பயத்துடன் வாழும் மக்களின் விடுதலைக்காக ஒரு ஜெபம்

அன்பின் தேவனே, குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஏறெடுக்கிற  என் ஜெபத்திற்கு கர்த்தாவே பதில் தாரும். எங்கள் நாட்டிலும், எங்கள் பகுதியிலும் பரவியிருக்கிற இந்த COVID-19 வியாதியினால் என்னிலும், இந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கும் என்ன நேரிடும் என்ற பயமும், பீதியும் பெருகியிருக்கிறது. கர்த்தாவே, என்றுமே இல்லாத இந்த பயத்தினால் எந்த வேலையும் சரியாக செய்ய முடியவில்லை. அடிக்கடி செல்போனிலும், பத்திரிக்கையிலும் என்ன செய்தி என்று பார்த்துக்கொண்டே இருக்கிறேன். எங்கும் பயணம் செய்ய முடியாத படியினால், என் பெற்றோரை, என் சகோதரியை, என் சகோதரனைப் பார்க்க முடியவில்லை. என் பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள் என்று அடிக்கடி போன் பண்ணிக் கேட்டுக்கொண்டு கவலையுடன் இருக்கிறேன். அலுவலக வேலையைக் கூட சரியாக செய்ய முடியவில்லை. மிகுதியான கவனக்குறைவு ஏற்படுவதால் பிரச்சனைகள் பெருகிக் கொண்டே இருக்கிறது. இயேசு கிறிஸ்துவே, எனக்கு, எங்களுக்கு இரங்கும். எப்பொழுது இந்த வேதனையான சூழ்நிலை மாறும் என்று ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் பிள்ளைகள் எங்கும் செல்ல முடியாததால் அவர்கள் காரியங்களைச் செய்வதே பெரிய கஷ்டமாக இருக்கிறது. அதிகநேரம் ஜெபிக்கமுடியவில்லை. வேதத்தைத் தியானிக்க முடியவில்லை. ஏதாவது வாகனச் சத்தம் கேட்டாலே மிகுந்த பயம் ஏற்படுகிறது. தபால் ஏதாவது வந்தாலே என்ன செய்தியோ என்று கலங்குகிறேன். ஒவ்வொரு நாளுக்கும் சமைக்க வேண்டிய பொருட்களை வாங்க சரியாக திட்டமிடுகிறேன். இருக்கிற வீட்டு சாமான்களைக் கொண்டு சமைக்கிறேன். நினையாத விதத்தில் காசும் விரையமாகிக்கொண்டே இருக்கிறது. எனக்கு இரங்கும் கர்த்தாவே, இந்த நிலை எப்பொழுது மாறும் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன். ஆலயத்துக்குச் செல்ல முடியாது துயரமடைகிறேன். எனக்கு, எங்களுக்கு இரங்கும் கர்த்தாவே. இவைகளை அதிகமாக நினைக்கும்போது என்னால் இரவிலும் சரியாக தூங்க முடியவில்லை. இயேசு கிறிஸ்துவே, என் பயம் இன்றே நீங்கி உம்மை துதிக்க, புகழ எனக்கு உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே வேண்டுகிறேன். நல்ல பிதாவே, ஆமென்.