மருத்துவரீதியாய் சுகமடைய காத்திருக்கும் மக்களுக்காக ஒரு ஜெபம்

எங்களை நேசிக்கிற அன்பு நிறைந்த தேவனே, உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஏறெடுக்கிற இந்த ஜெபத்தைக் கேட்டு, எனக்குள் பூரண சுகத்தைத் தாரும். என் சரீரத்திலே உண்டான இந்த நோயின் நிமித்தமாய் பலவிதமான வேதனையும், பயமும் எனக்குண்டு. என்னுடைய பெலவீனத்தை எண்ணும்போது கவலை பெருகி யிருக்கிறது. அவைகளை நான் நினைக்கும் போது, எங்கு என் ஜீவன் போய்விடுமோ என்ற துக்கமும், துயரமும் வருகிறது. மருத்துவரீதியாக எனக்குச் சிகிச்சைக் கொடுத்தும் சற்றேனும் சுகமடையாது நீடித்துக் கொண்டிருக்கிறதினால் வேதனை அடைகிறேன். நான் சேர்த்து வைத்திருந்த என் பணமும் மிகுதியாய் செலவழிந்து விட்டது. நான் என் பிள்ளைகளுக்கோ உற்றார் உறவினர்களுக்கோ பாரமாயிராதபடி எனக்குள் அற்புத சுகம் இயேசு கிறிஸ்துவின் மூலம் உண்டானால் நலம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். சில சமயங்களிலே என் வியாதி யினிமித்தமாய் என் சரீரத்தில் தோன்றுகிற வேதனை மிகவும் போராட்டமாய் இருக்கிறது. சீக்கிரம் மரித்தால்கூட பரவாயில்லை என்று தாங்க முடியாத வலியினால் தவிக்கிறேன். கர்த்தாவே, எனக்கு இரங்கும். என் பெலவீனங்களை ஏற்றவரே, என் நோய்களைச் சுமந்தவரே, தழும்புகளினால் குணமானீர்கள் என்ற வார்த்தையின்படி நான் சுகமடைய உம்மைக் கெஞ்சி நிற்கிறேன். என் கண்ணீரைத் துடைப்பதற்கு இனியும் தாமதியாதபடி எனக்குள் அற்புத சுகத்தைத் தாரும் கர்த்தாவே. நான் உம்முடைய வழியை விட்டுவிலகி, விரும்பாத காரியங்களைச் செய்த பாவி. என்னை ஒருவிசை மன்னித்து எனக்குள் மகிழ்ச்சியைப் பெருகச் செய்யும். நீதியின் கரத்தினால் என்னைத் தாங்கும். உம்முடைய காயப்பட்ட கரங்கள் என்னைத் தொட்டு சுகமாக்கட்டும். மரணத்தை ஜெயமாய் விழுங்கினவரே, எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைப்பவரே, என் கண்ணீரைத் துடைத்தருளும். என் வேதனை நீங்கி நான் சுகமடைய எனக்கு உதவி செய்யும். உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன் என்று எசேக்கியாவின் ஜெபத்தைக் கேட்டு சுகமாக்கினவரே, என் வாழ்க்கையிலும் அற்புத சுகத்தை எனக்குத் தாரும். உமது கண்களில் எனக்குத் தயவும், கிருபையும் கிடைப்பதாக. நீர் எனக்காக யாவையும் செய்து முடிப்பீர் என்று உம்மைத் துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்