குடும்பத்தின் சமாதானத்திற்கான ஒரு ஜெபம்

அன்பின் தேவனே. இந்த நல்ல ஜெப நேரத்திற்காக நன்றி கூறுகிறேன். கடந்த காலங்களில் என் குடும்பத்தில், என் வீட்டில் உமது கிருபையினால் முழுமையான மெய்யான சமாதானம் இருந்தபடியால் உம்மைத் துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். இன்று இந்தச் சமாதானம் இல்லாதபடியால் உமது சமுகத்தை நோக்கி இந்த விண்ணப்பத்தை ஏறெடுக்கிறேன் கர்த்தாவே. இயேசு கிறிஸ்துவே, எனக்கு இரங்கும். நான் இழந்த இந்தச் சமாதானம் என் கூடாரத்தில் திரும்ப வர உதவி செய்ய வல்லவராயிருக்கிறபடியினால் உம்மைத் துதிக்கிறேன், ஸ்தோத்தரிக் கிறேன். சமாதான பிரபுவாகிய இயேசுகிறிஸ்துவே, உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருக்கிறேன். என்னையும், என் குடும்பத்தையும் சமாதானத்தினாலும், சந்தோஷத்தினாலும் நிரப்பும்படி கெஞ்சுகிறேன். உம்முடைய வார்த்தைகள் அடங்கிய வேதத்தை நான் நேசிக்கிறேன். அதினால் என் எல்லைகளிலே சமாதானம் நிறையும் என்று நம்பி உம்மைத் துதிக்கிறேன். என் பிள்ளைகளை நினைக்கும்போது அவர்களின் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் நஷ்டங்களைப் பார்த்து வியாகுலப் படுகிறேன். கர்த்தாவே, உன் பிள்ளைகளின் சமாதானம் பெரிதாயிருக்கும் என்று சொன்னீரே, அந்த வார்த்தையின்படி உம் சமாதானத்தை என் பிள்ளைகளிலே நிறைவாக்கும். கர்த்தாவே, அவர்களை நினைக்கும்போது என் சமாதானம் ஒன்றுமில்லாது ஆகிவிடுகிறது. அவர்கள் ஒரு காலத்தில் உமது வேதத்தை நேசித்தார்கள், நீர் போதித்த வார்த்தையின் காரியங்களைக் கற்றுக் கொண்டார்கள். ஆனால் இன்று அவர்களுடைய வாழ்க்கை உலகத்தாரைப் போல இருக்கிறது. கர்த்தாவே, நீர் அவர்களுடைய உள்ளத்தில் உம்முடைய அன்பை ஊற்றி, அவர்களது வாழ்வை சந்தோஷம், சமாதானம் உள்ளதாய் மாற்றும். சமாதானத்தை வைத்துப் போகிறேன் என்று சொன்னவரே, அந்த சமாதானத்தினால் எங்களை நிறைத்தருளும். என் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு மக்களிலும் உம் சமாதானம் பெருக நீர் உதவி செய்யும். 'உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக' சங்கீதம் 122:7ன்படி என் வீடு சுகமும், சமாதானமும் நிறைந்திருக்க செய்யும். நீர் எனக்குச் சமாதானத்தைத் தரும்போது நிச்சயமாக என் வாழ்விலும், என் எல்லைகளிலும் சமாதானமும், சந்தோஷமும் உண்டாயிருக்கும். என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலை பெயராமலும் இருக்கும் என்று சொன்ன கர்த்தாவே, இந்த சமாதானம் நிலை பெயராமல் என்றென்றைக்கும் என் கூடாரத்தில் இருக்கும்படி வேண்டுகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டுகிறேன் பிதாவே, ஆமென்.