சிந்தி செயல்படு

"கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்..." சங்கீதம் 121:7

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

     கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன். ஒருமுறை அமெரிக்க நாட்டிலே 4 சிறுவர்களுக்கு இயேசு கிறிஸ்துவைக் குறித்து சொல்லவும் ஜெபிக்கவும் கர்த்தர் உதவி செய்தார். அதில் ஒரு சிறுவனுக்கு நீ வகுப்பு அறையில் காகிதத்தை arrow மாதிரி செய்து, அதை ஆசிரியர் மீதும், மாணவர் மீதும் வீசுகிறாய். இது தவறான ஒரு செயல் என்று சொல்லி அவனுக்கு சொன்னபொழுது, ஆமாம், எல்லா மாணவர்களும் செய்வார்கள், நானும் இதைச் செய்து கொண்டிருக்கிறேன் என்று சொன்னான். இன்றைக்கு முற்றுப் புள்ளி வைத்து விடு. இனி இவ்விதமாய் காரியத்தைச் செய்யாத படி கவனமாயிரு. கர்த்தர் உன்னை எல்லாவற்றிலும் காத்து நடத்துவார், ஆசீர்வதிப்பார் என்று கூறினேன். அந்தச் சிறுவனுக்கு அது ஆச்சரியமாக இருந்தது. இது எப்படி இவருக்குத் தெரியும்? என்று உள்ளத்தில் எண்ணிய போது, அவனுக்கு ஆறுதலாக ஒரு வார்த்தை சொன்னேன். 'இயேசு கிறிஸ்து உன்னை நேசிக்கிறார்', உன்னை இக்கட்டுகளுக்கு விலக்கிக் காக்கவேண்டும் என்று சொல்லி, இதை உனக்கு தெரிவித்திருக்கிறார் என்று சொன்ன போது, உடனே அந்த அருமையான சிறுவன் தன் உள்ளத்திலே அதை ஏற்றுக்கொண்டு இனி அந்தக் காரியத்தை செய்யக்கூடாது என்று தீர்மானித்தான். அடுத்த நாள் காலையிலே வகுப்பு அறைக்கு சென்ற போது, எல்லா மாணவர்களும் முன்போல, ஆசிரியர் போர்டு பக்கம் திரும்பிய உடனே, காகிதத்தை முன்போல எல்லாரும் வீசினார்கள். ஆனால் இந்த அருமையான சிறுவனோ அமைதியாக இருந்து விட்டான். ஆசிரியர் ஏற்கெனவே புகார் செய்திருந்த படியினாலே, அநேக கேமராக்கள் பொருத்தப் பட்டடிருந்தது. பின்பு இவ்வாறு வீசின பின்பு அந்த கேமராவிலே சிக்கின அத்தனை மாணவர்களையும் அந்தப் பள்ளியில் Principal கூப்பிட்டு அவர்கள் மேல் தக்க நடவடிக்கை எடுத்தார். பெற்றோர்களை அழைத்து பலவிதமான தண்டனைக்கு உட்படுத்தினர். ஆனால் இந்த அருமையான சிறுவனோ தப்பிக்கொண்டான். அருமையான தேவ ஜனமே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை நேசிக்கிறார். நமக்கு வேண்டிய ஆலோசனைகளினாலே எச்சரித்து இதைச் செய்ய வேண்டாம் என்று சொல்லும்போது, நாம் அதைச் செய்யாது அவருடைய ஆலோசனையின் எச்சரி க்கைக்குக் கீழ்ப்படியும்போது, எந்தக் கேடான நிகழ்ச்சியும் வராதபடி காரியங்களைக் கர்த்தர் மாற்றுவார். அந்தச் சிறுவன் சொன்ன சாட்சி மிகவும் ஆச்சரியமாய் இருந்தது. அவ்வாறு அழைத்து சென்ற எல்லா மாணவர்களுக்கும் அந்தப் பள்ளியில் படிக்கக்கூடாது என்று சொல்லி, அவர்களுக்கு T.C. கொடுக்கப் பட்டது. படிப்பு நிறுத்தப்பட்டு விட்டது என்று சொன்னான். யோசித்துப் பாருங்கள். அருமையான தேவ ஜனமே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய வார்த்தைகளினாலே எச்சரிக்கிறார். தம்முடைய ஊழியக்காரரைக் கொண்டு எச்சரிக்கிறார். சொப்பனங் களினால் எச்சரிக்கிறார். அவர் எச்சரிக்கும்போது, நாம் அதற்கு இணங்கி நம்மைத் தாழ்த்தும்போது, அவர் அதிசயமாய் கண்ணின்மணி போல் காத்து, அனுதினமும் நம்மை ஆசீர்வதிப்பார். இந்த வார்த்தைகளை வாசிக்கிற அருமையான சகோதரனே, சகோதரியே, கர்த்தர் உனக்குள் எச்சரித்துச் சொல்லுகிற உன் மனச்சாட்சியை உணர்த்துகிற தீங்கான, தவறான காரியங்களுக்கு விலக்கி, கர்த்தர் ஆசீர்வதிப்பார்.

                      கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                              சகோ. C. எபனேசர் பால்