கிறிஸ்துவில் பெலனடையும்படி ஒரு ஜெபம்

                           அன்பின் தேவனே, இந்த நல்ல ஜெப நேரத்திற்காக நன்றி கூறுகிறேன். இம்மட்டும் என்னுடைய ஜெபத்தைக் கேட்டு கர்த்தாவே, பல இக்கட்டுகளுக்கு என்னையும், என் குடும்பத்தையும் விலக்கிக் காத்தபடியால் மிகுதியான ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறேன். கர்த்தாவே, என் பெலவீனங்களை எல்லாம் நீர் அறிவீர். கடந்த சில நாட்களாக என்னில் என் சரீரத்தில் தோன்றியுள்ள பெலவீனங்களை நீர் அறிவீர். உன்னைப் பெலப்படுத்தி உனக்குச் சகாயம் செய்வேன் என்று சொன்னவரே, உம்முடைய அன்பை, உம்முடைய கிருபையைப் பெருகச் செய்து தயவாய் எனக்கு புது பெலன் தாரும். சில சமயங்களில் வயது ஆகிறபடியால் என் பெலவீனம் பெருகுகிறதோ என்று கலங்குகிறேன். ஆனாலும் நீர் ஒருவரே எனக்குச் சகாயம் செய்து என்னைப் பெலப்படுத்தி வழி நடத்தக் கூடியவர் என்று அறிந்து துதிக்கிறேன். ஸ்தோத்தரிக்கிறேன். உம்மில் 40 வருடமாய் வழி நடத்தப்பட்ட இஸ்ரவேலருக்குள்ளாய் எந்த பெலவீனமும் காணப்படவில்லை. கால்கள் வீங்கவும் இல்லை என்று எழுதியிருக்கிறதே. இயேசு கிறிஸ்துவே எனக்கு இரங்கும். இயேசு கிறிஸ்துவே என் பெலவீனத்தினால்/ என் சர்க்கரை நோயினால் / இரத்த அழுத்தத்தினால் கால்களில் உண்டான வீக்கங்களும், வேதனைகளும் நீங்கி, நான் பெலனடைய கெஞ்சுகிறேன். நீர் ஒருவரே எனக்கு சுகமும் பெலமும் தர வல்லவராய் இருக்கிறீர். கர்த்தர் தம்முடைய ஜனத்திற்குப் பெலன் கொடுப்பார் என்ற வார்த்தையின் படி நான் உமது சமுகத்திலே செட்டைகளை அடித்து எழும்பி, ஓடினாலும் களைப்படையாத பெலத்தைத் தாரும். கர்த்தாவே, என் ஆத்துமாவிலே பெலன் தாரும். என் எல்லா பயமும் நீங்கவும், என் ஆத்துமாவிலே பெலன் அடைந்து தைரியமாய் உமது நாமத்தை உயர்த்திச் சொல்ல உதவி செய்யும். நீர் ஒருவரே என் ஆவியிலே பெலனைத் தந்து, உமது நல்ல நாமத்தை சாட்சியாய்ச் சொல்ல கிருபை  செய்வீராக. நான் என் ஆவி, ஆத்துமா, சரீரத்தில் பெலன் அடைந்து, இன்று முதல் என்றும் உமக்காக வாழ உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பிதாவே ஆமென்.