வாழ்வில் கைவிடப்பட்ட மக்களுக்காக ஒரு ஜெபம் .

          அன்பின் தேவனே, இந்த நல்ல வேளைக்காய்   நன்றி கூறுகிறேன். இம்மட்டுமாய் என் வாழ்வின் எல்லாப் பிரச்சனைகள்
மத்தியிலும் நேர்த்தியாய்  நடத்தினீர், அதற்காய் ஸ்தோத்திரம்.உம்முடைய அன்பின் கரம் என்னை ஆதரித்து,
அரவணைத்து நடத்தினதற்காக ஸ்தோத்திரம். என் வாழ்வில் நீர் போதுமானவராய் இருக்கும்படி
உம்முடைய பாதத்தில் என்னைத் தாழ்த்தி வேண்டுகிறேன். என் பெற்றோர் தங்களுடைய இக்கட்டுகளிலும் என்னைப்  போஷித்து,
பராமரித்து உம்முடைய கிருபையினால் என்னை நேர்த்தியாக நடத்தினார்கள். ஆனால்  இன்று என் வாழ்வில் பலவிதமான பாடுகளும்,
வேதனைகளும் நிறைந்திருக்கிறதை நீர் அறிவீர். கர்த்தாவே , நான்  எதிர்பாராதவிதமாக கைவிடப்பட்டு , ஏமாற்றங்களினாலும்,
இழப்புகளினாலும்  சோர்ந்து போய் இருக்கிறேன். பிரச்சனைகளை நான் பார்க்கும் போது , யோசிக்கும் போது,
நான் ஏன் இந்த உலகில் பிறந்தேன், இனி ஏன் நான் வாழ வேண்டும் என்ற எண்ணங்கள் என்னை மிகுதியாய் துக்கப்படுத்துகின்றன.
இதை நான் நினைக்கும் போது, தனியே அமர்ந்து கதறி அழுகிறேன். கர்த்தாவே, நீர் என்னைக் கைவிடுகிற தேவன்  அல்ல என்று அறிவேன்.
ஆனால் இன்றோ என் கணவனால் /   மனைவியால்/ பிள்ளைகளால் / பெற்றோரால்/ என் வேலை ஸ்தலத்தில்  உள்ள அதிகாரிகளால் கைவிடப்பட்டிருக்கிறேன்.
இதையெல்லாம் அறிந்திருக்கிற  தேவனாகிய நீர்,எப்பொழுது எனக்கு உதவி செய்வீர்.எப்பொழுது நான் ஆதரிக்கப்பட்டு ,
ஆசீர்வதிக்கப்படுவேன் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறேன். என்னோடு பணி  செய்கிறவர்களும்,
என்னுடன் பிறந்த சகோதர சகோதரிகளும் இப்படி என்னை ஏமாற்றுவார்கள் என்று நான் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை.
கர்த்தாவே,உம்மைத் தேடுகிறவர்களைக் கைவிடமாட்டேன் என்று சொன்னவரே ,உம்முடைய சமூகத்தை நோக்கிக் கெஞ்சுகிறேன்.
ஏசாயா 41:17ல் 'அவர்கள் நாவு தாகத்தால் வறளும் போது,கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிக்  கொடுத்து , கைவிடாதிருப்பேன்' என்று சொன்னவரே 
அவ்வாறே என்னைக் கைவிடாதிரும்.என்ன செய்வது,யாரிடம் சொல்வது என்று திகைத்து வாழ்கிற என்னை, நான் அறியாத பாதையில் நடத்தி,
என் வாழ்விலுள்ள கோணலைச் செவ்வையாக்கி,இருளை வெளிச்சமாக்கி , ஏசாயா 42:16ன் படி கர்த்தாவே,இதைத் துரிதமாய் செய்து
என்னைக் கைவிடாதிருப்பிர் என்று உம்மைத் துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே , ஆமென்.