கடன் தொல்லையில் உள்ளவர்களின் விடுதலைக்காக ஒரு ஜெபம்

 

அன்பின் தேவனே, இந்த ஜெப நேரத்திற்காக மிகுந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். என் வாழ்வில் உள்ள கடன்களின் தொகை என்னால் நம்ப முடியாது பெருகியிருக்கிறது. நான் வாங்கின கடன் கொஞ்சம் தான், ஆனால் வட்டியும் சேர்ந்து மிகுதியாகிவிட்டது. என் சம்பாத்தியத்தால் இதனை அடைக்கவே முடியாது என்று பயப்படுகிறேன். இதனை நினைக்கும் போது, தற்கொலை செய்வதுதான் தப்பிக்கொள்ள வழி என்ற எண்ணம் என் உள்ளத்தில் வருகிறது. கர்த்தாவே, நீர் சொன்ன வார்த்தையை மதியாது என் இஷ்டம் போல கடன் வாங்கி விட்டேன். என் சம்பாத்தியத்தின் மிகுதியான பகுதி வட்டியாக கொடுக்க வேண்டி இருக்கிறது. வட்டி இல்லாக்கடன் யாராவது தந்தால் சமாளித்துவிடலாம் என்ற வீண் எண்ணமும் உள்ளத்தில் தோன்றுகிறது. இயேசு கிறிஸ்துவே, எனக்கு இரங்கும். இந்த கடன் தொல்லை நீங்க எனக்கு உதவி செய்யும். சென்ற ஆண்டின் கடன் தொகையைப் பார்த்தபோது, இந்த ஆண்டில் மிக அதிகமாக இருக்கிறது. எனக்கு ஒரு வழி  காட்டும். அன்று ஐந்து அப்பத்தை ஐயாயிரம் பேருக்கு போதுமானதாக பெருகச் செய்தீரே, எனக்கு இரங்கும். நீயோ கடன் வாங்குவதில்லை என்றவரே, இதை அறியாது, உணராது என் இஷ்டம் போல பலரிடம் பலவிதமான பொய்யைக் கூறி கடன் வாங்கி விட்டேன். இன்று இயேசு கிறிஸ்துவே, என் கடன் தீர வழி செய்யும். இது தொடராது என்னை நாசப்படுத்திவிடாது இருக்க எனக்கு இரங்கும். இந்த நாள் கடன் வாங்காது இருக்க தீர்மானிக்கிறேன். அவ்வாறு சாட்சியாக இருக்க உதவி செய்யும்.  கடன் மிகுந்தவர்களை நான் பார்க்கும் போது, எனக்கு பயமும், கலக்கமும் உண்டாகிறது. இன்று எனக்கு உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவே, என் கடன் தொல்லை நீங்க அற்புதம் செய்வீராக. நீர் எனக்கு உதவி செய்து கடன் தொல்லை என்னை விட்டு நீங்கும் என்று நம்பி துதிக்கிறேன், இயேசு கிறிஸ்துவே என் ஜெபம் கேளும் பிதாவே. ஆமென்.