முகத்தில் தோன்றி உள்ள பருக்கள், பலநிறமான புள்ளிகள் மாறி சுகமடைய ஒரு ஜெபம்

அன்பின் தேவனே, இந்த நல்ல ஜெப நேரத்திற்காக உம்மைத் துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். என் வாழ்வில் நீர் இம்மட்டும் செய்த எல்லா நன்மைக்காகவும், ஆசீர்வாதங்களுக்காகவும், ஸ்தோத்தரிக்கிறேன். இயேசு கிறிஸ்துவே, உம்முடைய நாமத்தினால் ஏறெடுத்த என் ஜெபத்திற்குப் பதில் தந்து என்னை ஆசீர்வதித்து, மகிழ்ச்சியாக்கினீர். அதற்காக என் நன்றியைத் தெரிவிக்கிறேன். இப்பொழுதும் கர்த்தாவே, என் முகத்தில் உண்டாயிருக்கிற கட்டிகளும், பருக்களும் என் தோற்றத்தை மிகவும் கெடுக்கிறது. அடிக்கடி அதை நினைத்து வருந்துகிறேன். மற்றவர்களின் முகத்தின் தோற்றத்தை நினைத்து ஒப்பிட்டு வருந்துகிறேன். இதற்குக்  காரணம் என்னுடைய பாவமோ என்று சஞ்சலப்படுகிறன். மற்றவர்களுடன் நான் பேசும்போது, அவர்களின் கண்கள் என் முகத்தை பார்க்கும்போது, உள்ளத்தில் வேதனையும் சோர்வும் அடைகிறேன். எவ்வளவுதான் நான் மேக்கப் செய்தாலும் அதை மறைக்க முடியவில்லை. அன்பின் தேவனே, எனக்கு இரங்கும். ஆலயத்திற்குச் சென்றால் எல்லாரும் அதைப்பார்த்து என்ன இது என்று கேட்பார்களே என்ற பயம் என்னைத் துக்கப்படுத்துகிறது. சிலர் சந்திப்பதையே நான் விட்டு விலகிச் செல்கிறேன். கர்த்தாவே, எனக்கு இரங்கும். ஏன் எனக்கு இது வந்தது என்று என் மனம் சிந்தித்து கலங்குகிறது. இது என்னை விட்டுப் போகுமா? அல்லது நிரந்தரமாக அப்படியே இருந்து விடுமோ என்ற பயமும் உண்டாகிறது. கர்த்தாவே நீர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும் என்ற வாக்கின்படி இந்த அருவருப்பான கட்டியும், பருக்களும், புள்ளிகளும் இன்றே என்னை விட்டு நீங்கச் செய்யும். என் கண் மற்றவர்களின் முகத்தையே பார்த்து சோர்வடைகிறேன். அன்பின் இயேசு கிறிஸ்துவே, எனக்கு இரங்கும். எத்தனை  காலம் ஆகும்  என்று ஏங்குகிற உள்ளத்தில் ஆறுதல் வரும்படி துரிதமாக அற்புதம் செய்வீராக. எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்று உம்மிடம் வந்த குஷ்டரோகியைச் சுத்தமாக்கினவரே, எனக்கு உதவிச் செய்யும். இது என்னில் தோன்றாதிருக்க உதவிச்செய்யும். உம்முடைய தழும்புகளால் குணமாகிறோம் என்ற வாக்கின்படி குணமாக்குவீராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டுகிறேன். நல்ல பிதாவே ஆமேன்.