பலவிதமான வேலை, பிள்ளைகள், பொருளாதாரப் பிரச்சனைகளினால் மனம் குழம்பியிருக்கிறவர்களுக்கு சமாதானம் உண்டாக ஒரு ஜெபம்

அன்பின் தேவனே, இந்த நல்ல ஜெப நேரத்திற்காய் நன்றி செலுத்துகிறேன். இதுவரை என் ஜெபங்களுக்கெல்லாம் நீர் பதில் கொடுத்தபடியினால் உமக்கு ஸ்தோத்திரம். இப்போதும் கர்த்தாவே, என் இருதயம் பல காரியங்களைக் குறித்து கலங்குகிறது. வெளிச்சொல்ல முடியாத ஒரு விதமான துயரமும் துக்கமும் என் மனதை அழுத்துகிறது. இந்த எண்ணங்கள் மிகுதியாக என் மனதிலே வருவதோடு, மனக்குழப்பத்தையும் உருவாக்குகிறது. பொருளாதாரம், வேலைக்காரியங்களில் வரும் பிரச்சனைகள் எல்லாம் சமாதானத்தை இழக்கச்செய்ததோடு, எதற்கு வாழ்கிறாய்? பிரயோஜனம் என்ன? செத்தால் நல்லது என்று சொல்கிற தவறான தீதான எண்ணங்களை என் இருதயத்திற்குள்ளாக, களையின் விதைகளாய் பிசாசானவன் விதைத்துக்கொண்டிருக்கிறான். இயேசு கிறிஸ்துவே எனக்கு இரங்கும். யாரிடமாவது சென்று என் மனபாரத்தை இறக்கி வைக்க விரும்புகிறேன். அதே சமயத்தில் 'நீங்கள் ஒன்றுக்குங் கவலைப் படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்' பிலிப்பியர் 4:6 ல் உள்ளது போல ஸ்தோத்திரத்தோடு விண்ணப்பங்களையும், வேண்டுதல்களையும் தேவனுக்கு தெரியபடுத்துங்கள் என்ற வசனமும் உள்ளத்தில் தோன்றுகிறது. இயேசு கிறிஸ்துவே எனக்கு இரங்கும். நீர் ஒருவரே அற்புதங்களைச் செய்ய வல்லவர். எதையுமே செய்ய மனதில்லாதிருக்கிறேன். பழைய காரியங்களைச் சிந்தித்து சங்கடப்படுகிறேன். கிறிஸ்து இயேசுவுக்குள் எங்கள் சிந்தைகளைக் காக்க வல்லவரே, தேவசமாதானம் தருகிற உன்னதமானவரே, எனக்கு இரங்கும். இன்றைக்கு என் மன உளைச்சலை நீக்கி, தூங்க முடியாத வேதனைகள் நீங்கவும், உம்மைத் துதிக்கின்ற துதி எனக்குள் பெருகவும், எனக்கு உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்.