"...விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல,
                     இரங்குகிற தேவனாலேயாம்."

                                                                                             ரோமர் 9:16

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் அன்பின் பண்புகளிலே மேன்மையானது இரக்ககுணமாகும். நம்முடைய தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் இருக்கிறார். அவர் இரங்கும் போது பலவிதமான ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்கிறோம். சிலர் எனக்கு இரங்குகிற பிள்ளைகள் ஒருவரும் இல்லையே என்று தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள். சிலர் நன்றாய் வாழ்ந்திருந்தும், ஏற்பட்ட வெறுமையான நிலையினாலும், எல்லாரும் கைவிடப்பட்டபடியினாலும், இரக்கம் பெற்றுக்கொள்ள வழியில்லாதபடியினாலும் வாழவேண்டும் என்ற எண்ணத்தினாலே சாலையில் செல்பவர்களிடம், தெருக்களில் வீடுகளிலே பிச்சை கேட்கிறவர்களாய் இருக்கிறார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனதுருக்கம் நிறைந்தவராய் இருக்கிறார். அவருடைய இரகத்திற்கு முடிவே கிடையாது. ஏசாயா 54:6 ல் சொல்லப்பட்டபடி, கைவிடப்பட்டு மனம் நொந்தவளான ஸ்திரீயைப்போலவும், இளம் பிராயத்தில் விவாகஞ்செய்து  தள்ளப்பட்ட மனைவியைப்  போலவும் இருக்கிற உனக்குக் கர்த்தர் இரக்கம் செய்ய விரும்புகிறார். ஏசாயா 54:8 ல் உள்ளபடி 'அற்பக்காலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன்.' என்று சொன்ன கர்த்தர் நேற்றும் இன்றும் மாறாதவராய் இருக்கிறார்.

அன்பு சகோதரனே, சகோதரியே, எனக்கு இரங்குவார் ஒருவரும் இல்லை. நானோ பெலவீனம் அடைந்து விட்டேன், எல்லாராலும் அற்பமாய் எண்ணப் படுகிறேன். இனி சாவு தான் எனக்கு என்று வேதனையான வாழ்க்கை வாழ்கிறேன் என்று கலங்குகிற தேவப்பிள்ளையே, கர்த்தர் உனக்கு நித்திய கிருபையுடன் இரங்குவேன் என்று சொல்கிறார். அவருடைய இரக்கத்தினாலே மகிழ்ச்சியும் மேன்மையும் அடைவாய். சகல நாட்களிலும் சமாதானமும் சந்தோஷமும் அடைவாய்.

பாவம் செய்த தாவீது சங்கீதம் 51:1 ல் 'தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும்' என்று கெஞ்சுகிறதை நாம் காண முடிகிறது. 'எனக்கு இரங்கும் கர்த்தாவே, நான் நெருக்கப்படுகிறேன்' என்று சங்கீதம் 31:9 ல் தாவீது சொல்வதைப் பார்க்கிறோம். 'எனக்கு இரங்கும்; நான் தனித்தவனும் சிறுமைப்படுகிறவனுமாயிருக்கிறேன்' என்று தாவீது சங்கீதம் 25:16 ல் பார்க்க முடிகிறது. புலம்பல் 3:32 ல் 'அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்.' என்று பார்க்கிறோம். இவ்வண்ணமாய் நமக்கு இரக்கம் செய்கிற அன்பின் தேவன் மனிதரால் நினைத்தும் உணர்ந்தும் கொள்ள முடியாத பெரிய காரியங்களைச் செய்து, நம்மை சம்பூரண ஆசீர்வாதங்களினால் நிரப்புகிற தேவனாய் இருக்கிறார். அவர் சொல்ல ஆகும். அவர் கட்டளையிட நிற்கும் என்ற வாக்கின்படி நமக்கு அவர் இரங்கி நன்மையானவைகளைப் பெருகச் செய்வார். 

I. கர்த்தர் அருளும் இரக்கத்தினால் உண்டாகும் ஆசீர்வாதங்கள்

1.இரக்கத்தினால் விடுதலை உண்டாகும்

"...அவர்கள் மனந்திரும்பி, உம்மை நோக்கி கூப்பிட்டபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, அவர்களை உம்முடைய இரக்கங்களின் படியே அநேகந்தரம் விடுதலையாகிவிட்டீர்." நெகேமியா 9:28

இன்று மனிதனுடைய வாழ்க்கையில் பல காரியங்களில் விடுதலை அவசியமாய் இருக்கிறது. இந்த விடுதலையை தேடி அலைகிறவர்கள் தவறான நம்பிக்கைக்கு ஆளாகி அவதிப்படுகிறார்கள். ஒருமுறை ஒரு சகோதரனுக்கு ஜெபிக்கும்போது உங்கள் அடுப்பு மேடையில் எதைப் புதைத்தீர்கள் என்று கேட்டேன். வீட்டினுடைய அப்பம் குறைவுபடாதிருக்க வேதத்தை நம்பாத ஒருவர் ஒரு ஆலோசனை கொடுத்திருக்கிறார். இந்த ஆலோசனையைக் கேட்ட சகோதரரும் தன் வீட்டின் சாப்பாட்டு பிரச்சனை வராதிருப்பதற்கு அந்த அடுப்பு மேடையில் ஒரு நாணயத்தைப் புதைத்தார். அத்துடன் அந்த இடத்தை மூன்று முறை சுத்தி வரவேண்டும். இதை நடுஇரவிலே எந்த உடையும் தரியாதபடி செய்யச் சொன்னபடியினால் அதை அப்படியே செய்தேன் என்றார். அன்று கர்த்தர் வெளிப்படுத்திய காரணத்தினால் கர்த்தரை நம்பி, தன் தவறுகளை யெல்லாம் தேவ சமுகத்திலே சொல்லி மனந்திரும்பினபோது, அவனுடைய வாழ்க்கையிலே வேலைக்குச் செல்லக்கூடிய நிலை உருவானது. ஆகாரக் குறைவும், பஞ்சமும், பசியும், இல்லாத வாழ்க்கை வாழ துவங்கினார்.

மனிதனுடைய வாழ்க்கையிலே பாவத்திற்கு அடிமையாய் வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள் ஏராளம். இந்தப் பாவத்தை என்னால் விட முடியவில்லை. இதை மேற்கொள்ளவும், முடியவில்லை என்று கலங்குகிற மக்களும் உண்டு. நான் என்னுடைய போனுக்கு அடிமையாய் இருக்கிறேன். தவறான காரியங்களை இரவிலே பார்க்கிறேன். எனக்கு நேரம் இருக்கும் பொழுதெல்லாம் அருவருப்பான பாவக் காரியத்தைச் செய்து இதற்கு அடிமையாய் இருக்கிறேன் என்று கலங்குகிறவர்கள் அநேகர் உண்டு.

இன்னும் சிலர் பிசாசுக்கு அடிமையாகி மிகுந்த போராட்டத்தோடு தங்கள் வாழ்நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிசாசின் கிரியைகளை அழித்து, பிசாசுகளைத் துரத்தி விடுதலைத் தருகிற உன்னதமான தேவனாயிருக்கிறார். இயேசு கிறிஸ்து விடுதலை யாக்கினால் மெய்யான விடுதலையாவீர்கள். இன்றைக்கு சூனியம், பலவிதமான தீய ஆவிகளின் தாக்குதல், பிசாசினால் உண்டான நோயினால் பாதிக்கப்பட்டு வேதனையோடு வாழ்கிற தேவப்பிள்ளையே, கர்த்தரை நம்பி சத்தியத்தை அறிந்து கொள்ளுங்கள். சத்திய பரனாகிய இயேசு கிறிஸ்து உங்களுக்கு இரக்கம் செய்வார். அந்த இரக்கத்தினாலே விடுதலையாவீர்கள்.

இதைப்போல அநேகர் வியாதிக்கும் பலவிதமான பெலவீனங்களுக்கும் அடிமையாகி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான அடிமைத்தனத்தில் இருந்து இயேசு கிறிஸ்து தம்முடைய இரத்தத்தினாலே உங்களைக் குணமாக்கி ஆசீர்வதிக்கிறார். இன்னும் சிலர் கடன் வாங்கி கடன் கொடுத்தவர்களுக்கு அடிமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு வாழ்கிற மக்களுக்கு கர்த்தர் இரக்கம் செய்து, அவர்களை ஆசீர்வதிக்கிறார். நீயோ கடன் வாங்குவதில்லை. அநேக ஜாதிகளுக்கு கடன் கொடுப்பாய் என்று சொல்லுகிற படியினால், நம் வாழ்க்கையை மாற்றி, கடன் தொல்லையிலிருந்து விடுதலையாக்கி ஆசீர்வதிக்கிறார். இன்றும் அநேகரில் உள்ள மரண பயத்திலிருந்து விடுதலை தந்து ஆசீர்வதிக்கிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இரங்குகிற தேவனாய் இருக்கிறபடியினால் அனைத்து காரியங்களிலும் விடுதலை அடைகிறோம்.

3.இரக்கத்தினால் கேடானவைகளுக்குத் தப்பி விலகச் செய்கிறார்

"அவன் தாமதித்துக் கொண்டிருக்கும்போது, கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள்."ஆதியாகமம் 19:16

கர்த்தர் லோத்தின் மேல் இரக்கம் வைத்தபடியினால் தேவனுடைய அக்கினி சோதோம் கொமோராவை அழிப்பதற்கு இறங்கும் முன்னாக சோதோமை விட்டு லோத்தையும் அவன் குடும்பத்தையும் அந்த இடத்திலிருந்து வெளியே அழைத்துக் கொண்டு போனார். கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலகிக் காப்பார் என்று சொன்ன தேவன் இன்றைக்கு ஜீவிக்கிறார். இன்று மனிதர்களுடைய அகங்காரத்துக்கும் நாவுகளின் சண்டைக்கும் விலக்கிக் காத்து பாதுகாக்கிற தேவன், உன்னை ஒருபோதும் கைவிடமாட்டார். தாவீது சொன்னது போல என் துர்க்குணத்திற்கு என்னை விலக்கிக் காத்துக் கொண்டேன் என்று நாம் சொல்லும்போது, கர்த்தரின் பெரிதான இரக்கத்தினாலே கிருபையாகக் காக்கப்படுவோம்.

ஒருமுறை ஒரு தலைமை ஆசிரியர் அவருடைய நண்பரோடு ஆலய வளாகத்தில் கட்டப்பட்டு வந்த மண்டபத்தை எவ்வளவு தூரம் கட்டியிருக் கிறார்கள். எவ்வளவாய் கட்டுமான பணி நடைபெறுகிறது என்று காலை நேரத்தில் பார்க்கச் சென்றார். அந்த ஆலய மண்டபத்தின் நீளமான உத்திரம் எல்லாம் காங்கிரீட் போடப்பட்டு முடிந்த நிலையில் இருந்தது, சிறிது நேரம் அங்கும் இங்கும் எல்லாவற்றையும் பார்வையிட்ட பின்பு, அந்த மண்டபம் எவ்விதமாய் தோற்றமளிக்கும் என்று அம்மண்டபத்திற்கு வெளியே நின்று பார்த்துவிட்டு, வீடு செல்ல திரும்பினார். 4, 5 அடிகள் காலடி எடுத்து வைத்தபோது, ஒரு பகுதி கட்டிடத்தின் காங்கிரீட் உத்திரமானது திடீரென கீழே விழுந்தது. இந்த சகோதரர் சேதமின்றி கர்த்தருடைய இரக்கத்தினாலே அந்த கொடூர விபத்திற்கு விலக்கிக் காக்கப்பட்டார். கர்த்தர் நம் மேல் இரக்கமாய் இருக்கும்போது சகலவிதமான தீமைக்கும், பாடுகளுக்கும் பெலவீனங்களுக்கும் போராட்டங்களுக்கும், விபத்துக்களுக்கும், அழிவுக்கும் விலக்கிக் காக்கிறவராய் இருக்கிறார்.

3. இரக்கத்தினால் சுகமடைகிறோம்

"அவள் உங்கள் எல்லார்மேலும் வாஞ்சையுள்ளவனும், தான் வியாதிப் பட்டதை நீங்கள் கேள்விப்பட்டதினாலே மிகவும் வியாகுலப்படுகிறவனு மாயிருந்தான்.

அவள் வியாதிப்பட்டு மரணத்திற்குச் சமீபமாயிருந்தது மெய்தான். ஆகிலும், தேவன் அவனுக்கு இரங்கினார் ; அவனுக்கு இரங்கினது மல்லாமல், துக்கத்தின்மேல்  துக்கம் எனக்கு உண்டாகாதபடிக்கு, எனக்கும் இரங்கினார் ." பிலிப்பியர் 2:26,27

கர்த்தராகிய தேவன் நம்மைக் காத்து சுகமாயிருக்கப் பண்ணுகிற தேவன். கர்த்தரின் நாமம் பலத்த துருகம். நீதிமான் அதற்குள் ஓடி சுகமாயிருப்பான். கர்த்தர் நமக்கு இரங்கும்போது, நம்முடைய நோயின் தன்மைகள் நம்மை விட்டு விலகிவிடும். நம்முடைய பெலவீனங்கள் நீங்கும். துஷ்ட மிருகங்களைக் கர்த்தர் அகற்றி நமக்குள் சுகவாழ்வை மலரச் செய்கிற தேவன். கர்த்தராகிய இரக்கம் நிறைந்த இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவரிடம் வரும்போது, நம்முடைய வேதனைகளை நீக்கி சுக வாழ்வை மலர்ச் செய்வார். நமக்கு இரங்குகிற தேவன் இன்றும் ஜீவிக்கிறார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மத்தேயு 8:17 ன் படி நம் பெலவீனங்களை ஏற்று நம்முடைய நோய்களைச் சுமந்து தீர்த்திருக்கிறார். அவருடைய தழும்புகளினாலே நாம் குணமாக்கப்படுகிறோம். ஊழியர்களுடைய சுக நலன்களை விரும்புகிற தேவன். பிலிபியர் 2:27 ன் படி எப்பாப்பிரோதீத்துவிற்கு இரங்கினார். அவன் மரண நோயின் கட்டுகளிலிருந்து குணமடைந்தான்.

கர்த்தர் இரங்குபோது மாத்திரமே நாம் சுகத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். ஓடுகிறவனாலும் அல்ல, விரும்புகிறவனாலும் அல்ல, இரக்கம் செய்கிற தேவனாலே நம் வாழ்க்கையில் உண்டாகும் வேதனையிலிருந்து சுகமடைகிறோம். நித்திய கிருபையுடன் இரங்குவேன் என்று சொன்னவர், தமது கிருபையினாலே நம்மைக் குணமாக்குகிறார். மனதுருக்கம் நிறைந்த இயேசு கிறிஸ்து தமது இரக்கத்தினாலே, தாம் பூமியிலே வாழ்ந்த காலத்தில் தீண்டப் படாத குஷ்டரோகிகளையும் தொட்டு சுத்தமாக்கினார். பர்திமேயு என்ற குருடன் இயேசு கிறிஸ்து அந்த வழியாய் வருகிறார் என்று கேள்விப்பட்டு, இயேசுவே, தாவீதின் குமரனே எனக்கு இரங்கும் என்று கூப்பிடத் தொடங்கினான். அவனைப் பேசாதிருக்கும்படி மற்றவர்கள் அதட்டினபோது, இன்னும் மிகுதியான சத்தத்தோடு தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டான். இயேசு கிறிஸ்து நின்று அவனைக் கூப்பிட்டு வரச்சொல்லி, நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்.  அதற்கு அவன், 'ஆண்டவர , நான் பார்வையடையவேண்டும்' என்றான். இயேசு அவனுக்கு இரங்கினார். உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்று சொல்லி அனுப்பினார். உடனே அவன் பார்வையடைந்து இயேசுவுக்கு பின் சென்றான். குருடனாய் இருந்தவன் இரக்கத்திற்காக கதறியபோது, சுகமடைந்து இயேசுவுக்குப் பின்சென்றான்.

4.இரக்கத்தினால் குறைவு நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்

"கர்த்தர் அவளிடத்தில் தம்முடைய இரக்கத்தை விளங்கப் பண்ணினாரென்று அவளுடைய அயலகத்தாரும் பந்து ஜனங்களும் கேள்விப்பட்டு, அவளுடனே கூடச் சந்தோஷப்பட்டார்கள்." லூக்கா 1:58

ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் இரக்கம் செய்வேன் என்று சொன்ன தேவன் தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலைக் ஆதரித்தார். மலடியாயிருந்த எலிசபெத்தின் கணவர் ஊழியம் செய்கிறவனாய் இருந்தான். இந்த ஊழியனாகிய சகரியாவும் வயது சென்றவனாய் இருந்தான். கர்த்தர் அவனுக்கு இரக்கம் செய்தபடியால், மலடியாயிருந்த எலிசபெத்துக்கு வயதான காலத்தில் ஒரு ஆண் பிள்ளை பிறந்தது. கர்த்தர் அவனிடத்திலே தமது இரக்கத்தை வெளிப்பட பண்ணினதினாலே அயலகத்தாரும் பந்து ஜனங்களும் அவர்களோடே கூடச் சந்தோஷப்பட்டார்கள்.  கர்த்தர் நமக்கு இரங்கும்போது, நம் குறைகளைத் தீர்த்து நிறைவைத் தருவார்.

இன்று குறைவோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சகோதரனே, சகோதரியே, தேவன் தம்முடைய ஐசுவரியத்தின் மகிமையினாலே நிறைவாக்குவேன் என்றவர் இன்றைக்கே உனக்கு இறங்கி உன் குறைவை நிவர்த்தி ஆக்குவார். பிள்ளையில்லாத குறைவினாலே கலங்குகிற தேவப்பிள்ளையே, உன் குறைகளை மாற்றி, உன் காயங்களை ஆற்றி, உன் கண்ணீரைத் துடைக்கக் கூடிய அன்பின் இயேசு கிறிஸ்து இன்றைக்கும் ஜீவிக்கிறார். அவர் சமுகத்திலே இரங்கும் என்று கேட்கும்போது, நீங்கள் வேண்டுதல் செய்யும்போது, அவர் மனதுருகி உங்கள் குறைவை நிவிர்த்தி ஆக்குவார்.

5. இரக்கத்தினால் திரும்ப நிலைக்கப்பண்ணி, செவிகொடுப்பார்

"நான் யூதா வம்சத்தாரைப் பலப்படுத்தி, யோசேப்பு வம்சத்தாரை இரட்சித்து, அவர்களைத் திரும்ப நிலைக்கப்பண்ணுவேன்; நான் அவர்களுக்கு இரங்கினேன்; அவர்கள் என்னால் ஒருக்காலும் தள்ளி விடப்படாதவர்களைப்போல் இருப்பார்கள்; நான் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர், நான் அவர்களுக்குச் செவிகொடுப்பேன்."
சகரியா  10:6

எந்தப் பாவியையும் புறம்பே தள்ளேன் என்று சொன்னவர், ஏழெழுபது தரம் மன்னிக்கச் சொன்னவர் மாறாதவராய் இருக்கிறார். எச்சரிக்கப்பட்ட பேதுரு தனக்குச் சொல்லப்பட்ட எச்சரிப்பை மறந்து சூழ்நிலையைக் கண்டு பயந்து இயேசு கிறிஸ்துவை மறுதலித்தான். அவரை அறியேன் என்று சத்தியம் பண்ணவும் சபிக்கவும் செய்தான். இயேசுவின் வார்த்தைகளை அவன் நினைந்து உணர்ந்தபோது, மனங்கசந்து அழுதான். இயேசு கிறிஸ்து அவனுக்கு இரக்கம் செய்ததோடு உயிர்த்தெழுந்த பின்பு பின்மாற்றமடைந்த அவனைச் சந்தித்தார். அவனது வாழ்க்கையை அவருக்குப்பின் தொடர்ந்து ஊழியத்தைச் செய்ய ஆயத்தப்படுத்தினார். ஆனால் அவனைப் பார்த்து யோனாவின் குமாரனாகிய சீமோனே என்னை நேசிக்கின்றாயா? என்று மூன்று முறை கேட்டு அவன் உள்ளத்தை கிறிஸ்துவுக்காக வாழ உருவாக்கினார். அவனை நிலைப் படுத்தினார். அவனைத் தள்ளிவிடவில்லை. அவன் ஜெபத்தைக் கேட்டு அற்புதமான காரியங்களைச் செய்கிறவனாய் மாற்றினார். அவனை ஊழியத்திலும் நிலைக்கப்பண்ணி, அநேகரை நீதிக்குள்ளாக்கினார். அவனது செய்தியைக் கேட்டு அநேகர் இரட்சிக்கப்பட்டார்கள்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, பின்மாற்றம் அடைந்து மறுதலித்த பேதுருவை கிறிஸ்துவுக்குள் வாழ நிலைக்கப்பண்ணி, ஜெபத்தை கேட்டவர், உன் ஜெபத்தையும் கேட்டு இரக்கம் செய்து உன்னை ஆசீர்வதிப்பார்.

II. யார் தேவனின் இரக்கத்தைப் பெறுவார்கள்?

1. பாவத்தை அறிக்கை செய்து விட்டு விடுபவர்கள்

"தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்." நீதிமொழிகள் 28:13

இன்று நம்முடைய பாவங்களை உண்மையாய் அறிக்கை செய்ய இடம் கொடுக்கும்போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உன் பாவத்தை மன்னித்து உனக்கு இறங்குவார். அநேக நேரங்களில் நம் பாவங்களை அறிக்கை செய்கிறோம். அனால் அதை விட்டுவிடாதிருக்கிறோம். கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, உங்கள் பாவங்கள் தேவனுடைய இரக்கத்தைப் பெறுவதற்கு மிகுந்த தடையாக இருக்கிறது. ஏசாயா 59:1,2 ல் 'இதோ இரட்சிக்கக்கூடாதபடிக்கு கர்த்தருடைய கை குறுகிப்போகவும் இல்லை.; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை. உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாத படிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.' என்று பார்க்கிறோம். ஜெபத்தைக் கேட்கிற தேவன் நம் மீது அன்புகூருகிறவராக இருக்கிறார்.  நாம் பாவிகளாய் இருக்கையிலே, அவர் நம்மை நேசித்து தன் ஜீவனை நமக்காய் கொடுத்தார். அவர் சிந்திய இரத்தத்தினாலே பாவங்கள் நீக்கப்பட்டு தூய்மையின் வாழ்வை பெற்றுக்கொள்கிற பாக்கியவான்களாய் இருக்கிறோம். வழிவிலகி ஏகமாய் கெட்டுப்போன நம்மை பூமியில் இரட்சிக்க வந்த இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் மாறாதவராக இருக்கிறார். மரித்தேன், ஆனாலும் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன் என்று சொன்னவர் இன்றைக்கு நம் மத்தியிலே அசைவாடிக்கொண்டிருக்கிறார்.

உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள். உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமை செய்தலை விட்டு ஓயுங்கள். உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந் தாலும் பஞ்சைப் போலாகும் என்று சொன்னவர் மனம் மாறாமலும் இருப்பார். அவர் பாவியை நீதிமானாக மாற்றுகிறவர். தம்மிடத்தில் அழைத்து வரப்பட்ட பாவியான ஸ்திரீயை அவர் பாவி என்று நியாயம் தீர்த்து மோசேயின் பிரமாணத்தின்படி கல்லெறிந்து கொல்ல இடம் கொடாது காத்தார். விபச்சார பாவம் செய்தாள் என்று குற்றம் சாட்டினவர்களைக் குற்றப்படுத்தி மரண வாசல்களிலிருந்து தூக்கி எடுத்தார். உளையான பாவ சேற்றிலே உழன்று கொண்டிருக்கிற ஒவ்வொரு மனிதனையும் இனி பாவத்தைச் செய்யாதிருக்க அவர்கள் வாழ்க்கையை, அவர்கள் உள்ளத்தை, உணர்வை சீர்ப்படுத்தும், இயேசு மாறாதவர். நம்முடைய பாவங்களை மறைக்காதபடி அவர் சமுகத்தில் அறிக்கை செய்து அதை விட்டுவிடும்போது, இரக்கத்தைப் பெரும் பாக்கியசாலிகளாய் மாறுகிறோம்.

ஒருமுறை வாலிப சகோதரன் தன் பாவத்தினால் வந்த பாடுகளை, வேதனைகளை அறிந்து உணர்ந்து இனி நான் பாவம் செய்யாதிருக்க எனக்கு ஜெபியுங்கள் என்றான். கண்களின் இச்சைகளுக்கும் மாம்சத்தின் இச்சைகளுக்கும் அடிமையாய் வாழ்ந்தவன், தன் பாவத்தை கர்த்தரிடம் உண்மையாய் அறிக்கை செய்து அதை விட்டுவிட தீர்மானித்த போது, கர்த்தர் அவன் ஜெபத்தைக் கேட்டு அவனை மன்னித்து மாற்றினார். பாவங்களை நினையாதிருப்பேன் என்றவர் அவனை ஒரு தேவ ஊழியனாக வனைந்து கொண்டார். ஆகவே இன்று நம் பாவங்களை மறையாது கர்த்தரிடம் அறிக்கை செய்வோம், விட்டு விடுவோம், இரக்கத்தைப் பெறுவோம்.

 

2. கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரக்கம் செய்கிறார்

"தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்." சங்கீதம் 103:13

இந்த உலக வாழ்க்கையிலே  பலவிதமான பயத்தோடு வாழ்கிற மக்கள் ஏராளம். நமக்கு ஏற்பட்ட பெலவீனத்தை நினைத்து பயப்படுகிறதுண்டு. சிலர் தங்கள் வாழ்க்கையிலே பொருளாதாரத்தைக் குறித்துப் பயப்படுகிறார்கள். சிலர் தங்களுடைய எதிர்காலத்தைக் குறித்து பயப்படுகிறார்கள். நம் வாழ்க்கை  என்ன ஆகுமோ என்று கவலைப்பட்டு கண்ணீருடன் கலங்கி பயந்து வாழ்கிறவர்கள் ஏராளம். இவ்விதமாய் வாழ்க்கையில் ஏற்பட்ட, ஏற்படுகின்ற சில பிரச்சனைகளினால் சோர்வடைந்து விடுகிறோம். சிலர் தவறான தீர்மானங்களைச் செய்து அழிவைத்  தேடிக்கொள்கிறார்கள்.

இந்த வார்த்தைகளை வாசிக்கிற  தேவப்பிள்ளையே, கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் இன்று உங்களுக்குள் இருக்கிறதா? கர்த்தருக்குப் பயப்படும் பயம் என்றால் தீமையான காரியங்ககளை வெறுத்து விட வேண்டியதாய்  இருக்கிறது. ஆபிரகாமைப்  பார்த்து தேவன் 'அப்பொழுது அவர் பிள்ளையாண்டான்மேல்  உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன்  என்றும், உன் ஏக சுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.' ஆதியாகமம் 22:12ன் படி கர்த்தருடைய சொல்லுக்கு, திட்டத்திற்கு கீழ்ப்படிவது, கர்த்தருக்குப் பயந்த காரியமாகும். கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் நமக்குள் பெருகும்போது, பலவிதமான ஆசீர்வாதங்களை நாம் அடைகிறோம். 'கர்த்தருக்குப் பயந்து அவர் வழி நடக்கிற மனுஷன் பாக்கியவான். உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய். உனக்கு நன்மை உண்டாயிருக்கும். நீ பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பாய்' என்ற மேலான ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்கிற பாக்கியவான்களாய் இருக்கிறோம். கர்த்தருக்குப் பயந்த பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிக்கிறார். இவை எல்லாவற்றைப் பார்க்கிலும் நாம் கர்த்தருக்குப் பயப்படும் போது  அவர் இரக்கம் செய்கிறார். இந்த இரக்கத்தினாலே சுகத்தை, சமாதானத்தை, சந்தோஷத்தை சம்பூரணமாய் பெற்றுக் கொள்கிறோம். இந்த பயம் நமக்குள் இருக்கும்போது, நம்முடைய காரியங்களை ஜெயமாக மாற்றுவார்.

 

3) தம்முடைய ஜனங்களுக்கு இரக்கம் செய்கிறார்

"வானங்களே, கெம்பீரித்துப்பாடுங்கள்; பூமியே களிகூரு; பர்வதங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்; சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள் மேல் இரக்கமாயிருப்பார்." ஏசாயா 49:13

இன்றைக்கு நாம் அவருடைய ஜனங்களாய் மாறுவதற்கு நாம் நம்மை ஒப்புக் கொடுக்கும்போது அவர் நமக்கு இரக்கம் பாராட்டுகிற தேவனாயிருக்கிறார். அநேக நேரங்களில் உலக மனிதர்களுடைய இரக்கத்தைப் பெறுவதற்கு அவர்களை சிநேகிக்கிறோம், கனப்படுத்துகிறோம். பலவிதங்களில் உதவி செய்கிறோம். ஆனால்  சர்வ அதிகாரம் உடைய தேவனுடைய ஜனமாய் நாம் மாற அவர் சொல்லைக் கேட்க வேண்டும். அதன்படி செய்ய வேண்டும். "என் சத்தத்தைக் கேட்டு, நான் உங்களுக்குக் கற்பிக்கிறபடியே எல்லாக் காரியங்களையும் செய்யுங்கள்; அப்பொழுது நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்" எரேமியா 11:3ன்  படி கர்த்தருடைய சத்தத்தைக் கேட்கிற மக்களாய்  மாற வேண்டும். கர்த்தருடைய சத்தம் கேதுரு மரங்களை முறிக்கக்கூடியது. கர்த்தருடைய சத்தம் பெண்மான்களை ஈனச் செய்கிறது. அவருடைய கெம்பீர சத்தத்தை நாம் கேட்டு அதன்படி செய்யும்போது அவருடைய ஜனமாக மாறி  விடுகிறோம். கர்த்தருடைய சத்தம் இன்னதென்று நாம் அறிய வேண்டும். சத்தத்தை அறியாத ஆதாமும் ஏவாளும்  வஞ்சக சத்தத்தைக் கேட்டு பாவம் செய்து தேவ மகிமையை இழந்து தேவ உறவை இழந்து சாபத்துக்கும் பாடுகளுக்கும் உட்பட்டார்கள். கர்த்தரின் சத்தத்தை அறியாத சாமுவேல் ஏலியினிடத்திலே ஓடினான். ஒரு மனிதன் கர்த்தருடைய மந்தையிலே ஒருவனாக மாற வேண்டுமானால் அவன் சத்தத்தைக் கேட்க வேண்டும். யோவான் 10:4ன் படி என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கிறபடியால் எனக்குப் பின்னே வருகிறது. கர்த்தருடைய சத்தம் கேட்கப்பட நாம் நம்மை சுத்திகரித்துக்கொள்ள வேண்டும். ஏசாயா 6:7,8ன்  படி பலிபீடத்தின் அக்கினி ஏசாயா தீர்க்கதரிசியின் உதட்டைத் தொட்டபோது, அவன் முழுமையும் சுத்தமானான். சுத்தமாக்கப் பட்டவன் கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டான். நமக்காக தன்  ஜீவனையே கொடுத்து தம்முடைய இரத்தத்தையே சிந்தின இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் நாம் கழுவப்படும்போது, நாம் அவரின் சத்தத்தைக் கேட்கிறவர்களாக மாறுவோம். இன்னும் அவர் சத்தத்தைக் கேட்டு அதன்படி செய்வதற்கு ஒப்புக்கொடுக்கும்போது, நாம் அவர் ஜனமாகவும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாக மாறிவிடுகிறோம்.

1 பேதுரு 2:9ன் படி ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு அழைத்து வரப்படும் போது, நாம் ஆசாரியர்களாக, பரிசுத்த ஜாதியாக, ராஜரீக ஆசாரிய கூட்டமாயும், அவருக்குச் சொந்த ஜனமாயும் மாறிவிடுகிறோம். இருளில்  நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள் என்பது போல இருள் நிறைந்த பூமியிலே நம்மை பிரகாசிக்கச் செய்ய வந்த அன்பின் தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுவோம். அவர் ஜனமாய்  மாறுவோம். இரக்கம் அடைவோம்.

 

4) இரக்கமுள்ளவர்களுக்கு இரக்கம் செய்கிறார்

"இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்." மத்தேயு 5:7

நம்முடைய வாழ்க்கையிலே மற்றவர்களுக்கு இரங்குகிற  மக்களாய்  நாம் வாழ  வேண்டும். இரக்க  குணம் நமக்குள் இருக்கும் போது  மற்றவர்களின் இன்னல்களிலே, இக்கட்டுகளிலே அவர்களுக்காக ஜெபிக்க, அவர்களுக்கு உதவி செய்ய உள்ளம் உடையவர்களாய், செய்கிறவர்களாய் மாறிவிடுகிறோம். நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம் என்ற வாக்கின்படி இரக்க முள்ளவர்களாய் நாம் செய்கிற செயலினால், தேவ இரக்கம் பெற்றுவிடலாம். நீதி.14:21ன் படி தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான். மனதுருக்கம் நிறைந்த தேவன் நமக்கு இரங்கி நம்மை ஆசீர்வதிப்பார்.

 

5) கர்த்தரிடம் அன்புகூர்ந்து கற்பனைகளை கைக்கொள்ளுகிறவர்களுக்கு

"என்னிடத்தில் அன்புகூர்ந்து; என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிற வர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்." யாத்திராகமம் 20:6

இன்று நாம் கர்த்தரிடத்தில் அன்புகூருகிற மக்களாய்  மாற வேண்டும். உலகத்திலும் உலகத்தில் உள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள். ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால்  அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை . கர்த்தரிடத்தில் அன்பு கூரும்போது  அவரின் கிருபையையும் இரக்கத்தையும் பெற்று விடுகிறோம். தாவீது சங்கீதம் 18:1ல் பெலனாகிய கர்த்தாவே உம்மில் அன்புகூருவேன் என்று அன்பு வைத்ததினாலே கர்த்தர் அவனை சவுலின் கைக்கு விலக்கிக் காத்து தமது கிருபையை அவனைவிட்டு எடுபடாதபடி ஆசீர்வதித்தார். அவ்வாறே சாலமோன் 1 இராஜா. 3:3ல் கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்தான், பலியைச் செலுத்தினான். அதனால் நீ விரும்புகிறது என்ன என்று அவனைக் கேட்டு அவன் வேண்டின விரும்பின ஞானமும் உணர்வும் உள்ள இருதயத்தைக் கொடுத்தார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,இன்று கர்த்தரை நேசிக்க, அவரில்  அன்பு கூர, நம்மை ஒப்புக்கொடுப்போம். அவரின் மேலான இரக்கத்தைப் பெற்று இன்றும் என்றும் ஆசீர்வதிக்கப்படுவோமாக.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்து இயேசுவின் பணியில்,

சகோ. C . எபனேசர் பால்.