ஒருமனதுடன் வாழ கர்த்தர் உதவிசெய்ய ஒரு ஜெபம்

 

                    அன்பின் தேவனே , இந்த ஜெபவேளைக்காக நன்றி கூறுகிறேன். கிருபையாக இரங்கி  எங்களை ஆசீர்வதியும். இந்தப் புதிய ஆண்டிற்குள் பிரவேசிக்கச் செய்த அன்பின் செயலுக்காக கோடாகோடி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறேன். தொடர்ந்து நாங்கள் மகிழ்ச்சியாயும், மேன்மையாயும்  ஜீவிக்க அனுக்கிரகம் செய்யும். அதிசயங்களைச்  செய்கிற தேவனே,  உம்முடைய அதிசயம் என் வாழ்க்கையில் நடைபெற, குறிப்பாக இந்த ஆண்டில்  நடைபெற உதவிசெய்யும். எல்லாக் காரியங்களிலும் மகிழ்ச்சியும் ஒருமனதும்  பெருகச் செய்யும். என்னுடைய வீட்டில் எங்களுக்குள் ஒருமனது இல்லாதபடியினால் அநேக ஆசீர்வாதங்களை இழந்து போய்விட்டோம். அவ்விதமாக இழப்பு இல்லாதபடி இந்த ஆண்டிலே இணைந்து செயல்பட உதவிசெய்யும். பிரிவினையின் வார்த்தைகளும், பிரிவினையின் எண்ணங்களும் எங்களுக்குள் தோன்றாதபடி தயவாய்க் காத்து  ஒருமனதுடன் செயல்பட எங்களுக்கு உதவி செய்யும். கர்த்தாவே,  என் பெற்றோர்களுடைய வாழ்க்கையிலும், என் சகோதரர் / சகோதரி குடும்பத்திலும் உண்டான பிரிவினையின் செயல்கள் அழிந்து போகவும், நாங்கள் ஒருமனதோடு  உமக்குள் நிறைவாய் ஆசீர்வதிக்கப்பட  உதவிசெய்யும். ஒருமனதோடு கூடி வரும்போது, இயேசு கிறிஸ்துவே, உமது பிரசன்னம் உண்டு என்று அறிந்திருக்கிற  நாங்கள், ஒருமனதோடுகூட உறுதியான உள்ளத்தைத் தாரும். ஒருமனதோடு உமது நாமத்தை உயர்த்த எங்கள் இருதயங்களை அன்பினால் ஸ்திரப்படுத்தும். இயேசு கிறிஸ்துவே, அன்பினால் இணைந்து  ஜீவிக்கத்தக்கதான உள்ளத்தை எங்களுக்குத் தாரும். இரண்டு பேர் ஒருமனப்பட்டு  ஜெபிக்கும்போது , பரலோகத்திலிருந்து அவர்களுக்குக்  கட்டளையிடப்படும் என்ற வார்த்தையின்படி இன்றுமுதல் நாங்கள்  ஒருமனதோடு  ஜெபித்து வெற்றிகாண  உதவிசெய்யும். சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது  எத்தனை  இன்பமும் நன்மையுமானது என்று சொன்னவரே , அங்கே என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தை  ஊற்றுவேன் என்று சொன்னவரே  அதிசயம் செய்வீராக. பிரிந்த குடும்பங்கள் ஒருமனதோடு  இணைந்து வாழவும், என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கப்படவும்  இன்று நீர் உதவி செய்வீராக. மேலறையில் ஒருமனதோடு   கூடிய அப்போஸ்தலர்களுக்குள் அக்கினியின் அபிஷேகத்தை அருளினவரே , நாங்கள் அதிசயம் காணச் செய்யும். குறைவில்லா வாழ்வைத் தாரும். நீரே அப்படிச் செய்து எங்களைப்  பெலப்படுத்தி , ஆசீர்வதித்து  வழி  நடத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டிடுகிறேன். நல்ல பிதாவே , ஆமென்