கர்த்தர்மேல் உள்ள நம்பிக்கையில் நாம் குறைவுபடாதிருக்க ஒரு ஜெபம்

     அன்பின் தேவனே, இந்த நல்ல ஜெப நேரத்திற்காக நன்றி கூறுகிறேன். நீர் என் நம்பிக்கையாய் இருந்து இம்மட்டும் என் வாழ்வில் செய்த எல்லா நன்மைகளுக்காக, ஆசீர்வாதங்களுக்காக நன்றி கூறுகிறேன். உம்மைத் துதிக்கிறேன், ஸ்தோத்திரிக்கிறேன். என் நம்பிக்கையின் தேவனே, என்னை நெகிழவிடாமல் இம்மட்டும் காத்து ஆதரித்தவரே, தொடர்ந்து என் நம்பிக்கையில் நான் குறைவுபடாதிருக்க எனக்கு உதவி செய்யும். சில சமயங்களிலே என் நம்பிக்கை நான் சம்பாதித்து வைத்திருக்கிற செல்வத்தின் மீது செல்கிறது. கர்த்தாவே, என்னை மன்னியும். இவ்வாறு நான் நம்பி, என் செல்வத்தை இழந்து சாபத்தைத் தேடித் கொள்ளாதபடி என்னைக் காத்து நடத்தும்.  எனக்கு நல்ல வீட்டைக் கொடுத்தீர்.  குடும்பத்தைக் கொடுத்தீர், பிள்ளைகளைக் கொடுத்தீர், வேலையைக் கொடுத்தீர். என் நம்பிக்கை என் பிள்ளைகள் பிற்காலத்தில் எனக்கு உதவி செய்வார்கள் என்று எண்ணாதபடி எக்காலத்திலும் உம்மேல் நம்பிக்கை வைத்து வாழ உதவி செய்யும். எனக்குப் பெலன் இருக்கிறது, எல்லா வழியும் இருக்கிறது. நான் தவறு செய்தாலும் என்னைத் தடுக்க, கேட்க ஒருவரும் இல்லை என்று எண்ணாதபடி வாழ உதவிசெய்யும். உம்மேல் உள்ள நம்பிக்கை ஒருபோதும் ஒருநேரமும் எந்தக் காரியத்திலும் குறைவுபடாதபடி இருக்க உதவிசெய்யும். மனுஷர்மேல் நம்பிக்கை வைத்து கர்த்தரை விட்டு விலகுகிற மனுஷன் சபிக்கப்பட்டவன் என்ற வார்த்தையை நினைந்து, மனுஷனை அல்ல, உம்மீது நம்பிக்கை கொண்டு வாழ எனக்கு உதவிசெய்யும். இம்மட்டும் என்னை ஆட்கொண்டு அற்புதமாய் வழிநடத்தி வந்த தேவனே, உம்முடைய ஆசீர்வாதத்தை நான்  இழந்து விடாதபடி ஒருபோதும் என் நம்பிக்கையில் குறைவுபடாதிருக்க காத்துக்கொள்ளும். உம்மை நம்பினவர்களை விடுவிப்பேன் என்று சொன்ன தேவனே, என் வாழ்க்கையில் என் பிரச்சனைகளிலே, என் பெலவீனங்களிலே உம்மையே நம்பி, உம்மால் விடுதலை பெற்றேன். அதற்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். என் மகளின் / மகனின் திருமண காரியங்களிலே என்ன ஆகுமோ என்று எண்ணி கலங்கினேன். நகை இருக்கிறது, பணம் இருக்கிறது, நல்ல படிப்பும் வேலையும் இருக்கிறது என்று என் நம்பிக்கை அதின்மேல் இராதபடி உம்மையே நம்பியிருந்தபடியால், பிள்ளைகளின் திருமணத்தை நேர்த்தியாய் நடத்திக் கொடுத்தீரே, அதற்க்காக ஸ்தோத்திரம். உம்மீது உள்ள நம்பிக்கையில் நான் ஒருபோதும் குறைவுபடாதபடி உம்மில் நிலைத்திருக்க எனக்கு உதவிசெய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென் .