அழைப்புக்கு ஏற்ற வாழ்வு வாழ ஒரு ஜெபம்

அன்பின் தேவனே, இந்த நல்ல ஜெப நேரத்திற்காக உம்மைத் துதிக்கிறேன், ஸ்தோத்திரிக்கிறேன். என்னைக் கிருபையாய் என் இக்கட்டான சூழ்நிலையின் நேரத்திலே அழைத்தீரே, அதற்காக ஸ்தோத்திரம். நான் என்னைக் குறித்து எண்ணும்போது, நான் இந்த அழைப்புக்குப் பாத்திரன் அல்ல. உமது தயவினாலே என்னை நீர் அழைத்தீர். இயேசு கிறிஸ்துவே, இதற்கு மேல் வாழவே முடியாது என்ற அந்த நேரத்தில் என்மீது அன்புவைத்து, என்னை அழைத்தீரே, அதற்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். நீர் என்னை அழைத்ததோடு எனக்குப் பாராட்டின கிருபைக்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். நீர் சர்வ வல்லவர் என்று நான் இப்பொழுது அறிந்திருக்கிறேன். நீர் சகல நன்மையான காரியங்களையும் செய்ய வல்லவர் என்று புரிந்திருக்கிறேன். நீர் எனக்கு ஈவாகக் கொடுத்திருக்கும் ஆசீர்வாதங்களுக்காக நன்றி கூறுகிறேன். வாழ்வில் என்றுமே எண்ணமுடியாத  ஆசீர்வாதங்களையும் எனக்குத் தந்தப்படியால் உம்மை நான் துதிக்கிறேன். 'நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து உன்னை எடுத்து, அதின் எல்லையிலிருந்து அழைத்து வந்து' என்ற வாக்கின்படி என்னையும் அழைத்து அரவணைத்துக் கொண்டிருக்கீறீரே, அதற்காக நான் உம்மைத் துதிக்கிறேன். இனி நான் என்ன செய்வது என்று மனம் உடைந்து கலங்கி இருந்த நேரத்தில் என்னைத் தூக்கி எடுத்தீரே. எசேக்கியா ராஜாவைப் போல மிகுந்த துக்கத்துடன் கண்ணீருடன் உம்மை நோக்கிப் பார்த்த எனக்கு, உம் அன்பின் காயப்பட்ட கரத்தை நீட்டி பயப்படாதே என்று தேற்றி, ஆற்றி, அழிவின் குழிக்கு விலக்கிக் காத்தீரே, அதற்காக ஸ்தோத்திரம். நான் மீண்டும் விழுந்து அழிந்து விடாதிருக்க ஏற்ற மக்களை எனக்கு ஒத்தாசையாக கொடுத்தீரே, அதற்காக ஸ்தோத்திரம். நீர் என்னை எந்த நோக்கத்துடன் அழைத்து வந்தீரோ, அந்த சித்தத்தை நிறைவேற்ற எனக்கு உதவிசெய்யும். உம்முடைய உதவி மாத்திரமே நிறைவானது. முழுமையானது, உண்மையானது என்று உணரச் செய்ய எனக்கு ஏற்ற போதனை கொடுத்தவரே, நான் என்றும் உமது வழியில் நடக்க எனக்கு உதவிசெய்யும். உம்முடைய உபகாரங்களை மறவாது துதிக்க எனக்கு உதவிசெய்யும். என்னை இம்மட்டும் அழைத்து ஆசீர்வதித்தவரே, என்னைத் தொடர்ந்து உம் வழியில் நடத்தும். என்னை வழுவாது காத்தருளும். எந்த பெலவீனங்களும் என்னை மேற்கொள்ளாது, உமது கரம் என்னைப் பாதுகாத்து, தாங்கி நடத்தட்டும். உம் அழைப்பை ஏற்று வாழ என் உள்ளத்தை, உணர்வை, வாஞ்சையை உமக்குரியதாக மாற்றிவிடும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்.