சமாதானத்தை இழந்து தவிப்போர் ஆறுதலடைய ஒரு ஜெபம்

                                   எங்களை அதிகமாய் நேசிக்கிற அன்பு நிறைந்த இயேசு கிறிஸ்துவே, என்னுடைய வாழ்க்கையிலே நீர் இதுவரை செய்த எல்லா நன்மைகளுக்காய் நன்றி கூறுகிறேன். இப்பொழுதும் கர்த்தாவே, நீர் சொன்ன படியே அநேக நன்மையான காரியங்களை என் வாழ்க்கையிலே நீர் செய்து, என்னை சந்தோஷத்தாலும் சமாதானத்தினாலும் சகல நல் ஆசீர்வாதங் களினாலும் நிறைத்து முடிசூட்டினீர், அதற்காக கோடா கோடி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறேன். இப்போதும் கர்த்தாவே, கடந்த நாட்களிலே நடந்த சம்பவங் களினாலே என் உள்ளத்திலுள்ள எல்லாவிதமான சமாதானத்தை, சந்தோஷத்தை இழந்து வேதனையோடு நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நீர் அதை நன்கு அறிவீர் கர்த்தாவே. என்ன நோக்கத்தினால் இதை அனுமதித்தீரோ என்பதை நான் அறியேன். இழந்து போன எல்லா விதமான நிலைகளையும் நீர் நன்றாய் அறிந்தவர். ஒரு அனாதையைப் போல் நான் தவித்துக் கொண்டிருக்கிறேன். நான் மனிதர்களைப் பார்க்க வில்லை கர்த்தாவே. உம்மையே நான் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். கர்த்தாவே, தாங்க முடியாத துக்கத்தினால் நிறைந்திருக்கிற என்னுடைய வாழ்க்கையிலே, நான் இழந்துபோன சமாதானத்தை நீர் தர வேண்டுமாய் கெஞ்சுகிறேன். இயேசு கிறிஸ்துவே எனக்கு இரங்கும். ஆறுதலின் தேவனே நீர் இரங்கும். சமாதான பிரபுவே எனக்கு இரங்கும். சந்தோஷத்தை சம்பூரணமாய் தருகிறவரே, எனக்கு இரங்கும். என் பாவங்கள், என் மீறுதல்கள் காரணமா யிருக்குமானால் என்னை தயவாய் மன்னியும் கர்த்தாவே. எனக்குள்ளாய் ஒரு புதிய பெலனைத் தருவீராக. எனக்குள்ளாக ஒரு புதிய வாழ்க்கையைத் தருவீராக. நான் இனி உமக்கென்று வாழ்கிற வாழ்க்கை வாழ, என்னை ஒப்புக் கொடுக்கிறேன் கர்த்தாவே. கண்ணின்மணி போல எங்களைக் காக்கிற தேவனே, உம்முடைய காயப்பட்ட கரத்தினாலே என் வாழ்க்கையை நீர் தாங்கி, ஏந்தி நடத்தும்படியாய் கெஞ்சுகிறேன். தாங்குவேன், சுமப்பேன், தப்புவிப்பேன் என்று சொன்ன அன்பின் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, எனக்கு இரங்குவீராக. தாங்கமுடியாத துக்கத்தினால் நிறைந்திருக்கிற என்னை ஆற்றித் தேற்றுவீராக. கர்த்தாவே, என் உள்ளத்தில் இழந்து போன என் குடும்பத்தின் மக்களினிமித்தமாய் துக்கம் நிறைந்திருக்கிறது. துக்கத்தையெல்லாம் மாற்றுகிற தேவன் நீர். என் துக்கத்தைச் சுமந்தவரே, ஒருவிசை எனக்கு இரங்கி என் துக்கம் நீங்கத்தக்கதான கிருமையின் கரங்களினால் தாங்கி ஏந்தி நடத்தும் படியாய் கெஞ்சுகிறேன். ஆறுதலின் தேவனாகிய நீர் இன்றைக்கு எனக்கு அதிசயத்தைச் செய்து என் மனதிலே உள்ள எல்லா பாரங்களும் மாறி மெய்யான சமாதானத்தோடு தொடர்ந்து உமது பணியையும் உமது காரியங்களையும் உமக்குள் நான் செய்யத்தக்கதாக என்னைத் திடப்படுத்துவீர் என்று நம்பி துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன்.

இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டுகிறேன்,

நல்ல பிதாவே, ஆமென்.