தீமையான பழக்கத்திற்கு அடிமையானவர்களின் விடுதலைக்காக ஒரு ஜெபம்

                          அன்பின் தேவனே, இந்த ஜெப நேரத்திற்காக உம்மைத் துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். இம்மட்டும் என்னைச் சுகமாய் காத்து வருகிற அன்பு செயலுக்காக ஸ்தோத்திரம். கர்த்தாவே, இன்று விடமுடியாத, நீர் விரும்பாத பழக்கங்கள் எனக்குப் பழக்கமாக மாறி விட்டது. இன்று தயவாய் எனக்கு இரங்கும். பலமுறை தீர்மானம் செய்தும், சில காலம் கழித்து மீண்டும் அதையே செய்கிறேன். இவ்விதமான இந்த வழக்கம் என்னையும், என்னைச் சார்ந்திருக்கிற குடும்பத்தையும் பாதித்துக் கொண்டேஇருக்கிறது. இந்தக் குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலைதாரும். ஆபாச படங்களைக் காணவேண்டும் என்ற எண்ணத்தை, வழக்கத்தை மாற்றும். தீய காரியங்களைச் செய்கிற உணர்வைத் தந்து கொண்டு இருக்கும் தீய சக்தியை அழித்து விடும். மற்றவர்களைப் பார்க்கும் போது, அவர்கள் நன்றாய் இருக்கிறார்களே, நான் ஏன் அவ்வாறு இருக்க முடியவில்லை என்று எண்ணுகிறேன். எனக்கு இரங்கும் இயேசுவே, எனக்கு இரங்கும். நான் உபவாசத்துடன் இருந்து ஜெபித்தாலும் இந்தப் பழக்கத்தை மேற்கொள்ள முடியவில்லையே என கலங்குகிறேன். கர்த்தாவே, என் சரீரத்தைக் கெடுக்கிற இந்தக் காரியம் என்னை விட்டு முற்றிலும் நீங்க எனக்கு உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவே, என் சிந்தை, என் எண்ணங்கள் சீர்பட உமது பாதத்தில் என்னைத் தாழ்த்தி வேண்டுகிறேன். நீர் ஒருவரே என்னை விடுவிக்க வல்லவர். இயேசு கிறிஸ்துவே, எனக்கு இரங்கும். யாராவது இதைச் செய்யாதே என்று சொன்னால் கோபமும், எரிச்சலும் அடைகிறேன். என் உள்ளத்தின் நிலையை அறிந்தவர் நீர் ஒருவரே. தயவாய் எனக்கு இரங்கும். இயேசுவே, என்ன காரியங்களை நான் செய்தால் இதிலிருந்து விடுதலையாக முடியும் என்று சில நேரங்களில் சிந்திக்கிறேன். எனக்கு இரங்கும் இயேசுவே, எனக்கு இரங்கும். என் தீய பழக்கத்தினால் என் பெற்றோர்கள் மிகுதியான  வருத்த மடைகிறார்கள். என் மனைவி/ என் பிள்ளைகள் இவ்விதமாய் இருக்கிறார்களே என்று கலங்குகிறதைக் கண்டும் உணர்ந்தும் விடமுடியாது தவிக்கிறேன். நீர் கட்டளையிட நிற்கும் என்று அறிந்து, உம் பாதத்தில் கெஞ்சுகிறேன். இயேசு கிறிஸ்துவே, எனக்கு இரங்கும். நான் இந்தப் பழக்கத்திலிருந்து விடுதலையடைந்து உமக்குச் சாட்சியாக வாழ எனக்கு உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்.