இந்தப் புதிய ஆண்டில் கர்த்தர் நம்மைக் காத்து ஆசீர்வதிக்கும்படி ஒரு ஜெபம்

அன்பின் தேவனே, இந்த ஜெப நேரத்திற்காக உமக்கு நன்றி சொல்லுகிறேன். இம்மட்டும் நீர் என்னைக் காத்து , இந்த புதிய ஆண்டுக்குள்  பிரவேசிக்க செய்த தயவுக்காக ஸ்தோத்திரம். பலவிதமான போராட்டங்கள் கடந்த நாளில் என் வாழ்வில் வந்தது. நீர் கிருபையாய் காத்து நடத்தின அன்பின் செயலுக்காக உமக்கு ஸ்தோத்திரம். என் குடும்பத்தாரில் பலவிதமான கொடூரமான, வேதனையான காரியங்கள் வந்த போதும் என்னையும், எங்களையும் கண்ணின் மணிபோல் காத்து நடத்தினபடியால் உமக்கு மிகுதியான ஸ்தோத்திரங்களைச் செலுத்துகிறேன். கடந்த காலத்தில் நீர் எனக்குச் சகாயராய் இருந்தீர். அதற்காக ஸ்தோத்திரம். என் கூடாரத்தில் உள்ளவர்களின் வாழ்வில் தடையாய் இருந்தவைகளை அகற்றி ஆசீர்வதித்தீர். அதற்காக ஸ்தோத்திரம். முந்தி செய்து முடிக்கமுடியாத பல காரியங்களை நேர்த்தியாய் செய்து முடித்தீர். அதற்காக ஸ்தோத்திரம். அன்பின் இயேசு கிறிஸ்துவே, சென்ற நாட்களில் பயணம் செய்யமுடியாத காரியங்களில் எனக்கு உதவி செய்து என் பயணத்தை வாய்க்கச் செய்தபடியால் உம்மைப் போற்றுகிறேன். நான் வாங்க முடியாத நல்ல இடத்தை, உமது அளவற்ற அன்பினால் வாங்கி, நான் நினைக்கிறதற்கு மேலாக எனது வீட்டை /ஜெபவீட்டை/தொழிலகத்தை கட்டி முடிக்க உதவி செய்தபடியால் உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரத்தைச் செலுத்துகிறேன். என் தேவைகளையெல்லாம் சந்தித்தீர். என் வேலையை ஆசீர்வதித்தீர். அதற்காக ஸ்தோத்திரம். கர்த்தாவே, இந்த ஆண்டை எனக்கு மிகுந்த ஆசீர்வாதமான ஆண்டாக மாற்றி தாரும். என் மகன், மகள் வாழ்வில் உள்ள குறைகளையும், பிரச்சனைகளையும் இந்த ஆண்டிலே நிவர்த்தி செய்து, என்னை மகிழ்ச்சியினால் பூரிப்பாக்கும் கர்த்தாவே. கடந்த நாட்களிலே நான் பெற்றுக்கொள்ள வேண்டிய எல்லா பணத்தையும் பொருளையும், பெற்றுக் கொள்ள எனக்கு உதவிச் செய்யும். கர்த்தாவே, இந்த நாள் முதல் இழந்துபோன சுகத்தை , சந்தோஷத்தை  நிறைவாய் பெற்று உம்மைத் துதிக்க உதவிச் செய்யும். கர்த்தாவே உம்மோடு உள்ள உறவு இந்த ஆண்டில் பூரணமாய் இருக்க எனக்கு உதவிச் செய்யும். உமது அன்பின் பிரசன்னத்தில் என்றும் நிறைந்திருக்க உதவிச் செய்யும். இயேசு கிறிஸ்துவே, இந்த ஆண்டில்  நான் மிகுதியாய் ஆசீர்வதிக்கப்பட்ட உதவிச்செய்யும். இயேசு கிறிஸ்துவின் மூலம் ஜெபம் கேளும் நல்ல பிதாவே ஆமென்.