இப்புதிய ஆண்டின் சகல நல் ஆசீர்வாதங்களுக்காகவும், சுகம் பெலனுக்காகவும் ஒரு ஜெபம்

அன்பின் தேவனே, இந்த ஜெப வேளைக்காக நன்றி கூறுகிறேன். எனக்கும் என் குடும்பத்தாருக்கும் நீர் பாராட்டின கிருபைகளுக்காக என் உள்ளத்தில் ஆழத்திலிருந்து துதி, ஸ்தோத்திரங்களைச் செலுத்துகிறேன். இந்த ஆண்டை நான் காண்பேனோ என்று என் பெலவீனத்தின் போது எண்ணி கலங்கினேன். இயேசு கிறிஸ்துவே, நீர் என் வேதனைகளை நீக்கி சுகம், பெலனைப் பெருகச் செய்து இந்த ஆண்டைக் காணச்செய்த படியால் உம்மைப் போற்றி புகழுகிறேன். இந்த ஆண்டில் என்னைப் பிரவேசிக்கச் செய்த நீர் என்னையும், என் குடும்பத்தாரையும் உமது நல்ல ஆசீர்வாதங்களினால் முடிசூட்டும். என் உள்ளம் எதைக் குறித்தும் கலங்காமலும் கவலை கொள்ளாமலும் இருக்கத்தக்கதாக என் வாழ்க்கையை ஆசீர்வதியும். அன்பின் தேவனே, நீர் ஒருவரே என் உள்ளத்தின் தாகத்தை அறிவீர். அவைகள் எப்பொழுது தீர்க்கப்படும் என்ற ஏக்கமும் உண்டு. இன்று இந்தப் புதிய ஆண்டில் கிருபையாக பிரவேசிக்கச் செய்த நீர் அதைச் சீக்கிரமாய் தீர்ப்பீர் என்று உம்மைத் துதிக்கிறேன். இன்னும் கர்த்தாவே, என்னில் உள்ள எல்லா பெலவீனங்களையும் நீர் அறிவீர். இம்மட்டும் கிருபையாக எனக்கு இவைகளின் மத்தியில் சுகம், பெலன் கொடுத்து என்னை நடத்தி வருகிறபடியால் கோடாகோடி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறேன். உன் பெலவீனத்தில் என் பெலன் பூரணமாய் விளங்கும் என்று பவுலின் பெலவீனத்தில் கிருபை அருளி ஆசீர்வதித்த தேவனே, எனக்கும் இரங்கும். கர்த்தாவே, இந்த நாள் முதல் உமக்குப் பிரியமானதையே செய்ய எனக்கு உதவிசெய்யும். இந்த ஆண்டில் எந்த எதிர்பாராத கஷ்டங்களும், நஷ்டங்களும் வராது காத்துக் கொள்ளும் இயேசு கிறிஸ்துவே. 'நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து அதின் நடுவில் மகிமையாக இருப்பேன்' என்ற கர்த்தாவே, என் வீட்டையும் அவ்வாறே காத்து ஆசீர்வதியும். கர்த்தாவே, இந்த ஆண்டில் என் வருவாயை பெருகச் செய்வீராக. என் தொழிலை/ வியாபாரத்தை/ வேலையை ஆசீர்வதித்துத் தருவீராக. என் பிள்ளைகளின் வாழ்விலும் நல் ஆசீர்வாதங்களை அருளுவீராக. அவர்கள் ஒலிவமரக் கன்றுகளைப்போல வளரச் செய்யும். வேதத்தை நேசிக்கின்ற உள்ளத்தை உருவாக்கும் கர்த்தாவே. இந்த ஆண்டு மிகுந்த மேன்மையும் ஆசீர்வாதமும் நிறைந்த ஆண்டாக மாற்றித் தருவீராக. எனக்கு இரங்கி என் ஜெபத்தைக் கேட்டு என்னை ஆசீர்வதியும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்.