தனி / குடும்ப சமாதானத்திற்காக ஒரு ஜெபம்

அன்பின் தேவனே, இந்த நல்ல ஜெப நேரத்திற்காய் நன்றி கூறுகிறேன். உம்முடைய தயவினாலும், கிருபையினால் இதுவரை சமாதானத்துடன் வாழ வழி செய்தீர். இந்த சமாதானம் குறைந்து விடாதிருக்க எனக்கு உதவி செய்யும். சமாதான பிரபுவாகிய இயேசு கிறிஸ்துவே, உம்மால் மாத்திரம் தான்  சமாதானத்தை, சந்தோஷத்தைப் பெற்று வாழமுடியும். சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனுடைய புத்திரர் என்று சொன்னீரே, நான் சமாதானம் பண்ணுகிறவனாக இருக்க எனக்கு உதவிச் செய்யும். சமாதானத்தை இழப்பதால் என் வாழ்க்கையின் சூழ்நிலையிலே கவலைகள், குறைகள் தோன்றுகிறது. கர்த்தாவே எனக்கு இரங்கும். எந்த சூழ்நிலையிலும் நான் சமாதானத்தோடு இருக்க எனக்குப் போதியும். இன்னும் என் வார்த்தையிலே, உணர்விலே, மிகுந்த சமாதானம் இருக்க எனக்கு உதவி செய்யும். உம்முடைய ஜனங்கள் சமாதான தபாரங்களில் வாசம் பண்ணுவார்கள் என்று சொன்னீரே, என் சுற்றுப்புற்றத்தார் மத்தியிலே சமாதானம் பெருக உதவிச் செய்யும். சிற்சில சமயங்களிலே என் பிள்ளைகளை எண்ணும்போது  எனக்குள் சமாதானம் குறைந்து விடுகிறது. இன்று முதல் என் பிள்ளைகள் கர்த்தரால் போதிக்கப்படவும், இந்த சமாதானம் பெருகவும் உதவிச் செய்யும். அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளதாக்கி உசிதமான கோதுமையினால் திருப்தியாக்குகிறார் என்று சொன்னவரே, என் எல்லை முழுவதும் சமாதானமடைய எனக்கு உதவி செய்யும். சமாதான உடன்படிக்கை செய்து அதில் நிலைபெயராமல் இருக்கும் என்று சொன்னவரே, என்னையும் பூரணமான சமாதான உடன்படிக்கையினால் நிரப்பும். நீரே என் வாழ்வில் முழுமையான சமாதானத்தை உண்டு பண்ண முடியும்  என்று  உம்மையே நம்பியிருக்கிறேன். உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருக்கிறவர்களுக்கு  பூரண சமாதானம் தருவேன் என்று சொன்னவரே, அந்த சமாதானத்தை எனக்கு தாரும். நான் சாந்தகுணமுள்ளவனாகி பூமியைச் சுதந்தரித்து மிகுந்த சமாதானத்தோடு வாழ எனக்கு உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவே எனக்கு இதைச் செய்வீர் என்று நம்பி உம்மைத் துதிக்கிறேன். ஸ்தோத்தரிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால்  பிதாவே, ஆமென்.