"உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்..."

                                                                                                                                                            ஏசாயா 54:17

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

ஒரு முறை ஒரு சகோதரி பல விதமான எதிர்ப்புகளுக்கு மத்தியில் நற்பணியில் உயர்வடைந்தார்கள். பதவியில் அமர்ந்தபின், பலவிதமான எதிர்ப்புகளை சந்தித்தார்கள். இந்த 'சீட்டில்' நான் தான் அமர வேண்டும் என்று முகத்திற்கு முன்பாகச் சொன்ன காரியங்கள் உள்ளத்தில் வேதனையை ஏற்படுத்தினது, கர்த்தரைச் சார்ந்திருந்தப்படியால் கலங்காதிருந்தார்கள். கணவனும், மனைவியுமாக சேர்ந்து ஜெபித்தார்கள். ஊழியர்களும் அவர்களுக்காக ஜெபித்தார்கள். "உன்னோடே  போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம் பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்." என்ற ஏசாயா 41:12ம் வசன வாக்கைப் பெற்றார்கள்.  அதிகமாக கார் ரிப்பேர் என்று பணத்தை மோசடி செய்திருந்த காரியத்தை அறிந்தார். இதைச் சரி செய்ய அந்தக் கார் கம்பெனியிலே ரிப்பேர் செய்ய மாற்றினார்கள். இதை அறிந்த அவன் மிகுந்த கோபத்துடன் எப்படி இந்தச் சீட்டில் அமர்வாய் என்று சவால் கூறிச் சென்றான். ஆனால் அடுத்த நாளே அவனது மரணம் திடீர் என ஏற்பட்டது. அவனது செயல் ஒன்றுமில்லாததாக மாறிற்று.

இன்று வேலைஸ்தலத்திலும், அக்கம் பக்கம் வசிக்கும் மக்களாலும், எப்பொழுது இவன் வீட்டை காலிபண்ணுவான், எப்பொழுது கடையை மூடுவான் என்று பொறாமை கொண்ட மக்களுக்கு முன்பாக வாழும் சகோதரனே/ சகோதரியே கலங்காதே. பூமியின் கடையாந்திரத்தில் இருந்து உன்னை அழைத்து வந்த அன்பின் தேவன் உன்னைக் கைவிடமாட்டார். உன்னை வெறுக்கமாட்டார். உனக்கு ஆதரவாக இருப்பார். உனக்காக யுத்தம் பண்ணுவார். உன் சத்துருக்கள் வெட்கப்படுவார்கள். கலங்காது உன்னை கண்மணிபோல் காத்து, உன்னையும் உன் குடும்பத்தையும், உன் பிள்ளைகளையும் ஆசீர்வதிப்பார்.

என்ன ஆகுமோ, என்ன நேரிடுமோ என்று எதைக் குறித்தும் எண்ணி கலங்காதே. 'உன் தேவனாகிய கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன்...' ஏசாயா 41:13 என்றவர் நேற்றும் என்றும் மாறாதவர். தாம் சொன்ன வாக்கை நம் வாழ்வில் நிறைவேறச் செய்து ஆசீர்வதிப்பார்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

சகோ. C. எபனேசர் பால்.