என்னை நேசிக்கிற அன்பின் தேவனே, குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உமது சமூகத்தில் வருகிறேன். ஜெபத்தைக் கேட்கிற தேவனே, எல்லாக் குறைகளையும் நீக்குகின்ற அன்பின் தேவனே, இன்று என் வாழ்க்கையில் உள்ள எல்லாக் குறைகளும் நீங்கும்படி ஜெபிக்கிறேன்.உமக்கு பிரியமானவனுக்கு நித்திரை தருகிற தேவனே, எனக்கு இறங்கும். இரவுநேரம் நான் வெகுநேரம் படுத்திருந்தாலும், தூக்கமில்லாதபடி கலங்கிக் கொண்டிருக்கிறேன். இதினால் படுக்கையை விட்டு எழும்பி என் வேலைகளை சரியாய்ச் செய்ய இயலவில்லை. இயேசு கிறிஸ்துவே, சமாதான பிரபுவே, எனக்கு இறங்கி நல்ல நித்திரையைத் தாரும். ஒவ்வொரு நாளும் என் பணிகளை நான் மிகுந்த உற்சாகமாய்ச் செய்ய உம்முடைய கிருபையை எனக்குத் தாரும். நான் நன்றாய்த் தூங்கி பல காலங்களாகி விட்டது. இயேசு கிறிஸ்துவே, எனக்கு இரங்கும். உம்முடைய அன்பின் கரத்தினால் என்னைத் தொட்டு ஆசீர்வதியும். உம்முடைய அன்புக்கு பத்திரமுள்ள மகளாய்/மகனாய் என்னை மாற்றும். நான் என்றும் உமக்கு பிரியமானவைகளைச் செய்ய எனக்கு உதவி செய்யும். உம்மால்  அநேக நன்மைகளைப் பெற்றுக் கொண்டதுண்டு. என் சரீரத்தில் ஏற்பட்ட வேதனைகளிலிருந்து என் ஜெபத்தைக் கேட்டு  எனக்கு கிருபையாய் இரங்கி என்னை விடுவித்தீர். நீரே மனிதனுக்கு அயர்ந்த நித்திரை தருகிற தேவன். நான் தூங்க முடியாதபடியினாலே பல தீய காரியங்கள் என் உள்ளத்தில் தோன்றி என்னை அச்சுறுத்துகிறது. சில நினையாத பாவங்களும், குழப்பமான எண்ணங்களும் எனக்குள் தோன்றுகிறபடியினால், சமாதானத்தை இழந்திருக்கிறேன். இயேசு கிறிஸ்துவே, எனக்கு இரங்கும். ஜெபத்தைக் கேட்கிறவரே, இன்று முதல் நான் நல்ல நித்திரைச் செய்ய எனக்குஉதவிச் செய்யும். உமது தயவும், உமது கிருபையும் எனக்குக் கிடைக்கட்டும். கேட்கிற எவனும் பெற்றுக்கொள்கிறான் என்று சொன்னவரே, என்னுடைய ஜெபத்தைக் கேட்டு எனக்கு அதிசயத்தைச் செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபம் கேளும் பிதாவே, ஆமென்.