"நான் அதற்குச் சுற்றிலும் அக்கினிமதிலாயிருந்து,

                                                    அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்."

                                                                                                                                                                                                     சகரியா 2:5

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

ஒரு முறை ஒரு பகுதி ஊழியத்தில் அந்த போதகருடன் தங்கி அவரது திருச்சபையிலே கூட்டங்களை நடத்தினோம். அந்த ஆலயம் ஒரு கிராமப் பகுதியில் இருந்தது. ஆலயத்திற்கு முன்பாக பெரிய மைதானமாக இருந்தது. அந்த ஆலயத்தைச் சுற்றி நல்ல காம்பவுண்ட் சுவர் இருந்தது. அந்த முன்பகுதி சுவரில் பெரிய கேட்டும் அமைந்திருந்தது. குருவானவர் வெளியே அடிக்கடி சென்று வந்து கொண்டு இருந்தபடியால் அந்தக் கேட்டை பூட்டுவது கிடையாது. அது திறந்தே கிடக்கும். ஆலயத்திற்கு முன்பாகச் சாலையும் அதற்கு அந்தப்புறத்தில் முட்செடிகளும் சில வீடுகளும் அமைந்து இருந்தது. முன்பகுதி காம்பவுண்ட் சுவரில் உள்ள கதவு திறந்திருந்தபடியால், இரவு நேரத்தில் சிலர் உள்ளே வந்து சற்று நேரம் அமர்ந்து பேசிக் கொண்டிருப் பார்கள். குருவானவரிடம் உங்களிடம் போலீஸ் வந்து எதையோ விசாரிப்பதுபோல ஒரு காரியம் என் மனதில் வந்தது. ஆகவே உங்கள் ஆலய முன் காம்பவுண்டில் உள்ள கதவை இரவு பூட்டி விடுங்கள் என்ற ஆலோசனையும் கூறினேன். குருவானவரும் ஆலோசனையின்படி இரவில் அந்த காம்பவுண்ட் கதவை பூட்டி வைத்தார்கள். சில தினங்கள் கழித்து ஒரு சம்பவம் நடந்தது. ஒரு மனிதனைக் கொன்று செத்த சடலத்தை ஆலய கதவுக்கு முன்பாகத்தில் போட்டு இருந்தார்கள். கதவு  பூட்டப்பட்டு இருந்தபடியால் செத்த சடலத்தை ஆலய மைதானத்தில் போடவில்லை. குருவானவரை ஒருவரும் ஒன்றும் சொல்லவில்லை. கேட்கவுமில்லை. 

நம்மை நேசிக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நாம் எந்த விதப்  போராட்டத்திற்கும் உட்படாதிருக்க வேண்டும் என்று யோசனைகளையும், ஆலோசனையும் தருகிறார். அதை முழுமையாக நாம் ஏற்றுச்செய்யும் பொழுது கர்த்தரின் உன்னத பாதுகாவலை நாம் பெற்றுக் கொள்ள முடியும். பலவிதங்களில் நம் வாழ்க்கைக்கு ஏற்ற நல்ல ஆலோசனைகளை, ஆலோசனைக் கர்த்தர் தருகிறார். நாம் உணர்ந்து, புரிந்து, ஏற்றுச் செய்யும்போது, எந்தத் தீங்கும் நம்மை அணுகாது. நம்மைத் துக்கப்படுத்தாது.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

சகோ. C. எபநேசர் பால்.