இரவில் நன்றாய் தூங்கி ஓய்வெடுக்க ஒரு ஜெபம்

அன்பின் தேவனே, இந்த ஜெப நேரத்திற்காக நன்றி கூறுகிறேன். கடந்த நாட்களில் என்னைக் கண்மணிபோல் காத்து இந்த புதிய ஆண்டில் பிரவேசிக்கச் செய்தீர். அதற்காக ஸ்தோத்திரம். நீர் என் ஜெபத்தைக்கேட்டு, சகல நல் ஆசிர்வாதங்களையும் சம்பூரணமாய் பெருகச் செய்தீர். அதற்காக ஸ்தோத்திரம். கர்த்தாவே, எனக்கு எல்லாம் இருந்தும், என்னால் இரவிலே தூங்க முடியாது வேதனையடைகிறேன் .  தூக்க மாத்திரை சாப்பிட்டும் பயனில்லை. இரவில் தூக்கம் இல்லாததினால் என்ன செய்வது என்று வீணாய் யோசிக்கிறேன். இவர்கள் செய்த தந்திரமோ, சூனியமோ என்று உள்ளத்தில் பாடுபடுகிறேன் . எப்பொழுது விடியும், யார் அடுத்து என்ன செய்கிறார்கள் என்று படுக்கையில் படுத்துக்கொண்டே யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.  சில சமயம் பலவிதமான பயங்கள் என்னைச் சூழ்ந்துகொள்கிறது . இவர்கள் தூங்க முடியாது கஷ்டப்பட்டார்கள், அவர்களில் இன்று கொடூரமான நோய் வந்துவிட்டது என்று பலவிதமான தேவையற்ற காரியங்கள் என்னைக் கலங்கப்பண்ணுகிறது. கர்த்தாவே எனக்கு இரங்கும். என் பணப்பிரச்சனை தான் இவ்வாறு என்னை தூங்க விடாது இரவு முழுவதும் யோசிக்கச் செய்கிறதோ, என்ற எண்ணமும் வருகிறது . கர்த்தாவே, எனக்கு இரங்கும். தூங்க முடியாத காரணத்தால் செத்துப்போனவர்கள் பற்றிய எண்ணங்கள் தோன்றி, எனக்குள் மரணப் பயத்தை உண்டாக்குகிறது. இயேசு கிறிஸ்துவே எனக்கு இரங்கும். காலையில் நான் எழுந்து என் வேலைகளைச் செய்ய வேண்டும் என்பதையும் நீர் அறிவீர். இயேசுகிறிஸ்துவே, எனக்குஇரங்கும். உமக்குப் பிரியமானவர்களுக்கு நித்திரை தருவேன் என்று சொல்லியிருக் கிறவாறே, எனக்கு இரங்கும் . சில நாட்களில் காலையில் சில மணிநேரம் தூங்கிவிடுகிறேன். அதினால் அன்று காலையில் செய்ய வேண்டிய வேலையை நான் ஏற்ற நேரத்தில் செய்யமுடியாது அவசர அவசரமாக எல்லாக் காரியங்களையும் செய்கிறேன். என் தூக்க மில்லாமையால் நான் மிகுந்த கோபமடைகிறேன் . என் கணவர், மனைவி, பிள்ளைகளிடம் காரணம் இல்லாததற்கும் சண்டையும் செய்துவிடுகிறேன். இயேசு கிறிஸ்துவே எனக்கு இரங்கும். இன்று முதல் நான் நன்கு தூங்கி எழுந்து என் பணிகளை நலமாய்ச் செய்ய உதவிசெய்யும். நீர் அப்படிச் செய்வீர் என்று நம்பி துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் மூலம் என் ஜெபம் கேளும் பிதாவே, ஆமென்.