வீண் மாயைகளை நம்பி பின் பற்றி வருகிறவர்கள்

                                                                   கிறிஸ்துவின் மேலேயே நம்பிக்கை வைக்க ஒரு ஜெபம்

             அன்பின் தேவனே, இந்த ஜெப நேரத்திற்காக நன்றி கூறுகிறேன். இம்மட்டும் நீர் எனக்குப் போதுமானவராக இருந்தீர், இருக்கிறீர். அதற்காக ஸ்தோத்திரம். கர்த்தாவே, உம்முடைய கிருபையின் கரம் என்னைத் தாங்கி வருவதால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். என் வாழ்க்கையில் நான் உம்மால் காக்கப்பட்டும், போஷிக்கப்பட்டும், வருவதற்காக மிகுந்த நன்றி நிறைந்த உள்ளத்தில் இருந்து உம்மைத் துதிக்கிறேன். கர்த்தாவே, நான் உம்மோடு இன்னும் நெருங்கி ஜீவிக்க என்னை அர்ப்பணித்திருந்தாலும் எனக்குள் சில காரியங்கள் இன்னும் தவறாக இருக்கிறது. எனக்குச் சொல்லப்பட்ட காரியங்களைச் சில வேலைகளிலே எண்ணுகிறேன். என் வலது கையில் ஊரல் எடுக்கும்போது, இன்று வீணான செலவு வரும் என்ற பயத்தையும் உள்ளத்தில் பெருகச் செய்துவிடுகிறது. இதை மேற்கொள்ள வேண்டும். என் நம்பிக்கை கர்த்தர் மேலே மாத்திரம் இருக்க வேண்டும் என்று எண்ணினாலும், மாயையான காரியம் என்று உணர்ந்திருந்த போதும் வீண் கவலைகளுக்கு இடம் கொடுத்து விடுகிறேன். இந்தக் காரியம் நான் எந்தக் காரியத்தை அந்த நாளிலே செய்தாலும் முழு கவனமும் இல்லாத நிலை ஏற்படுகிறது. என் சமாதானத்தைக் காத்துக் கொள்ள வகை செய்யும். இதைப் போல வாஸ்து, நாள், பிறந்த நட்சத்திரத்தின் ராசிபலன் என்று பல காரியங்கள் என் மனதைக் கெடுக்கிறது. என்னை அறியாமல் வீணான வார்த்தைகளை அலப்புகிறேன். எனக்கு இரங்கும் கர்த்தாவே, எனக்கு இரங்கும். நான் உம்மை மாத்திரம் முழுமையான நம்பி வாழ எனக்கு உதவி செய்யும். இவ்வாறான வீண் நம்பிக்கையைக் கொடுக்கும் மனதைச் சிதறடிக்கும் காரியத்தை, எனக்குள் இருந்து நீக்கிப் போடும். நீர் ஒருவரே அதை அறிவீர். மாற்ற வல்லவராயிருக்கிறீர். எனக்கு இரங்கும், இயேசு கிறிஸ்துவினால் வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்.