கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தமான  வார்த்தைகளைச்  சுதந்தரிப்பதற்கேற்ற உணர்வுள்ள, ஞானமுள்ள இருதயத்தைக் கர்த்தர் அருளும்படி ஒரு ஜெபம்

                           அன்பின் தேவனே , இந்த நல்ல ஜெபநேரத்திற்காய் உமக்கு கோடக் கோடி  ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறேன்.  புதிய ஆண்டைக் காணச்  செய்ததோடு , ஒரு மாதத்தையும்  முடித்து, இந்தப் புதிய  மாதத்தைத்   துவங்கச் செய்த அன்பின் செயலுக்காக நன்றி கூறுகிறேன்.  இந்த நாள் முதற்கொண்டு கர்த்தாவே, நீர் எனக்கு கொடுத்த வாக்குத்தத்தமான  வார்த்தைகள் நிறைவேற என்னை  முற்றிலுமாய் உம்முடைய பாதத்தில்  அர்ப்பணிக்கிறேன்.  உம்முடைய   சமூகத்திலே என்னைத் தாழ்த்துகிறேன். இயேசு கிறிஸ்துவே   , நீர் ஒருவரே என்னை எல்லா நிலையிலும் ஆசீர்வதிக்க வல்லவர். அன்றைக்கு ஆபிரகாமுக்கு வாக்கருளின தேவன், அந்த வாக்கை  அவன் வாழ்க்கையிலே நிறைவேற்றினீர். அதற்காக உமக்கு ஸ்தோத்திரம் . எனக்கு நீர் கொடுத்திருக்கிற வாக்குத்தத்தமான வார்த்தைகளுக்காய்  நன்றி கூறுகிறேன்.  இவைகள் துரிதமாய் நிறைவேற வேண்டும் என்று   நான் காத்திருந்தாலும் , நீர் உம்முடைய அநாதி தீர்மானத்தின்படி அதினதின் காலத்தில் நேர்த்தியாய்  நிறைவேற்றிடுவீர் என்று எண்ணி உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். கர்த்தாவே, என் இளவயதின்  பாவங்களோ , என்னுடைய வீணான வார்த்தைகளோ இதைத் தடை  செய்யாதபடி காத்துக்கொள்ளும் .  ஒரு விசை கர்த்தாவே, என்னை மன்னியும் .  நான் உமக்கு ஏற்றவைகளை இன்னும் செய்யவும்  , உம்முடைய நல்ல நாமத்தினாலே நான் மகிழ்ச்சிகரமான ஆசீர்வாதங்களை உம்முடைய வார்த்தையின் வல்லமையின் மூலமாய் பெற்றுக்கொள்ளவும் உதவிசெய்யும். கர்த்தாவே எந்தப்  போராட்டத்தையும் பார்த்து நான் பயந்து விடாதபடி உம்மையே நான் பார்த்து பிரகாசமடைய  உதவிசெய்யும். நான் ஒருபோதும் வெட்கமடையாதபடி என்னைக் கண்ணின் மணியைப்  போலக் காத்தருளும். நான் உம்மையே சார்ந்து உம்முடைய வார்த்தையின்படியே நடப்பதற்கு என்னை முழுஉள்ளதோடு உம்முடைய பாதத்திலே  அர்ப்பணிக்கிறேன். இதுவரை இல்லாத மேலான பாக்கியத்தை இயேசு கிறிஸ்துவே  , உம்முடைய நல்ல நாமத்தினாலே பெற்றுக்கொள்ள எனக்கு உதவி செய்யும். என்னுடைய மாற்றத்தினாலும் ,உம்முடைய  வாக்குத்தத்தமான வார்த்தையினால் உண்டாகும் ஆசீர்வாதத்தினாலும்  அநேகர் உம்முடைய அன்பை உணர கிருபை செய்வீராக. வீணானவைகளுக்கும் , வேதனையானவைகளுக்கும் என்னை விலக்கி , மேலானவைகளையும் , நன்மையானவைகளையும் பெற்றுக்கொள்ள எனக்கு உதவிசெய்கிறபடியினால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன் . நீர் வாக்கருளினீர் , அந்தப் பிரகாரமாய்ச் செய்தீர் என்று எசேக்கியா ராஜா சொன்னதுபோல , நானும் என் வீட்டாரும் சொல்லத்தக்கதாக எங்களை ஆசீர்வதியும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டுகிறேன் , நல்ல பிதாவே, ஆமென்.