"...உன் நம்பிக்கை வீண் போகாது."

                                                                                நீதிமொழிகள் 23:18

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

ஒரு முறை ஒரு சகோதரர் ஒருவர் என் பெயரைக் கேட்டு விசாரித்து என்னுடன் தொலைபேசியில் பேச ஆரம்பித்தார். அவருடைய குடும்பத்தைச் சார்ந்த ஒருவரின் திருமண காரியம் நடைபெற்ற நாளில் தன் கையில் இருந்த பத்து சவரன் நகையை பையில் வைத்திருந்ததை இழந்து போய் விட்டோம் என்று அதற்காக ஜெபிக்கும்படி கூறினார்கள். இழந்து போன நகை திரும்ப கிடைக்க வேண்டும் என்று மிகுந்த பதற்றத்துடன் கூறினார்கள். அவர்களுக்காய் ஜெபித்த போது, அந்த நகைகள் அதே பையில் இருக்கிறது, கலங்க வேண்டாம் என்று கூறினேன். அவரும் சரி என்று போனை வைத்து விட்டார். சில மணி நேரம் கழித்து மீண்டும் நகை கிடைத்து விட்டது, அதே பையில்தான் இருந்தது என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறினார்கள். அந்தப் பையை வைத்து இருந்த சகோதரி, உடை மாற்றுவதற்காக சென்றிருந்த பொழுது வேறொரு வீட்டிலே அந்தப் பையை வைத்து விட்டு மற்றப் பையில் நகை இருக்கிறதா என்று தேடினபடியால் இந்தப் போராட்டம் வந்தது.

அன்பு சகோதரனே, சகோதரியே, நாம் எதைச் செய்தாலும், எதை வைத்திருந்தாலும் மிகுந்த கவனமாக நம் காரியங்களைச் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். மறதியினாலும் கவனக் குறைவினாலும் பதற்றமும், பாடுகளும் பெருகிவிடும். நமது உடைமைகளை நாம் இழந்து விடுவோம் என்ற எண்ணத்திற்கு இடம் கொடாதபடி கர்த்தர் அதைக் காத்து நிறைவாய்த் தந்து ஆசீர்வதிப்பார் என்று விசுவாசித்து தேவனைத் துதிப்போம், ஸ்தோத்தரிப்போம்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

 சகோ. C. எபநேசர் பால்.