"கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை..."
                                                                                                                                                                 
சங்கீதம் 9:10

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

ஒரு முறை வெளிநாடு ஒன்றில் ஊழியங்களைச் செய்யும் போது, கர்த்தருடைய ஊழியம் செய்யும் ஒரு சகோதரர், தன் வீட்டின் அருகில் வசித்து வருகிற, தனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தார் மிகுதியாகக் கஷ்டப்படுகிறார்கள். இவரின் நஷ்டத்தினால் தொழிலை இழந்து, தங்களின் பங்களா வீட்டின் ஒரு மூலையில் வசித்து கொண்டிருக்கிறார்கள். தாயும் தகப்பனும் இருக்கிறார்கள். வீட்டில் 2 ஆண் மக்களும் 2 பெண் பிள்ளைகளும் வேலையில்லாதிருக் கிறார்கள். மிகுதியாக கஷ்டப்படுகிறார்கள் என்று கூறினார். அவ்வாறு கூறிக்கொண்டிருக்கும்போது அந்தச்சகோதரரைச் சாலையில் சந்திக்க நேர்ந்தது. சந்தித்த போது ஜெபிக்க கேட்டுக் கொண்டார்கள். சாலையில் அவர்களுக்காக ஜெபித்துவிட்டு, என்ன உங்கள் வீட்டின் உட்புறத்தில் சினிமா நடிகை நடிகர்களின் படங்கள் இருக்கிறதே என்று கேட்டேன். அப்பொழுது தான் வசிக்கும் இடம் எப்படிப்பட்டது என்று விவரித்துக் கூறினார். வீட்டின் பின்புறம் சினிமா படங்களை ஒட்டிய தட்டிகளைக் கொண்டுதான் சுவராக பயன்படுத்தின வீட்டில் வசித்து வருவது குறித்து கூறினார். அவருக்குக் கர்த்தரின் அன்பைக் குறித்தும், அவருடைய வல்லமையைக் குறித்தும், கர்த்தரைத் தேடுகிற மக்களுக்குச் செய்யும் நன்மையைக் குறித்தும் ஆலோசனை கூறினேன். ஒரு புறமதஸ்தராக இருந்தாலும் தான் தொடர்ந்து வேதத்தின் மகத்துவமான காரியங்களை ஆலோசனையாகப் பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். அருகில் இருந்த எனக்கு அறிமுகமான போதகர் நடத்தும் ஞாயிறுஆராதனைக்குச் செல்லுங்கள் என்று கூறினேன். அவர் சென்ற முதல் வாரத்திலேயே கர்த்தர் அவருடைய ஒரு மகனுக்கு வேறு ஒரு நாட்டில் வேலை செய்ய டிக்கெட் மற்றும் விசா அவரது நண்பர் மூலம் கிடைக்கப் பெற்றார். ஒரு மகன் வேலைக்குச் சென்றபடியினால், வீட்டின் அன்றாட செலவுகளைத் தேவன் சந்திக்கச் செய்தார். அந்நாட்டிற்குச் சென்ற மகன் தன் சகோதரனையும் அங்கு அழைத்து வேலையில் அமர்த்தின படியால், அக்குடும்பத்தின் கடனை அடைக்க ஆரம்பித்தனர். வெளிநாடு சென்ற சகோதரர் தங்கள் இரு சகோதரிகளுக்கும் வெளிநாட்டில் வேலை கிடைக்க உதவினார்கள். அந்தக் குடும்பத்தின் கஷ்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சரியானது. அந்த வீட்டையும் அவர்களால் மீட்க முடிந்தது. ஆலயத்திலும் ஒவ்வொரு மாதமும் நல்ல தொகை காணிக்கையாக கொடுத்து வந்தார். அவ்வாலயத்தின் போதகர் எப்படி இந்த ஆலயம் வந்தீர்கள் என்று விசாரித்தபோது, நான் அவர்களை அந்த ஆலயத்திற்குச் செல்ல வழி நடத்தினேன் என்று கூறினார்கள். அந்தப் போதகர் என்னை மீண்டும் சந்தித்த போது, அந்தக் குடும்பத்தாரின் பெயரைச் சொல்லி, இவர்களைத் தெரியுமா என்று கேட்டார். தெரியாது என்று கூறினேன். பின்பு ஞாபகம் வந்தது. அவர்களுக்கு ஜெபித்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்ததும், அதைக் குறித்து கூறினேன்.

அருமையான சகோதரனே, சகோதரியே, கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு, அவர் நமக்கு அருளின ஆலோசனையின் படி, ஆலயம் சென்று ஆராதனையில் பங்கு பெறும்போது, கர்த்தரின் ஆசீர்வாதங்களினால் நாம் நிரம்பி விடுவோம். கர்த்தரை நம்புகிறவன் செழிப்பான் என்ற வார்த்தையின்படி செழிப்பும் சிறப்பும் அடைவோம்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                                                     சகோ. c. எபனேசர் பால்