சிறு பிள்ளைகளில் காணப்படும் வியாதிகள், பெலவீனங்கள், குறைகள், நீங்கி நலமாய் காண, பேச, தேவனைத் துதிக்க ஒரு ஜெபம்.

அன்பின் தேவனே, இந்த ஜெப நேரத்திற்காக உம்மைத் துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேட்டு எண்ணிலா நன்மைகளை எனக்கு செய்திருக்கிறீர். அதற்காக உமக்கு ஸ்தோத்திரம். எனக்கு திருமணம் தாமதித்த போது என் ஜெபத்தை கேட்டு அதிசயமாய் என் திருமணத்தை நடத்தி தந்தீர். நீர் எனக்குக் கொடுத்திருக்கிற கணவனுக்காக/ என் மனைவிக்காக உம்மைத் துதிக்கிறேன். கர்த்தாவே, உமது தயவினால் எனக்கு ஈவாய் இந்தப்  பிள்ளையை நீர் கொடுத்தீர். அதற்காக உமக்கு ஸ்தோத்திரம். கர்ப்பத்தின் கனி கர்த்தரால் வரும் சுதந்திரம் என்று  உமது ஆசீர்வாதத்தினால் மிகுதியாக மகிழ்ந்தேன். எனக்கு முன் திருமணம் முடிந்த இவர்களுக்கெல்லாம் பிள்ளை தாமதித்து இருந்த நேரத்தில் எனக்கு இந்த பிள்ளையைக் கொடுத்தீர். கர்த்தாவே, என் சிந்தையில் வந்த பெருமையை மன்னியும். இந்த பிள்ளையால் என் உள்ளம் மகிழ்ந்தது. நாள் ஆக ஆக கர்த்தாவே, நீர் தந்த பிள்ளை பேசாமல் இருப்பதைக் கண்டு கலங்கினோம். கண்ணின் பார்வையிலும் குறையிருப்பதை அறிந்த போது என் உள்ளம் உடைந்தது. அதிகமாக சிந்திக்க ஆரம்பித்தேன். சிலர் சொன்ன 'சாபம்' என்ற வார்த்தை என்உள்ளத்தை பிழியவைத்தது. பிள்ளையைப்பார்க்கும் போதெல்லாம், ஏன் பிள்ளைக்கு இந்த  குறை என்று கலங்குகிறேன். எவ்வளவுக்கு எவ்வளவு சந்தோஷமாய் இருந்தேனோ அந்த சந்தோஷம்  என்னைவிட்டு போய்விட்டது. சிறுபிள்ளைகளை நேசிக்கிற அன்பின் ஆண்டவரே, எனக்கு இரங்கும். இவன்/இவள் எதிர்காலத்தை நினைக்கும் போது இனம் தெரியாத துக்கம் என்னை ஆண்டுக்கொள்கிறது. பிள்ளையைப் பார்க்கவும் எனக்கு மனதில்லை. வெளியே கொண்டு செல்லவும் துக்கமாயிருக்கிறது.   இயேசு கிறிஸ்துவே, எனக்கு இரங்கும். எப்பொழுது சுகமடையும் என் பிள்ளை என்ற மிகுந்த ஏக்கத்தினால் கதறுகிறேன். சந்தோஷம் என்னை விட்டுப்போய்விட்டது. இன்னொரு பிள்ளையை பெற்றுக்கொள்ளுங்கள் என்ற ஆலோசனைகள் உள்ளத்தில் அதிர்ச்சியை உண்டாக்குகிறது. எங்கு அடுத்த பிள்ளையும் இப்படி பிறந்து விட்டால் என்ன செய்வது என்று என் உள்ளம் உடைகிறது. இயேசு கிறிஸ்துவே, இதற்கு முடிவே இல்லையோ. மற்றவர்கள் தங்கள் பிள்ளையின் செய்கைகளை மகிழ்ச்சியாய் பகிர்ந்து கொள்ளும்போது நான் மிகவும் வேதனைப் படுகிறேன். அதனால் நான் எங்கும் செல்ல பிரியமில்லாதிருக்கிறேன். இயேசு கிறிஸ்துவே, எனக்கு இரங்கும். உமது வல்லமை வெளிப்பட, என் பிள்ளையில் சுகம் வர, சகல குறையும் மாற எனக்கு உதவிச்செய்யும். நீர் ஒருவரே அற்புதம் செய்கிறவர் என்று உம்மை நம்பி துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன், என் ஜெபம் கேளும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே. ஆமென்.