இந்த மாத செய்தி

                             "நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது."
                                                                                                                                           
நீதிமொழிகள் 23:18

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய  இயேசு கிறிஸ்துவின்  இனிய  நாமத்தினால்  வாழ்த்துகிறேன்.

இன்று மனிதன் தன் வாழ்வில் உள்ள பிரச்சனைகளுக்கு முடிவு பெற பல காரியங்களில் நம்பிக்கை வைத்திருக்கிறான். அவன் வைத்திருக்கிற நம்பிக்கையின்படி சொல்லுகிற, செய்கிற காரியங்கள் நடக்குமா நடக்காதா என்று அறிகிறதில்லை. இந்த நம்பிக்கை எப்படி வந்தது? அதை எவ்விதமாய்ப் பின்பற்றுகிறார்கள் என்று ஆராய்ந்து அறிவதற்குப் பதிலாக அதின்படி செய்கிற மக்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.

ஒருமுறை ஓய்வுபெற்ற ஒரு இராணுவ அதிகாரியின் சகோதரிகள், தங்களின் சகோதரருக்கு நாளைய தினம் இருதய அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது. தயவாய் எங்கள் வீடு வந்து ஜெபியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். கூட்டம் முடிந்த பின் வருகிறேன் என்று கூறினேன். அவர்கள் காத்திருந்து தங்கள் வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். எங்களைப் பார்த்தவுடன் படுத்திருந்த அவர்களின் சகோதரர் எழுந்து உட்கார்ந்தார். அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டேன். எப்பொழுதாவது ஓடுகிற தண்ணீரில் காசு நாணயத்தை எறிந்தீர்களா? என்று கேட்டேன். அவர் உடனே இல்லை இல்லை, அதைச் செய்கிற வழக்கம், பழக்கம் கிடையாது என்று கூறினார். சற்று நேரம் கழித்து, ஆமாம், ஒருமுறை ஓடும் இரயிலில் இருந்து கீழே சென்றுகொண்டிருந்த ஆற்றிலே ஒரு நாணயத்தை எறிந்தேன் என்றார். அவரிடம் ஏன் என்று கேட்டேன். அவர் கூறியது: நான் ஜூனியர் ஆபிஷராக நியமிக்கப்பட்டு லடாக் பகுதிக்குச் செல்ல வேண்டியதிருந்தது. என் தாய் தகப்பன் வயதானவர்கள். சகோதரிகளுக்கெல்லாம் திருமணமாகி சென்று விட்டார்கள். இந்த நிலையில் என் தாய் தகப்பனாரை யார் கவனிப்பார்கள் என்று கவலை நிறைந்த எண்ணத்தோடு ரயிலில் பயணத்தில் இருந்தேன். முதல் வகுப்பு கோச்சில் எனக்கு எதிரே அமர்ந்திருந்த சகோதரர் அந்த ஆற்றிலே காசை வீசினார். நான் அவரைப் பார்த்து எதற்காக வீசினீர்கள் என்று கேட்டேன். நாம் நினைத்த காரியம் நடைபெறும் என்று அவர் வைத்த நம்பிக்கையைத் தெரிவித்தார். உடனே நானும் ஒரு நாணயத்தை எடுத்து ஆற்றிலே வீசினேன் என்றார். நீங்கள் அறியாத ஒரு காரியத்தின்மேல் நம்பிக்கை கொண்டிருந்தபடியால், இந்தப் போராட்டம் என்றேன். அந்த ஆற்றங்கரையில் ஒரு கோயில் இருக்கிறது. அந்தக் கோயிலுக்குக் காணிக்கைச் செலுத்துகிற முறையில் தண்ணீருக்குள் காசை வீசுகிறார்கள் என்றேன். தன்னுடன் பயணம் செய்த நபர் வைத்திருந்த அறியாத நம்பிக்கைக்கு இடம் கொடுத்து, தவறான காரியத்தைச் செய்து விட்டேனே என்று மனஸ்தாபப்பட்டார். கர்த்தரிடம் மன்னிப்பு கேட்டு மன்றாடினார். அடுத்தநாள் அறுவைச் சிகிச்சைக்கு ஏற்ற காரியங்களைச் செய்தபோது, அறுவைச் சிகிச்சை தேவை இல்லை என்று மருத்துவர் சோதனை செய்து விட்டு கூறினார்.

இன்று மனிதர்கள் அறியாததை நம்பி காரியங்களைச் செய்வதினால் வேதனையான முடிவைச் சந்திக்கிறார்கள். தாயின் கருவில் நம்மை உருவாக்கின சர்வ வல்லவர்மீது நம்பிக்கை வைக்கும்போது, அதிசயமான, ஆசீர்வாதமான, மேன்மையான காரியங்களைச் சுதந்தரித்துக் கொள்வோம். சங். 62:5ல் 'என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும்.' என்று தாவீது சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம். 'கர்த்தரை நம்புகிறவன் பாக்கியவான்' என்று நீதி. 16:20ல் பார்க்கிறோம். ஆபிரகாமின் நம்பிக்கையை 'உன் சந்ததி இவ்வள வாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்.' என்று ரோமர் 4:18ல் பார்க்கிறோம். அவனது நம்பிக்கை வீண்போகவில்லை. தன்னுடைய 100-வது வயதில் ஈசாக்கைப் பெற்றுக்கொண்டார். கர்த்தர் ஆபிரகாமின் நம்பிக்கையைக் கனப்படுத்தினார்.

இதை வாசிக்கிற அருமையான சகோதரனே/சகோதரியே, எனக்கு வயதாகிவிட்டது, பிள்ளையே இல்லை என்று கலங்கிக் கொண்டிருக்கிறாயா ? உன் நம்பிக்கையைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீது வை. கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களையும், அவருடைய வாயின் சுவாசத்தினால் சர்வசேனையையும் உண்டாக்கிய தேவன், இன்றே உன் வாழ்க்கையிலே, உன் சந்ததி பெருகுவதற்கு, நீ பிள்ளை பெற்றுக்கொள்வதற்கு உதவிசெய்வதை நீ காண்பாய்.

ஒரு பகுதி ஊழியத்தின் போது எலக்ட்ரிஷியன் ஒருவர் அக்கூட்ட முடிவிலே ஜெபிக்க வந்தார். அவருடைய உள்ளத்தில் தனது எலக்ட்ரிக்கல் கடை விசாலமாக்கப்பட வேண்டும், அதன் தேவைகள் சந்திக்கப்பட வேண்டும் என்ற வாஞ்சையோடு ஜெபிக்க வந்தார். ஜெப விண்ணப்பத்தை என்னிடம் தெரிவித்தபோது, அவரிடம் ஒரு காரியத்தைக் கேட்டேன். பிரதர், இடது உள்ளங்கையில் அரிப்பு வந்தால் பணம் வரும், வலது உள்ளங்கையில் அரிப்பு வந்தால் செலவு வரும் என்ற நம்பிக்கை உங்களுக்கு உண்டா என்று கேட்டேன். கொஞ்சநேரம் சிரித்து மழுப்பினார். பின் ஆமாம் என்று கூறினார். அவருக்கு உங்கள் தேவைகள் எல்லாம் சந்திக்கப்பட வேண்டுமானால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம்புங்கள். அவரே ஐசுவரிய சம்பூரணர். இவ்விதமான நம்பிக்கையை விட்டுவிட்டு இயேசு கிறிஸ்துவை நம்புங்கள். அவர் உங்கள் கடை விஸ்தரிப்புக்குரிய தேவைகளைச் சந்திக்க வல்லவர், அதிசயம் காண்பீர்கள் என்று ஆலோசனை கூறினேன்.

கர்த்தரை நம்பும்போது வரும் ஆசீர்வாதங்கள்

1. கர்த்தரை நம்பும்போது விடுதலை உண்டாகும்

"எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர்." சங்கீதம் 22:4

இன்று மனிதன் விடுதலையில்லாது மிகுந்த வேதனையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான். அநேகர் தங்களின் சுதந்தரத்தை இழந்து, சந்தோஷத்தை இழந்து, கவலையுடன் போராட்டத்துடன் தங்கள் வாழ்நாட்களைச் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

i) பிசாசின் பிடியிலிருந்து விடுதலை

யோவான் 8:36ல் 'குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.' என்று பார்க்கிறோம். இன்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் நம்பும்போது, தீங்கின் ஆவியின் துர்க்கிரியைகளுக்கு நம்மை விலக்கி விடுவிக்கிறார். இன்று அநேக தேவனுடைய பிள்ளைகள் கனநித்திரையின் ஆவியின் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இவர்களால் நன்றாய் வேதத்தைத் தியானிக்க முடியவில்லை, ஜெபிக்க முடியவில்லை என்று கஷ்டப்படுகிறார்கள். சத்துருவாகிய பிசாசானவன், உங்களை வேதத்தைத் தியானிக்க முடியாதபடியும், துதித்து ஜெபிக்க முடியாதபடியும் எதிர்த்து தந்திரமாய்ப் போராடிக் கொண்டிருக்கிறான். இன்னும் சிலருடைய எண்ணங்களிலே பாவமான, அருவருப்பான சிந்தைகள் தோன்றி, ஒன்றும் செய்ய இயலாதபடி, வாழ்க்கையை மாற்றி விடுகிறான். ஜெபிக்க வேண்டிய மனிதன், பிறகு ஜெபித்துக் கொள்ளலாம் என்று தன் ஜெப நேரத்தை தூக்கத்திலே கழித்துக் கொண்டிருக்கிறான். ஆனால் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை வைக்கிறவர்கள், எல்லா நேரங்களிலும் தேவனைத் துதித்து, ஜெபத்திலும், வேதத்தைத் தியானிப்பதிலும் தங்கள் நேரத்தைச் செலவிடுவார்கள். ஒருமுறை கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சகோதரிக்காக ஜெபிக்க வேண்டும் என்று கர்த்தருடைய ஆவியானவர் நடத்தினார். என் சகோதரியின் கணவர் மூலமாக அவர்கள் வீட்டுக்கு ஜெபிக்கச் சென்றேன். அச்சகோதரிக்குள் இருந்த தீய ஆவி என்னைப் பார்த்தவுடனே, டேய், ஜெபிக்க வந்திட்டியா என்று சத்தமிட்டு, தலையை விரித்துப் போட்டு ஆட ஆரம்பித்தது. தீய ஆவிகளைத் துரத்தக்கூடிய அனுபவம் இல்லாத அந்நாளில் நான் ஸ்தோத்திரங்களையும், துதிகளையும் சொல்லிக் கொண்டே இருந்தேன். சிறிது நேரத்தில், அந்தச் சகோதரிக்குள் இருந்த அத்தனை தீய ஆவிகளும் வெளியேறி விட்டன. கர்த்தரின் ஆவியினால் அச்சகோதரி நிரப்பப்பட்டார்கள். விடுதலை அடைந்த பின்பு அவர்களோடே பேசிக்கொண்டிருந்தேன். அவர்களை அதிகமாக நேசித்த சிலர், பலவிதமான, தவறான நம்பிக்கைக்குரிய ஆலோசனைகளைக் கூறியதாகவும், அந்தக் காரியங்களை யெல்லாம் செய்ய இடம் கொடுக்கவில்லை, என் கர்த்தர் எனக்கு விடுதலைத் தருவார் என்ற நம்பிக்கையோடு இருந்ததாக கூறினார்கள். அவர்களுக்குள் கர்த்தர்மேல் இருந்த நம்பிக்கையின் படியே தீய ஆவியிலிருந்து கர்த்தா விடுதலைத் தந்தார்.

ii) பாவ பழக்கத்திலிருந்து விடுதலை

இன்று பாவமானது மனிதனை ஆண்டுகொண்டிருக்கிறது. 1யோவான் 2:16ல் 'மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல' என்று பார்க்கிறோம். அவைகள் நமக்குள் பெருகி ஆவியின்படி நடவாதபடி மாம்சத்தின்படி நடக்க வைத்து, ஆக்கினைத்தீர்ப்புக்கு ஆளாக்குகிறது. நம்பிக்கையானது உலகத்தில் உண்டாக்கப்பட்டவைகளின் மீது நிறைவாய் பெருகி வருகிறது. நாம் உண்டாக்கப்பட்ட நோக்கத்தை விட்டுவிட்டு, உலகத்திற்குரிய இச்சைகளினால் நிறைந்து, மனிதர்களின் இச்சைகளின்படி நடப்பதற்கு நம்மை அர்ப்பணித்து விட்டோம். இந்த இச்சைகளின் நிமித்தமாய் உங்களுக்குள்ளே யுத்தங்களும், சண்டைகளும் வருகிறது. உங்கள் அவயவங்களில் போர் செய்கிற இச்சைகளினாலல்லவா என்று யாக். 4:1ல் பார்க்கிறோம். 'நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்க வேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்' என்று யாக்கோபு 4:3ல் பார்க்கிறோம். இச்சையானது ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிறதாய் இருக்கிறது. இந்த மாம்ச இச்சைகளை விட்டு விலகுவதற்குப் பதிலாக அதைத் தேடி நாடி, நேரத்தைச் செலவிட்டு, நம் ஆவி, ஆத்துமா, சரீரத்தைக் கெடுத்துக் கொண்டவர்களாய் இருக்கிறோம். இச்சையானது நமக்குள் பெருக வேண்டும் என்று பிசாசானவன் மொபைல் போன், லேப்டாப், டி.வி. இவைகளிலே பலவிதமான தவறான காட்சிகளை வெளியிடுவதை நாம் பார்க்கிறோம். இதைப் பலமணிநேரம் பார்த்துக் கொண்டிருக்கிற ஆண்களும் பெண்களும் உண்டு.

அண்மையில் ஒரு வாலிபன் தனக்கு வேலையில்லை, அத்துடன் அவனுக்கிருந்த ஒரு வேதனையான நோய் நீங்க வேண்டும் என்று ஜெபிக்க வந்தான். அவனிடத்திலே கேட்டேன். தம்பி, எவ்வளவு நேரம் வேதத்தை வாசிப்பாய், எவ்வளவு நேரம் ஜெபிப்பாய் என்று கேட்டேன். அவன் கூறினான், நான் வேதம் வாசிக்கிறதில்லை, ஜெபிப்பதும் கிடையாது என்று சொன்னான். எவ்வளவு நேரம் போன் பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டேன். நாள் முழுவதும் என்று கூறினான். இன்று நம் வாழ்க்கையினுடைய கல்வி, தொழில் காரியங்களில் முன்னேற்றம் அடைய முடியாதபடி இச்சைகளைக் காண்பிக்கும் அநேக காரியங்களை You-tube-மூலம் பார்த்து, தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள். இவ்விதமான இச்சைகளிலிருந்தும், கேடுபாடு நிறைந்த வாழ்க்கையிலிருந்தும், பாவத்திற்கு அடிமையாய் வாழ்கிற வாழ்க்கையிலிருந்தும் விடுவிக்கக்கூடிய வல்லமையான ஆயுதம் கர்த்தர்மேல் நம்பிக்கை வைப்பதாகும். கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் என்ற நம்பிக்கையும், நிச்சயமும் வரும்போது, உங்கள் வாழ்வில் உள்ள போராட்டங்களுக்கு முடிவு வந்துவிடும். உன் நம்பிக்கை வீண் போகாது.

iii) பயத்திலிருந்து விடுதலை

"ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளான வர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்."எபிரெயர் 2:15

பயமானது வேதனையுள்ளது. நம்முடைய நம்பிக்கை கிறிஸ்துவின்மேல் இருக்கும்போது, எவ்விதமான பயமும் நம்மை மேற்கொள்ளாது, கர்த்தர் காத்து நடத்துவார். இன்று சில பிள்ளைகள் இரவிலே தனியாகத் துாங்குவதற்குப் பயப்படுகிறார்கள். காரணம் சிறு வயதிலேயே அவர்களைச் சாப்பிட வைப்பதற்கு, குடிப்பதற்கு தாய்மார்கள் பூனை வருது, பூச்சாண்டி வருகிறான் என்ற வீணான, தவறான, பயத்தைத் தவறான முறையில் பிள்ளைகளின் உள்ளங்களிலே பதிய வைத்து, அதினால் பயம் தொடருகிறதைப் பார்க்கலாம். கர்த்தர்மேல் நம்பிக்கை வைக்கும் போது, எந்தவிதமான பயமும் நம்மை மேற்கொள்ளாது, நல்வாழ்வு வாழ முடியும். அநேக மிருகங்களும், பிராணிகளும், மனிதர்களின் சத்தத்தையும் செய்கைகளையும் பார்த்து, பயத்தினால் மனிதர்களைத் தாக்குகிறது. நாம் கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து, அவரை முழு மனதோடு தேடும்போது, நம்மை எல்லாப் பயத்துக்கும் நீங்கலாக்கி விடுவிக்கிறார்.

2. கர்த்தர்மேல் நம்பிக்கை வைக்கும்போது காத்துக்கொள்வார்

“..உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்." ஏசாயா 26:3

நம்முடைய தேவனின் வல்லமையான செயலில் ஒன்று கண்ணின்மணிபோல் நம்மைக் காப்பதாகும். மனிதன் இன்று தன்னைக் காத்துக் கொள்வதற்காக, தன் வீட்டைப் பலவிதமான, நுாதனமான security system-த்தைப் பொருத்துகிறான். சங். 5:11ல் உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார் களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்' என்று பார்க்க முடிகிறது. கர்த்தர் தம்மை நம்புகிற மக்களை எல்லா சூழ்நிலைகளிலிருந்தும், பாடுகள், பிரச்சனைகளிலிருந்தும் காத்து நடத்துவார். சமாதானத் தோடு வாழும்போது தான் மனமகிழ்ச்சி பெருகும். பலவித தந்திரமான, மந்திரமான சூனியங்களைச் செய்கிற மக்கள் இன்றும் இருக்கிறார்கள். தாவீது இதைக் குறித்து பல இடங்களில் கூறியிருப்பதைப் பார்க்கிறோம். சங். 12:5ல் 'அவன்மேல் சீறுகிறவர் களுக்கு அவனைக் காத்துச் சுகமாயிருக்கப் பண்ணுவேன்' என்று கூறுவதைப் பார்க்கிறோம். தன் எதிராளிகள் எல்லார்மேலும் சீறுகிறவன் நான் அசைக்கப்படுவதில்லை என்ற தவறான நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான். 'அவன் வாய் சபிப்பினாலும் கபடத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக் கிறது; அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு. கிராமங்களின் ஒளிப்பிடங்களிலே பதிவிருந்து, மறைவிடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான்; திக்கற்றவர்களைப் பிடிக்க அவன் கண்கள் நோக்கிக்கொண்டிருக்கிறது''என்று சங். 10:7,8ல் பார்க்கிறோம். இவ்விதமாய் மறைவான கண்ணிகளை வைத்த மக்களுக்கு, கர்த்தர்மேல் உள்ள நம்பிக்கையின் நிமித்தமாய் நம்மை விலக்கிக் காக்கிறவராயிருக்கிறார். உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம் என்று சொன்ன தேவன், சமாதான பிரபுவாகிய இயேசு கிறிஸ்து, நமக்குள் சமாதானம் பெருகச் செய்து, நம்மைக் காத்துக் கொள்வார்.'

3.கர்த்தரை நம்புவதால் கிருபை பெறுகிறோம்

"கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்."

சங்கீதம் 32:10

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய், இயேசு கிறிஸ்துவின் பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம். நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப் பட்டது. கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்து மூலமாய் உண்டாயின. இந்தக் கிருபையானது நம் வாழ்க்கையிலே பெரிதான ஆசீர்வாதங்களைத் தரக்கூடியது. இன்று நம்மைச் சூழ்ந்திருக்கிற பலவிதமான பாவங்களை நாம் தள்ளிவிட்டு, இயேசு கிறிஸ்துவை நோக்கி நமக்கு நியமித்த பாதையிலே நாம் பொறுமையோடே ஓடக் கடவோம் என்று எபிரெயர் 12:1ல் பார்க்கிறோம். கிறிஸ்துவின் கிருபை நம்மைச் சூழ்ந்து கொள்ளும்போது, நாம் நிர்மூலமாகாதபடி காக்கப்படுகின்ற மேலான ஆசீர்வாதத்தைப் பெறுகிறோம். 'நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்' என்று புலம்பல் 3:22ல் பார்க்கிறோம். அந்தக் கிருபையானது,நாம் அழிந்து ஒழிந்து போய்விடாதபடி, சத்துருவாகிய பிசாசானவன் நம்மை நாசப்படுத்தி விடாதபடி காக்கக்கூடிய பெரிதான ஒரு வரப்பிரசாதமாய் இருக்கிறது.

வேதத்தில் சவுலுடைய வாழ்க்கையில் கர்த்தருடைய ஆவியானவர் விலகினபோது, சவுலுக்குள் பொல்லாத ஆவி வந்து அவனைக் கலங்கப்பண்ணிக் கொண்டிருந்தது. சவுல் கிருபையை இழந்தபோது, தீங்கின் ஆவி அவனைக் கலங்கப்பண்ணியது. தள்ளி விடப்பட்ட சவுலிலிருந்து கிருபையை விலக்கின தேவன், தாவீதுக்குக் கிருபையை அருளுவேன் என்று சொன்னதைப் பார்க்கிறோம்.

கிறிஸ்துவுக்குப் பிரியமானவர்களே, கர்த்தருடையகிருபையினாலே, அவரைப் பற்றும் விசுவாசத்தினாலே நாம் இரட்சிக்கப்படுகிறோம். கிருபையினால் நிர்மூலமாகாதிருக்கிறோம்; கிருபையினால் தாங்கி நடத்துகிறார்.நாம் கிறிஸ்துவை நம்பும்போது, இந்தக் கிருபை நம்மைச் சூழ்ந்து கொள்ளும்.'

4. கர்த்தரை நம்பும்போது செழிப்படைவோம்

"...கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்." நீதிமொழிகள் 28:25

செழிப்பு என்று சொல்லும்போது, களஞ்சியங்கள் சகலவித வஸ்துக்களையும் கொடுக்கத்தக்கதாய் நிரம்பியிருக்கிற ஒரு வாழ்க்கை ஆகும். ஈசாக்கு விதை விதைத்தபோது, கர்த்தர் ஆசீர்வதித்தபடியினால், நுாறு மடங்கு பலனடைந்து ஆசீர்வதிக்கப் பட்டான். வர வர அவன் சம்பத்து பெருகிற்று. செழிப்பு என்றால் ஆவிக்குரிய வாழ்க்கையிலும் சமாதானம், சந்தோஷம், அமைதி, அன்பின் ஐக்கியம் நிறைந்த நல்வாழ்வு ஆகும். அவரை நம்பும்போது, இந்தப் பெரிதான பாக்கியத்தை அடைகிறோம். கர்த்தருடைய ஆலயத்தில் நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிரகாரங்களில் செழித்திருப்பார்கள் என்ற வார்த்தையின்படி, ஆலயத்திற்குச் சென்று நம் நம்பிக்கையின் தேவனை ஆராதிக்கும்போது, நம்மை நேசித்து, சகலவித நற்காரியங்களினாலும் நம்மை ஆசீர்வதிக்கிறவராய் இருக்கிறார். உலகப்பிரகாரமான செழிப்பும், ஆவிக்குரிய வாழ்க்கையின் செழிப்பும் பெற்றுக்கொள்கிற பாக்கியம் நமக்குள் உண்டாகிறது.

அதிக உற்சாகமாக ஆலய ஆராதனையில் பங்கு பெற்றுக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தை நான் அறிவேன். ஆலய ஆராதனை ஆரம்பிக்கும் முன்பாகவே ஆலயம் வந்து நெடும்முழங்காலில் நின்று ஜெபிக்கும் பண்புடையவராய் இருந்தார். எந்த ஆராதனையையும் தவறாது பங்கு பெற்றவர். அதனால் அவர் கடைநிலை பணியாளராய் இருந்தும், அவருடைய பிள்ளைகள் மிகுதியான மேன்மைகளை அடைந்துள்ளார்கள். இதைப்போல செம்மையானவர்களாய் மாற வேண்டும். செம்மையானவர்களின் கூடாரம் செழிக்கும்.

நாம் கர்த்தருக்குள் நீதிமான்களாக மாறுவதற்கு நம்மை ஒப்புக் கொடுக்கும்போது, பனையைப் போல செழிப்போம். நம்பிக்கையின் நிச்சயத்தினாலும், இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலும் நீதிமான்களாக்கப்படுவதற்கு நம்மை அர்ப்பணிப்போம். செழிப்பான, சிறப்பான வாழ்க்கையைச் சுதந்தரித்துக் கொள்வோமாக.

5. கனிநிறைந்த வாழ்க்கை

"கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்." எரேமியா 17:7

அநேகர் கிறிஸ்துவை நம்புகிறார்கள். ஆனால் பிரச்சனை, போராட்டம் வரும்போது, உலகத்தாரைப் போல பரிகாரிகளையும், தேவன் விரும்பாத வழிகளையும் தேடித்திரிகிறார்கள். எந்த மனிதன் கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து, தன் போராட்டங்களிலே, பிரச்சனைகளிலே பரிகாரிகளையும் உலகத்தாரையும் தேடி, நாடிச் செல்லாதபடி கர்த்தரையே தன் நம்பிக்கையாகக் கொண்டிருக் கிறானோ, அவனது வாழ்க்கை வித்தியாசமான விதத்தில் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படும். அவனது வாழ்க்கை ஒரு செழிப்பான மரத்தைப்போல் மாறுகிறது. அவன் வேர்கள் கால்வாய் ஓரமாய் விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலைப்பச்சையாய் இருக்கிறதும், மழை குறைவுபட்ட காலத்திலும் தப்பாமல் கனிகளைத் தருகிற மரத்தைப்போலிருப்பான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மைக் காண்கிற தேவனாய் இருக்கிறார். இயேசு கிறிஸ்துவுக்குப் பசியுண்டான நேரத்தில் ஒரு அத்திமரத்தைக் கண்டு, அதினிடத்தில் இலைகளேயன்றி, வேறொன்றையும் காணாததால், இனி ஒருக்காலும் கனியில்லா திருக்கக்கடவது என்றார். உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று. கனியற்ற மரம் சபிக்கப்படும். நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். நம்மில் தேவன் எதிர்ப்பார்க்கிற கனி நிறைந்த வாழ்க்கை வேண்டும். நல்ல கனிகளைத் தராது, கசந்த கனிகளைத் தருவோமானால், இம்மட்டும் தேவன் நமக்குச் செய்ததை உணராதிருப்போமானால், பாதுகாவலின் வேலியைப் பிடுங்கிப்போடுவார். கர்த்தர் கிருபையினால் எல்லாருக்கும் பாதுகாவலின் வேலியைக் கொடுத்திருக்கிறார். நம்மைச் சுற்றி, வீட்டைச் சுற்றி, நமக்குண்டானவைகளைச் சுற்றி பாதுகாவலின் வேலியைத் தந்திருக்கிறார். யோபுவின் வாழ்க்கையில் கர்த்தர் பாதுகாவலின் வேலியைத் தந்திருந்தபடியால், பிசாசு அவன் எல்லைகளுக்குள் நுழைந்து சேதப்படுத்தமுடியாதபடி காக்கப் பட்டான். யோபுவின் வாழ்க்கையில் பிசாசு செயல்பட தேவன் அனுமதித்ததினால், எல்லாவற்றையும் இழந்தான். யோபு தன் வாழ்க்கையில் அவர் என்னைக் கொன்று போட்டாலும் அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன் என்று சொன்னபடியால், இழந்தவை களுக்கு மேலாக இரண்டத்தனையாய் அவன் பெற்றுக்கொண்டான். இன்று நம் வாழ்க்கையில் கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரையே நம்பிக்கையாகக் கொள்ளும் போது, ஆவியின் கனிகளினாலே நிறைத்து, சகலவித நற்கனிகளினாலும், உதடுகளின் கனிகளினாலும் நிறைந்து, கிறிஸ்துவுக்குச் சாட்சியாக மாறிவிடுவோம்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

 கிறிஸ்து இயேசுவின் பணியில்,

சகோ. C. எபனேசர் பால்


E- STORE