பிள்ளையில்லாத மக்களுக்காக ஒரு ஜெபம்

     அன்பின் இயேசு கிறிஸ்துவே, உம்முடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமையுண்டாக என்னை இம்மட்டுமாய் நடத்தினீர், என் திருமண காரியங்களைக் கூடிவரச் செய்தீர். அதற்காக உமக்கு ஸ்தோத்திரம். கர்த்தாவே, திருமணம் ஆகி இத்தனை ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத ஒரு குறைவினாலே நான் கலங்கி நிற்கிறேன். என் கணவருடைய வாழ்க்கையை நான் பார்க்கும்போது, ஏன் எனக்கு இப்படிப்பட்ட நிலமை? என் மனைவியின் காரியங்களை நான் ஆராயும் போது, ஏன் இவ்விதமான நிலமை என்று எனக்குள்ளாய் பலவிதமான எண்ணங்களும் சோர்வுகளும் வருகிறது. கர்த்தாவே, எப்பொழுது எனக்குக் குழந்தை பிறக்கும் என்று ஒவ்வொரு மாதமும் காத்திருக்கிறேன். கர்த்தாவே, நீர் ஒருவரே என் சந்ததியைப் பெருகச் செய்யக்கூடிய தேவன். இயேசு கிறிஸ்துவே, நீர் ஒருவரே என்னை ஆசீர்வதிக்கக்கூடிய தேவன். கர்ப்பத்தின் கனி கர்த்தரால் கிடைக்கும் பலன் என்று சொல்லியிருக்கிறீரே, அந்தக் கர்ப்பத்தின் கனியை எனக்குத் தரமாட்டீரோ என்று ஏக்கத்தோடு என் நாட்களைச் செலவிட்டுக் கொண்டிருக்கிறேன். பிள்ளையில்லாத காரணத்தினாலே நான் வெளியே செல்லக்கூட வெட்கமாயிருக்கிறது. என்னைப் பார்த்து கேட்கிற மக்களுக்கு நான் எவ்விதமாய் பதில் சொல்வது? இன்னும் குழந்தையில்லையா என்று கேட்கும் போது, என் உள்ளத்திலே வேதனை பெருகுகிறது. விளையாடுகிற பிள்ளைகளைப் பார்க்கும்போது, ஒரு ஏக்கம் வருகிறது. என்னை விட சிறு வயதிருக்கிறவர்கள் குழந்தை பெற்றேடுத்து, மகிழ்ச்சியோடு வாழும்போது, கொஞ்சும்போது, என் உள்ளம் தவிக்கிறதே கர்த்தாவே. நீர் ஒருவரே என் தாகத்தை அறிந்தவர், என் வேதனைகளை அறிந்தவர், என்னுடைய எல்லாவிதமான காரியங்களையும் அறிந்தவர், கர்த்தாவே, நீர் அற்புதங்களைச் செய்து, எனக்கு ஒரு குழந்தையைத் தரும்படியாய் கெஞ்சுகிறேன். நான் அற்பமாய் எண்ணப்படாதபடி ஒரு அற்புதத்தைச் செய்யும்படியாய் கெஞ்சுகிறேன். அன்னாளுக்கு இரங்கிய தேவனே, எனக்கும் இரங்கும். அன்னாள் நினைந்து அற்புதத்தைச் செய்தவரே, என்னை ஒருவிசை நினைந்து என் சந்ததியைப் பெருகச் செய்வீராக, உமக்குப் பயந்து நடக்கிற பிள்ளைகளுடைய வாழ்க்கையிலே, உன் பிள்ளைகள் ஒலிவமரக் கன்றுகளைப் போல் உன் பந்தியைச் சுற்றிலும் இருப்பார்கள் என்று சொன்னீரே, அந்த வார்த்தை நிறைவேறும்படியாக என்னை ஆசீர்வதிக்கும் படியாக கெஞ்சுகிறேன். இயேசு கிறிஸ்துவே எனக்கு இரங்கும். உமது அன்பின் பிரசன்னம் நிறையட்டும். பாதுகாவலைத் தாரும். கிருபை செய்யும். பெலன் தந்து நடத்தும், வேதனைகள் நீங்கச் செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டுகிறேன், நல்ல பிதாவே, ஆமென்.