"கண்மணியைப்போல என்னைக் காத்தருளும்"

சங்கீதம் 17:8

கிறித்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன். ஒரு வாலிப சகோதரனுக்காக ஜெபித்தபோது, கர்த்தர் அவனை நேசித்து அவனது வாழ்க்கையில் தான் செய்த அன்பு செயலை வெளிப்படுத்தினார். 'நீ தண்ணீரிலே மூழ்கி மரித்துப்போக வேண்டிய உன்னை அந்த நாளிலே காத்து இந்நாள் வரை உனக்கு ஜீவனைத் தந்து வழி நடத்தி வருகிறார். இந்த அன்பின் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நேசிப்பாய் என்றால் உன்னை அவர் அதிகமாய் ஆசீர்வதிப்பார்' என்ற வார்த்தைகளைக் கர்த்தர் சொன்ன போது உனக்கு நடந்தது என்று கேட்டேன்.

நீந்தத் தெரியாத நான் ஒரு நாள் மீன் பிடிக்கச் சென்றேன். அவ்வாறு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, தவறி விழுந்து விட்டேன். தண்ணீர் குடித்து திக்கு முக்காடினேன். அங்கு பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெரியவர் என்னைத் தண்ணீரில் இருந்து கிருபையாய் தூக்கி விட்டார் என்று தன் வாழ்வில் சிறு பிராயத்தில் நடைபெற்றதைக் கூறினான். உள்ளத்தில் கிறிஸ்துவின் அன்பை உணர்வடைந்தான்.

அன்பு சகோதரனே, சகோதரியே, நம்மை நேசிக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இவ்விதமாக பலவிதமான மரண கட்டுகளிலிருந்து நம்மை விடுவித்து கண்மணிப்போல காத்து வருகிறார். இந்த அன்பின் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நேசிக்க, அவரைத் துதிக்க, அவரை ஆராதிக்க இன்று நாம் இடம் கொடுக்கும்போது, சகல விதமான சத்துருவின் தந்திரங்களுக்கும், பிசாசானவனின் மந்திர தந்திர செயல்பாடுகளுக்கும் நம்மை விலக்கிக் காப்பார்.

"எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்" என்ற சங்கீதம் 121:1 ன் படி ஒத்தாசை அருளும் அந்த அன்பின் ஆண்டவர், உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார். "கண்மணியைப் போல என்னைக் காத்தருளும்" என்ற சங்கீதம் 17:8 ன் வாக்கியம் இன்றும் என்றும் நம் வாழ்க்கையில் நடைபெறுவதைக் காணமுடியும்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

சகோ. C. எபனேசர் பால்