
4) தனது வழியைக் கற்றுக்கொடுத்து நடத்துவார் "நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்..."
சங்கீதம் 32:8
எந்தக் காரியத்தை எப்படிச் செய்வது என்று நமக்குக் கற்றுக் கொடுத்து வழி நடத்துவார். ஒரு சகோதரி வியாதியாயிருந்த தனது மாமனாருடன் இருந்தார்கள். அவர்களுக்காக ஜெபித்து, ஆறுதலான வார்த்தைகளால் அவர்களைத் தேற்றுவதற்காக வேதத்தை வாசித்துக் கொண்டு இருந்தார்கள். இந்தச் சூழ்நிலையில் வியாதியுடன் இருந்த மாமனார் திடீரென மோசம் அடைந்து, முகத்தின் தசைநாறுகள் இழுக்க ஆரம்பித்தது. கணவரின் சகோதரர் சிறந்த டாக்டர். அவரைச் கூப்பிட தொலைபேசியில் பேசினார். இந்தச் சூழ்நிலையில் கர்த்தாவே' என்று அந்தச் சகோதரி கூப்பிட்ட சமயம், 'தண்ணீரில் சர்க்கரை கலந்து கொடு' என்று கர்த்தரிடமிருந்து உடனே பதில் வந்தது. அந்தச் சகோதரி அந்த வழி நடத்துதலுக்குக் கீழ்ப்படிந்தார்கள். சர்க்கரைக் கலந்த தண்ணீரைக் குடித்த சில நிமிடத்தில் அச்சகோதரியின் மாமனார் பழைய நிலையை அடைந்தார்கள். நெருக்கமான நேரத்தில், என்ன செய்வது என்று அறியாது தவிக்கும் போது, நாம் செய்ய வேண்டியதை நமக்குக் கற்றுக் கொடுத்து நம்மை வழி நடத்துவார்.
5) கனி நிறைந்த வாழ்வு வாழ நம்மை நடத்துவார்
"கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ள தாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்." ஏசாயா 58:11
அருமையான தேவ ஜனமே! கர்த்தர் நம்மை நட த்தும்போது நமது சுபாவமான செயல்கள் நீங்கி, கர்த்தரின் பண்புகளால் நிறைந்து விடுகிறோம். நமது ஆவி, ஆத்துமா, சரீரமானது பலவிதமான நன்மைகளினால் நிறைந்து விடுகிறது. நமது ஆத்துமா திருப்தியாகின்ற நிலை. இந்த உலகத்தில் எதிலும் திருப்தியடையாத வாழ்வு வாழ்கிற மக்கள் ஏராளம். ஒரு துணிக் கடைக்குச் சென்று ஒரு துணியை வாங்குமுன் சிந்தனை, பல யோசனைகள், அதில் குறைவு இருப்பின் அதிருப்தி அடைகிறோம். ஆனால் கர்த்தரின் நடத்துதலில் உயர்வான, விலையேறப்பெற்ற நமது ஆத்துமா திருப்தி அடைகிறது. அது மாத்திரமல்ல நமது எலும்புகளைக் கர்த்தர் நிணமுள்ளதாக்கி, நமது சரீரத்தில் பெலன் தருகிறவராக இருக்கிறார். ஆவிக்குரிய வாழ்வு நீர்ப்பாய்ச்சலான தோட்டம் போல் மாறுகிறது. ஒரு தோட்டத்தில் நீர் பாய்ந்து கொண்டே இருந்தால் அதிலுள்ள மரம், செடி, கொடிகள் மிகுதியாக கனி கொடுக்கும். அதைப்போல் நம் வாழ்வு மாறும். அத்துடன் வற்றாத நீரூற்றைப் போல மாறுகிறோம்.
ஒருமுறை ஒரு மனிதரைக் குறித்து கசந்து கொண்டேன். அவர் வார்த்தை எனது உள்ளத்தை வேதனைப்படுத்தியது. அடுத்த முறை அவரைச் சந்திக்க ஒரு சமயம் வாய்த்தது. அச்சமயம் கர்த்தரின் ஆவியானவர் நீ ஒரு வார்த்தையும் அன்பற்று பேசக்கூடாது என்றார். அதின்படி நானும் எனது உள்ளத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். அந்தச் சகோதரர் தன் வார்த்தைக்காக கலங்கி, என்னுடன் ஐக்கியம் ஆனார். அப்பகுதி ஊழியத்தில் அதிக உதவியாகவும் இன்றும் இருக்கிறார். கனி நிறைந்த வாழ்வு வாழ கர்த்தர் நம்மை வழி நடத்துகிறார். சவுல் கர்த்தரால் வழி நடத்தப்பட்டான். அவன் வாழ்வு மாறியது. கர்த்தரின் மக்களைத் துன்பப்படுத்தியவன், கர்த்தருக்காக பாடுபட ஆயத்தமானான். கர்த்தரின் வழிநடத்துதல் அவன் வாழ்க்கையைக் கனி நிறைந்ததாக மாற்றியது.
6) இடறாத வழியில் நடத்துவார்
"...அவர்களை வழி நடத்துவேன்; அவர்களைத் தண்ணீருள்ள நதிகளண்டைக்கு இடறாத செம்மையான வழியிலே நடக்கப் பண்ணுவேன்..." எரேமியா 31:9
வழி நடத்தும் உன்னத கர்த்தாதி கர்த்தர் நம்மை நடத்தும் போது எந்த இடத்திலும் இடறாதபடிக்கு நம்மை நடத்துவார். அநேக முறைகளில் நாம் நம்முடைய திட்டத்தைக் கர்த்தரிடம் கொடுத்து, இப்படி என்னை நடத்தும் என்று அவருக்குக் கட்டளை கொடுக்கிறோம். ஆனால் அவர் நம்மைப் போதித்து நடத்துவதற்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்போது, எந்தக் காரியத்திலும், என்றும் நாம் இடறமாட்டோம். இஸ்ரவேல் ஜனங்களைக் கர்த்தர் தமது ஓங்கிய புயத்தினாலும் வல்லமையினாலும் மீட்டு வழி நடத்தினார். இன்று மனிதர்களைப் பின்பற்றுகிறபடியால் இடறி விடுகிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதால் ஜீவ ஒளியை அடைந்து இடறாது செல்ல முடிகிறது.
யோவான் 11:9ல் 'ஒருவன் பகலிலே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறமாட்டான்" என்று இயேசு கிறிஸ்து கூறியுள்ளார். கர்த்தரின் வார்த்தைப் பாதைக்கு வெளிச்சமாக மாறி, நம்மை இடறாதபடி செய்கிறது. "நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும் போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்." என்ற ஏசாயா 30:21ன் படி கர்த்தர் நம்மை இடறாதபடி வழி நடத்துவார்.
ஒரு முறை ஒரு வெளிநாட்டுக்கு ஊழியம் செய்வதற்காகச் சென்றிருந்தேன். அங்கிருந்து மற்றுமொரு நாட்டிலுள்ள ஒரு பட்டணத்திற்குச் செல்ல வழிநடத்தப்பட்டேன். அங்கு சென்று ஊழியத்தை முடித்து விட்டுத் திரும்பிவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பொழுது, அந்தப் பட்டணத்திலேயே இன்னும் சில நாட்கள் காத்திருக்கும்படி கர்த்தருடைய ஆவியானவர் சொன்னார். எனவே சில தினங்கள் கழித்து திரும்பினேன். நான் அங்கு திரும்பி வந்தபோது ஊர் அமைதியாக இருந்தது. அருகே இருந்த ஒரு உணவு விடுதியில் சாப்பிடச் சென்றேன். அந்த உணவகத்தில் உணவு சற்று நேரம் கழித்து தான் கிடைக்கும். ஆனால் அன்று உணவு உடனே கிடைக்கும் என்றனர். எதினால் இந்த நிலை என்றவுடன், சார் இன்று தான் இந்த உணவகம் வெள்ளத்திற்குப் பிறகு திறக்கப்படுகிறது என்றார். சென்ற தினங்களில் அந்தப் பட்டணத்தில் வெள்ளம் வந்த செய்தி எனக்கு அப்பொழுது தான் தெரிய வந்தது. வெள்ளம் வந்ததினால் மின்சாரமும் இல்லாது போய்விட்டதாம். ஜனங்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள். ஆம், இன்று கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி, வழியைப் போதித்து, காண்பித்து இடறாது செம்மையான பாதையில் உன்னை நடக்கச் செய்வார்.
கர்த்தரால் நடத்தப்பட நாம் என்ன செய்ய வேண்டும்?
1) கர்த்தரிடம் வர வேண்டும்
"அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள்; அவர்களை வழி நடத்துவேன்; அவர்களைத் தண்ணீருள்ள நதிகளண்டைக்கு இடறாத செம்மையான வழியிலே நடக்கப்பண்ணுவேன்; இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான்." எரேமியா 31:9
கர்த்தருடைய வழிநடத்துதலை பெற்றுக்கொள்வதற்கு கர்த்தரிடம் வர வேண்டும். என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை என்று கூறியிருக்கிறார். எவ்வளவு கொடியவராக, துரோகிகளாக இருந்தாலும் தம்மிடத்தில் வருகிறவர்களை அவர் ஒதுக்கித் தள்ளுவதில்லை. நம்மைப் பத்திரமாய் நடத்துவார். அதிசயங்களைக் காணச்செய்து, சமாதானத்தையும், மகிழ்ச்சியையும் அடையச் செய்வார்.
2) கர்த்தரின் சமூகத்தை நோக்க வேண்டும் "உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக." சங்கீதம் 43:3
இருட்டில் நடக்க நேர்ந்தால் பாதையை விட்டு விலக நேரிடும்; தவறான பாதையில் செல்ல நேரிடும். கர்த்தரின் வழிநடத்துதலை நாம் பெற அவரது வெளிச்சம் நமக்குத் தேவை. கர்த்தரின் வெளிச்சம் தேவனுடைய வார்த்கைளினால் கடந்து வருகின்றது. 'உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.' சங். 119:105. கர்த்தரை நோக்கிப் பார்க்கும் போது இவ்வெளிச்சத்தைப் பெற்றுக் கொள்கிறோம். 'அவர்கள் அவரை நோக்கிப்பார்த்து பிரகாசமடைந்தார்கள்...' என்று சங்.34:5ல் பார்க்கிறோம். அவரை நோக்கிப் பார்க்கிற ஒவ்வொருவரும் பிரகாசம் அடைவார்கள். அந்தப் பிரகாசமான ஒளி நம்மை நலமான பாதையில் நடத்தும்.
3) கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும் "அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும்
என்றார்." அப்போஸ்தலர் 9:6 கர்த்தரின் ஆசீர்வாதமான வழிநடத்துதலை பெற நம்மை முற்றிலும் கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். கர்த்தருடைய சீஷர்களைத் துன்பப்படுத்திய சவுல், தன்னைச் சந்தித்த கர்த்தருக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தான். அன்று முதல் கர்த்தர் அவனை நேர்த்தியாய் வழிநடத்தினார்.
இன்று உங்களைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கும் போது கர்த்தர் தாமே உங்களைக் கரம்பிடித்து நடத்துவார். அவரின் வழி நடத்துதலினால் உண்டாகிற சகல நல் ஆசீர்வாதத்தையும் நாம் அடைவோம். இம்மைக்கும் மறுமைக்கும் உரிய மேன்மைகளைப் பெற்றுக்கொள்ளுவோம்.
4) கர்த்தரை மேய்ப்பராய் ஏற்றுக்கொள்ள வேண்டும்
"கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.'' சங்கீதம் 23:1,3
கர்த்தரை நமது மேய்ப்பராக ஏற்றுக்கொண்டு அவர் பின் செல்ல நம்மை ஒப்புக் கொடுக்க வேண்டும். நானே நல்ல மேய்ப்பன் என்று சொன்ன இயேசு கிறிஸ்து நமக்கு முன் செல்லுகிற மேய்ப்பராக இருக்கிறார். அவருக்குப் பின் சென்றால், கர்த்தரின் வழி நடத்துதலைப் பூரணமாய் நாம் பெற்றுக் கொள்ள முடியும். கர்த்தர் நமக்கு முன் சென்று தடைகளை நீக்கி விடுவார். இன்று அநேக காரியங்களில் சத்துருக்களினாலோ அல்லது பொல்லாதவர்களின் மூலமாகவோ தடைகள் ஏற்படலாம். ஆனால் நம்முடைய கர்த்தரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து, சகல தடைகளையும் நீக்கி, நம்மை நல் வழி நடத்துகிறவாராக இருக்கிறார்.
"தடைகளை நீக்கிப் போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்து போகிறார்" என்று மீகா 2:13ல் கூறப்படுகிறது. இன்று திருமண காரியங்களில், வேலை கிடைக்கின்ற காரியங்களில், குழந்தைப் பிறக்கும் காரியங்களில், பயணங்களில், பள்ளி கல்லுாரியில் இடம் கிடைப்பதில் தடைகள் தோன்றுகின்றன. வீடு கட்டும் காரியங்களிலும், தொழிலகத்தில் குறிப்பிட்ட நாளில் சில காரியங்களைச் செய்து முடித்து அனுப்பி வைப்பதிலும் தடைகள் உண்டாகிறது. ஊழியப்பாதையில் சில நாடுகளுக்குச் செல்ல பலவித தடைகள் எளிதாய்த் தோன்றுகிறது. எனது ஊழியப் பாதையில் தோன்றிய தடையும், அதை நீக்கினச் செயலையும் காணும் போது, கர்த்தர் எவ்வளவு பெரியவர், வல்லவர் என்று புகழ வேண்டும்.
ஒருநாளில் நானும் என் மனைவியும் நியுசிலாந்து பகுதி ஊழியம் செய்ய சென்றோம். ஏற்கெனவே ஆஸ்திரேலியா நாட்டிற்கு விசா கிடைத்திருந்தது. ஆனால் நியுசிலாந்து தேசத்திற்குரிய விசாவை இந்தியாவில் எடுக்க முடியாத நிலை இருந்தது. இருந்தது. ஏற்கெனவே டிக்கெட் வாங்கி இருந்தேன். ஆனால் ஈஸ்டர் சமயமாய் இருந்த படியால் 12 அல்லது 15 தினங்கள் ஆகும் என்று நியுசிலாந்து விசா வாங்கித் தரும் ஸ்தாபனத்தார் கூறி விட்டனர். ஆனால் பயணம் செல்வதற்கு 7 தினங்கள் மாத்திரம் இருந்தது. எனவே இந்தியாவிலே விசா எடுக்காமல் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் விசா எடுக்கலாம் என்று பயணத்தை மேற்கொண்டோம். சிட்னியில் கர்த்தருக்கு மிகப் பிரியமான ஒரு சகோதரருடன் நியுசிலாந்து *ஒரு தேசத்தில் விசா ஆபிசுக்குச் சென்றோம். எங்கள் நிலைகளை விவரித்துக் கூறினோம். கடைசியில் 10 தினங்கள் கழித்து விசா " கொடுப்போம் என்றார்கள். எனக்கோ அடுத்த நாள் மாலையில் Rev. பிரின்ஸ் என்ற போதகர் மூலம் ஆக்லாந்து என்ற பட்டணத்தில் உள்ள மெதடிஸ்ட் ஆலயத்தில் கூட்டம் ஒழுங்காகி இருந்தது ஒழுங்காகி இருந்தது. எங்களுடன் வந்த சகோதரர் எல்லா நிலையையும் விசா யயும் விசா ஆபிசருக்கு விவரித்துச் சொன்னார்கள். கர்த்தாவே நீர் தடைகளை நீக்கும் என்று ஒரு ளை ஜெபமும் அந்த இடத்தில் செய்தோம். கர்த்தர் அடுத்த நாள் காலை காத்தா பயணத்தைச் செய்ய சகலவற்றையும் ஒழுங்காக்கி அற்புதமாய் வழி நடத்தினார். நேற்றும் இன்றும் என்றும் மாறாத இயேசு கிறிஸ்து உன் தடைகளை நீக்கி உன்னை நடத்துவார்.
இன்று நாம் கர்த்தரிடத்தில் வந்து அவரிடத்தில் நம்மை ஒப்புக் கொடுக்கும்போது, அவர் சமுகம் நமக்கு முன்செல்லவும், நேர்த்தியான இடங்களில் பங்கு கிடைக்கவும் செய்வார். அவரை நம் மேய்ப்பராக ஏற்றுக்கொள்ளும்போது, நமக்கு முன் உள்ள எல்லாத் தடைகளையும் நீக்கி நம் வழிகளைச் செவ்வையாக்கி நம்மை ஆசீர்வதிப்பார்.
கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்து இயேசுவின் பணியில்,
சகோ. C. எபனேசர் பால்.